“பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா” அமைப்பினர் ஆண்டுதோறும், அவ்
அமைப்பு தொடங்கப்பட்ட பிப்ரவரி 17 அன்று நாடெங்கிலும் ‘ஒற்றுமைப் பேரணி’
(யூனிடி மார்ச்) மற்றும் பொதுக்கூட்டத்தை நடத்ததிவருகின்றனர். சீருடை அணிந்த அவ்வமைப்பின் இளைஞர்களும், அமைப்பின் பிற
ஆதரவாளர்களும் தேச ஒற்றுமை சார்ந்த முழக்கங்களை இட்டுக்கொண்டு ஊர்வலமும்
பொதுக்கூட்டமும் நடத்துவது வழக்கம்.
இந்த ஆண்டும் அவ்வாறே ஊர்வலம் மற்றும்
பொதுக்கூட்டத்திற்கு முறையாக அனுமதி பெற்றுத் திரண்டிருந்த நேரத்தில்
பிரச்சினை ஏற்பட்டு, காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் வெள்ளத்துரை
தலைமையில் நின்றிருந்த காவல்துறையினர் கண்ணீர்ப் புகைக் குண்டு வீச்சு
மற்றும் தடியடித் தாக்குதலை நடத்தியதில் இருபதுக்கும் மேற்பட்டோர்
படுகாயங்களுடன் இராமநாதபுரம் மற்றும் மதுரை மருத்துவ மனைகளில்
அனுமதிக்கப்பட்டுள்ள செய்தியை நாளிதழ்களில் கண்ட நாங்கள், கீழ்க்கண்டவாறு
ஒரு உண்மை அறியும் குழுவை அமைத்து அப்பகுதிக்குச் சென்று பலரையும்
சந்தித்தோம்.
1. பேரா.அ.மார்க்ஸ், மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம் (PUHR), சென்னை,
2. ஏ. ஜஹாங்கீர் பாஷா, மூத்த வழக்குரைஞர், மதுரை மாவட்ட நீதிமன்றம்,
3. அ..ராஜா, வழக்குரைஞர், விடுதலைச் சட்ட மையம், மதுரை,
4. ஏ.முகம்மது யூசுப், வழக்குரைஞர், NCHRO, மதுரை,
5. கு.பழனிச்சாமி, சமூக ஆர்வலர், மதுரை,
6. எஸ்.முகம்மது அலி ஜின்னா, வழக்குரைஞர், மதுரை,
7. ரஜினி, வழக்குரைஞர், PUHR, மதுரை,
8. பசுமலை, வழக்குரைஞர், பரமக்குடி,
9. மு.மணிகண்டன், வழக்குரைஞர், மதுரை.
இக்குழுவினர் நேற்று (பிப்ரவரி 18) முழுவதும் மதுரை சரவணா மருத்துவமனை,
இராமநாதபுரம் பயோனீர் மருத்துவமனை ஆகியவற்றில் சிகிச்சை பெற்று வரும் (1)
வழக்குரைஞர்கள் மதுரை நஜிமுதீன், அலாவுதீன், கேமரா மேன் முகம்மது அமானுல்லா
என்கிற ராஜா, யூசுப், பாப்புலர் ஃப்ரன்ட் அமைப்பின் முன்னாள் மாவட்டத்
தலைவர் நஸ்ருதீன், ஓட்டுநர் ஷெரிஃப் என்கிற பிலால், முகம்மது அலிகான்,
சித்திக், வாலிநோக்கம் ரியாஸ்கான், அப்துல் சமது உள்ளிட்ட சுமார் 20
காயம்பட்டோரையும், (2) சம்பவ இடத்தில் இருந்தவர்களான பாபுலர் ஃப்ரன்ட்
அமைப்பின் மாநிலத் தலைவர் இஸ்மாயில், மாவட்ட அளவு நிர்வாகிகளான
பரக்கத்துல்லா, நவாஸ்கான் ஆகியோரையும், (3) மார்க்சிஸ்ட் கட்சியின்
இராமநாதபுரம் மாவட்டக் குழு உறுப்பினர் கலையரசன், குமரய்யா கோவிலருகில் கடை
வைத்துள்ள சிலரையும், (4) இராமநாதபுரம் மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர்
மயில்வாகனன், கூடுதல் கண்காணிப்பாளர் வெள்ளத்துரை ஆகியோரையும் சந்தித்து
விரிவாகப் பேசினோம். இது தொடர்பான வழக்கைக் காரணம் காட்டி கூடுதல்
கண்காணிப்பாளர் வெள்ளத்துரை எங்களிடம் பேச மறுத்தபோதிலும், கண்காணிப்பாளர்
மயில்வாகனன் அவர்கள் எங்களிடம் விரிவாகப் பேசி விளக்கங்களை அளித்தார்.
சம்பவம்:
பாப்புலர் ஃப்ரன்டின் இராமநாதபுரம் மாவட்ட (வடக்கு) தலைவர் எஸ்.
பரக்கத்துல்லா என்பவர் பிப்ரவரி 17 அன்று நடக்கவிருந்த தங்களின் பேரணி
மற்றும் ஊர்வலத்திற்கு காவல்துறை அனுமதி கோரி சென்ற ஜனவரி 17 அன்று
விண்ணப்பித்துள்ளார். கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வெள்ளத்துரை முதலில்
(பிப்ரவரி13) பேருந்து நிலையம் அருகில் உள்ள சந்தைத் திடலில்
பொதுக்கூட்டத்திற்கு மட்டும் அனுமதி அளித்துள்ளார். எனினும் பாப்புலர்
ஃப்ரன்ட் அமைப்பினர் மீண்டும் வேண்டிக் கொண்டபின் பொதுக் கூட்டத்திற்கும்
சின்னக்கடை நான்குமுனை சந்திப்பு தொடங்கி ஊர்வலத்திற்கும் பிப்ரவரி 16
அன்று எழுத்து மூலம் அனுமதி அளித்துள்ளார். இராணுவத்தினர் அணிவது போன்ற
சீருடை மற்றும் லத்தி முதலான ஆயுதங்கள் எதையும் எடுத்துச் செல்லக் கூடாது
என மேற்படி செயல்முறை ஆணையில் குறிப்பிட்டுள்ளதைக் கண்ட பாப்புலர் ஃப்ரன்ட்
அமைப்பினர் தாங்கள் அணிந்து செல்ல இருந்த சீருடையை எடுத்துச் சென்று
அதிகாரிகளிடம் காட்டி அவ்வாறு இல்லை என்பதை நிறுவி காவல்துறையின்
ஒப்புதலைப் பெற்றுள்ளனர். தாங்கள் ஒப்புதல் அளித்ததை கண்காணிப்பாளர்
மயில்வாகனனும் ஏற்றுக் கொண்டார். பான்ட் வாசிக்கக் கூடாது என்றோ,
அணிவகுப்பு நடத்தக்கூடாது என்றோ அந்த ஆணையில் இல்லை என்பது குறிப்பிடத்
தக்கது.
சம்பவத்தன்று (பிப்ரவரி 17) மாலை மூன்று மணி வாக்கில்
மதுரை – இராமநாதபுரம் நெடுஞ்சாலையில் குமரைய்யா கோவில் பேருந்து
நிறுத்தத்திற்கு அருகில் உள்ள பள்ளிவாசல் தொடங்கி சீருடை அணிந்த 300
பாபுலர் ஃப்ரன்ட் அமைப்பினரும், சுமார் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட
ஆதரவாளர்களும் ஊர்வலத்திற்காகக் கூடி இருந்துள்ளனர். கூடுதல்
கண்காணிப்பாளர் வெள்ளத்துரை தலைமையில் சுமார் அறுபது போலீசாரும்
நின்றுள்ளனர். முன் வரிசையில் நின்றிருந்த சீருடையினர் பான்ட் வாசிப்புடன்
ஊர்வலம் தொடங்க இருந்த நேரத்தில், பான்ட் வாசிக்கக் கூடாது எனவும்
அணிவகுப்பாகச் செல்லக் கூடாது எனவும் வெள்ளத்துரை தடுத்துள்ளார்.
சீருடையுடன் அணிவகுத்து நடக்க பான்ட் இசை அவசியமானது என தலைவர்கள் விளக்கிய
பின்னும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. நீண்ட விவாதங்களுக்குப் பின், “சரி
நாங்கள் பான்ட் வாசிப்புடன் தொடங்குகிறோம். நீங்கள் எங்களைக் கைது செய்து
கொள்ளலாம். நாங்கள் அமைதியாகக் கைதாகிறோம்” என தலைவர்கள் சொல்லி
ஊர்வலத்தைத் தொடங்கியபோது கல்வீச்சும், கடுமையான தடியடிப் பிரயோகமும்
நடந்துள்ளது.
சுமார் 22 பேர் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு
உடனடி சிகிச்சை அளிக்க வேண்டிய நிலையில் காயமடைந்தனர். காயம் பட்ட மேலும்
பலர் வழக்குகளைத் தவிர்ப்பதற்காக சொந்தப் பொறுப்பில் சிகிச்சை எடுத்துக்
கொண்டுள்ளனர்.
தொடர்ந்து ஊர்வலமாகச் சென்று பொதுக்கூட்டத்தை நடத்த
முயன்றபோது கண்காணிப்பாளர் மயில்வாகனன், “ஒரு டீம் கையில் பெட்ரோல்
குண்டுகளுடன் நிற்கிறது. பிரச்சினையைத் தவிர்க்க, நீங்கள் எல்லாவற்றையும்
ரத்து செய்யுங்கள்” என அறிவுறுத்தியுள்ளார். “அப்படி ஆயுதங்களுடன் யாரும்
இருந்தால், அவர்களைக் கைது செய்து எங்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதுதானே
முறை?” என பாபுலர் ஃப்ரன்டின் மாநிலத் தலைவர் இஸ்மாயில் சொல்லியும்
காவல்துறையினர் மேற்கொண்டு ஊர்வலம் மற்றும் பொதுக் கூட்டத்திற்கு
அனுமதிக்கவில்லை. மேலும் மோதலையும் பிரச்சினைகளையும் தவிர்க்க வேண்டி
ஊர்வலம், பொதுக்கூட்டம் முதலியவற்றை பாப்புலர் ஃப்ரன்ட் அமைப்பினர்
கைவிட்டுக் கலைந்துள்ளனர்.
இன்று பாப்புலர் ஃப்ரன்ட் அமைப்பினர்
மீது, கேணிக்கரை காவல் நிலையத்தில் குற்ற எண்கள் 67, 68, 69 / 2014 ஆகிய
மூன்று வழக்குகள், இ.த.ச 147, 148, 149, 186, 294 பி, 353, 332, 323, 324,
506/2, 153 ஏ, 307 ஆகிய பிரிவுகளின் கீழ் தொடுக்கப்பட்டுள்ளன.
முரண்கள்
1.கண்காணிப்பாளரும் பிற அதிகாரிகளும் நாளிதழ்களுக்கு அளித்துள்ள
பேட்டிகளில் சீருடை அணியக் கூடாது எனவும் பான்ட் வாசிக்கக் கூடாது எனவும்
தாங்கள் தடுத்ததை ஒட்டியே பிரச்சினை தொடங்கியது எனக் கூறியுள்ளனர். வீடியோ
பதிவு ஒன்றிலும் துணை கண்காணிப்பாளர் பான்ட் வாசித்துச் செல்லக் கூடாது
என்று மட்டுமே கூறுவது பதிவாகியுள்ளது. எனினும் கண்காணிப்பாளர் எங்களிடம்
பேசும்போது, “அதெல்லாம் பிரச்சினை இல்லை. குமரைய்யா கோவில் நிறுத்தம்
அருகில் ஊர்வலம் தொடங்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது, சின்னக்கடை நால் முனை
சந்திப்பிலிருந்துதான் ஊர்வலம் தொடங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அதை மீறி
நெடுஞ்சாலையில ,குமரைய்யா கோவில் நிறுத்தத்தில் கூடி, ஊர்வலத்தைத் தொடங்க
அவர்கள் பிடிவாதம் பண்ணியதே பிரச்சினைகளுக்குக் காரணம்” என்றார். பாப்புலர்
ஃப்ரன்ட் அமைப்பினரிடம் இது குறித்துக் கேட்டபோது, வழங்கப்பட்ட ஆணையில்
அப்படிக் குறிப்பிட்டிருந்தாலும், வாய் மொழியாக குமரைய்யா கோவில்
நிறுத்தத்திற்கு அருகில் உள்ள பள்ளிவாசலில் இருந்தே ஊர்வலம் தொடங்க அனுமதி
அளிக்கப்பட்டது எனக் கூறினர். இதற்கு ஆதாரமாக அவர்கள் காட்டிய ஒரு வீடியோ
பதிவில் கண்காணிப்பாளர் மயில்வாகனன், “குமரைய்யா கோவில் மற்றும்
பள்ளிவாசலிலிருந்து போகலாம் என முந்தாநாள் உங்களுக்குச் சொன்னேன்” என்க்
கூறுவதைக் காட்டினர்.
2. இன்னொன்றும் இங்கே கருதத் தக்கது.
காவல்துறையினர் ஊர்வலம் தொடங்க அனுமதி அளித்த சின்னக்கடை நால்முனைச் சந்து
என்பது முழுக்கவும் முஸ்லிம்கள் வசிக்கும் ஒரு பகுதி, இங்கிருந்து
பொதுக்கூட்டம் நடைபெறும் இடம் சுமார் 300 மீட்டர் தொலைவுதான் இருக்கும்.
இதில் ஊர்வலம் நடத்துவது என்பது அபத்தம் என்பதை விளக்க வேண்டியதில்லை.
தவிரவும் முஸ்லிம்கள் தமது நடவடிக்கைகளைத் தாம் வசிக்கும் பகுதிக்குள்ளையே
வைத்துக்கொள்ள வேண்டும் என்பது பொது வெளிகளை அவர்களுக்கு மறுப்பதாகிறது.
காவல்துறையின் இத்தகைய போக்கு கண்டனத்துக்குரியது.
3. பாபுலர்
ஃப்ரன்ட் தலைவர்களும் காவல் அதிகாரிகளும் விவாதித்துக் கொண்டிருந்த பொழுது
திடீரெனக் கல்வீச்சு தொடங்கியுள்ளது. பேருந்து நிறுத்தத்திற்கு அருகில்
இருந்த அங்குசாமி என்பவரின் கட்டிடத்தில் இருந்தும், எதிர்ப்புறம் இருந்த
நெட் கேஃப் ஒன்றிலிருந்தும் விஷமிகள் சிலரே காவல்துறையினர் மீதும்
கூட்டத்தினர் மீதும் கல்வீசினர் எனவும் இவர்கள் இந்துத்துவ அமைப்புகளைச்
சேர்ந்தவர்கள் எனவும் பாபுலர் ஃப்ரன்டினர் கூறுகின்றனர். காவல்
துறையினரும்கூடத் தங்கள் மீது கல் வீசித் தாக்கினர் எனவும் பாப்புலர்
ஃப்ரன்டினர் கூறுகின்றனர். கல்வீசிய கட்டிடத்திலிருந்து சிவக்குமார்,
சரவணன் என்கிற இருவரைத் தாம் பிடித்துக் காவல்துறையினரிடம்
ஒப்புவித்ததாகவும் கூறினர். அதில் ஒருவர் கையில் காவி வண்ண பட்டை
கட்டியிருந்ததாகவும் கூறினர். ஊர்வலத்திற்காக மக்கள் கூடியிருந்தபோது
பைக்கில் வந்த ஒரு சில இந்துத்துவ சக்திகள் “பாரத் மாதா கி ஜே” என முழக்கம்
எழுப்பிச் சென்றதாகவும் கூறினர். ஆனால் இவற்றை கண்காணிப்பாளர் மயில்வாகனன்
முற்றிலுமாக மறுத்தார். தம்மிடம் கல் வீசியதாக பாபுலர் ஃப்ரன்டினரால்
ஒப்புவிக்கப்பட்டவர்கள் அப்பாவிகள் என்றார். அப்படி யாரும் வெளி அமைப்பினர்
கல்வீசவே இல்லை என்றார். காவல் துறையினரும்கூட ஊர்வலத்தினர் மீது
கல்வீசியது பதிவாகியுள்ளது எனவும், அருகிலிருந்து பார்த்த சிலரும் அதை
உறுதிப்படுத்தினர் எனவும் நாங்கள் கூறியபோது அதை விசாரிப்பதாகச் சொன்ன
கண்காணிப்பாளர் ஊர்வலத்தினர் காவல்துறை மீது கல் வீசியதில் சுமார் ஏழு
காவலர்கள் காயம்பட்டுச் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறினார். வேற்று
அமைப்பினர் கல் வீசியதற்கு ஆதாரங்களைக் காட்டினால் நடவடிக்கை எடுப்பதாகவும்
கூறினார். நாங்கள் சந்தித்த முஸ்லிம்கள் அனைவரும் வேற்று அமைப்பினர்
அந்தக் கட்டிடத்திலிருந்து கல்வீசினர் என்பதை வலியுறுத்தினர்.
எமது பார்வைகள்
1. வழங்கப்பட்ட ஆணையில் நால்முனைச் சந்திப்பிலிருந்தே ஊர்வலம்
தொடங்கவேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாலும், குமரைய்யா கோவில்
நிறுத்தத்திலிருந்தே ஊர்வலம் தொடங்கலாம் என கண்காணிப்பாளர் உட்பட்ட
அதிகாரிகள் வாய்மொழியாக அனுமதி அளித்துள்ளது உறுதியாகிறது. அருளரசு என்கிற
உளவுத்துறை எஸ்.பி ஒருவரும் கடைசி நிமிடம் வரை, “உங்களுக்குப் பிரச்சினை
இல்லை, குமரய்யா கோவில் நிறுத்தம் அருகில் தலைவர்கள் சென்று ஊர்வலத்தைத்
தொடங்குங்கள் யாரும் தடுக்கமாட்டார்கள்” என தொலை பேசியில் உறுதி
அளித்துள்ளார். இப்படி எழுத்தில் ஒன்றாகவும், வாய்மொழியாக வேறொன்றையும்
காவல்துறையினர் கூறி இரட்டை நிலை எடுத்ததே எல்லாப் பிரச்சினைக்கும்
காரணமாகியுள்ளது. பிரச்சினைக்குப் பின் எழுத்து மூலம் சொல்லப்பட்டதை
முன்னிறுத்தி, வாய் மொழியாகக் கொடுத்த அனுமதியை மறுக்கும் நிலையைக்
காவல்துறை இப்போது மேற்கொள்கிறது. சம்பவத்தை ஒட்டி அதிகாரிகள் அளித்த
பேட்டிகளில் ஊர்வலம் தொடங்கும் இடம் குறித்து பிரச்சினை எழுந்ததாக அவர்கள்
கூறவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. தவிரவும் வாய்மொழி அனுமதியை நம்பி,
குமரய்யா கோவில் நிறுத்தத்திலிருந்தே ஊர்வலம் தொடங்குவதாக துண்டறிக்கைகள்,
சுவரொட்டிகள், ஃப்லெக்ஸ் போர்டுகள், உள்ளூர் தொலைக்காட்சிகள் ஆகியவற்றின்
மூலம் கடந்த ஒரு வாரமாக ஊரெங்கும் பிரச்சாரம் செய்யயப்பட்டுள்ளது. இந்தத்
துண்டறிக்கையை வடக்கு மாவட்ட நிர்வாகி பரக்கத்துல்லா கூடுதல்
கண்காணிப்பாளரிடம் நேரிலும் கொடுத்துள்ளார். இதற்கெல்லாம் காவல்துறை எந்த
மறுப்பையும் தெரிவிக்கவில்லை. மூன்று மணி வாக்கில் கூட்டம் அங்கே
கூடியபோதும், இங்கே அனுமதியில்லை எனத் தடுக்கவில்லை. எனினும் இப்போது
அதுதான் காரணம் என்கின்றனர். கண்காணிப்பாளர் மட்டத்தில் உள்ள அதிகாரிகள்
இப்படி நடந்துகொள்வது வருத்ததை அளிக்கிறது.
2. பாப்புலர் ஃப்ரன்ட்
அணியினர் மீதான தாக்குதல் கொடூரமாக நடந்துள்ளது. பலரும் தலையிலும்,
முகத்திலும் தாக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குத் தலையும் உள்ளி மூக்கும்
உடைந்துள்ளன. குறைந்தபட்சம் மூவரின் தோள் பட்டைகள் இறங்கியுள்ளன.
ஒருவருக்குக் கால் உடைந்துள்ளது. நஜிமுதீன், அலாவுதீன், யூசுப் முதலான
வழக்குரைஞர்களும் ராஜா முகம்மது என்கிற கேமராமேனும் கூடத் தாக்குதலுக்கு
உள்ளாகியுள்ளனர். இவர்கள் தீவிர சிகிச்சையில் உள்ளனர். கமிரா
பிடுங்கப்பட்டு காலால் நசுக்கி அழிக்கப்பட்டுள்ளது வழக்குரைஞர்கள் குறி
வைத்துத் தாக்கப்பட்டுள்ளனர். ‘என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்’ எனப் பெயர்
பெற்றுள்ள கூடுதல் கண்காணிப்பாளர் வெள்ளத்துரை, துணைக் கண்காணிப்பாளர்
அண்ணாமலை ஆழ்வார், எஸ்.ஐ கோட்டைசாமி, எஸ்.எஸ்.அய் ஆறுமுகத்தரசன் மற்றும்
நான்கு காவலர்கள் வெறித்தனமாகத் தாக்கியுள்ளனர், இரும்புக் காப்பு
பொறுத்தப்பட்ட லத்தி தவிர, இரும்புக் கம்பிகளும் பயன்படுத்தப்பட்டதாகத்
தாக்கப்பட்டவர்கள் கூறினர். “துலுக்கப் பயல்களே” எனவும் இத்துடன் ஆபாசமான
வார்த்தைகளைச் சேர்த்தும் கூவியவண்ணம் அடித்துள்ளனர். நான் வக்கீல் சார்
எனக் கூறியவர்களிடம், “வக்கீல்னா பெரிய சு…..?” எனக் கூறி அடித்ததை ஒருவர்
கூறிக் கண்கலங்கினார், “பிப்ரவரி 19தாண்டா உங்களுக்குக் கருப்பு தினம்
(வழக்குரைஞர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கப்பட்ட நாள்). இப்ப ரண்டு
நாள் முன்னாடியே மாட்டிக்கிட்டீங்கடா” எனச் சொல்லித் தான் தாக்கப்பட்டதை
மற்றொருவர் கூறினார். கடுமையாகத் தாக்கப்பட்டு, இராமநாதபுரம்
மருத்துவமனையிலிருந்து மதுரை மருத்துவ மனைக்கு மாற்றப்பட்டுள்ள வழக்குரைஞர்
நஜிமுதீன், போலீஸ் பக்ருதீன் மீது வெள்ளத்துரை பொய் வழக்குப் போட்டபோது
அது குறித்துப் புகார் அளித்து நடவடிக்கை மேற்கொண்டவர் என்பதும், அக்பர்
சேட் என்பவர் வெள்ளத்துரை மீது தன்னைத் தாக்கியதாகத் தொடுத்துள்ள வழக்கை
நடத்துபவர் என்பதும் குறிப்பிடத் தக்கது. சிறைலிருந்து விடுதலையாகி
திருமணம் செய்து அமைதியாக வாழத் தொடங்கிய போலீஸ் பக்ருதீன் மீது பொய்
வழக்குப் போட்டு, அவரை இன்றைய நிலைக்குத் தள்ளியதில் வெள்ளத்துரைக்கு
முக்கிய பங்குண்டு என்பது நினைவிற்குரியது.
3.”தற்போது இணக்கமான
சூழ்நிலை” இல்லை என ஆணையில் குறிப்பிடும் காவல்துறையினர், சுமார்
மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர் கூடியிருந்த ஒரு நிகழ்விற்கு வெறும் 60
பேர்கள் கொண்ட காவற் படையை மட்டுமே நிறுத்தியிருந்தது, அவர்களின் கவனக்
குறைவைக் காட்டுகிறது. சுமார் 500 பெண்கள் பங்கேற்ற அப்பேரணிக்குப்
பாதுகாப்பாக அனுப்பப்பட்ட காவலர்களைல் ஒரு பெண் காவலர் கூட இல்லை என்பதும்
குறிப்பிடத்தக்கது. “ஒரு டீம் பெட்ரோல் குண்டுடன்” இருப்பதாகத் தமக்குத்
தகவல் வந்துள்ளதாகக் குறிப்பிட்ட கண்காணிப்பாளர், அப்படியாயின் ஏன் அந்த
‘டீமை’க் கைது செய்து வெடிகுண்டு வழங்குச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை
எடுக்கவில்லை என்பதும் புரியவில்லை.
4.பாப்புலர் ஃப்ரன்ட்
அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்த இந்த ஊர்வலமும் அணிவகுப்பும் தேச ஒற்றுமையை
முன்வைத்தும், தங்கள் அமைப்பு தொடங்கப்பட்ட நாளைக் கொண்டாடவும்
மேற்கொள்ளப்பட்ட ஒன்று. இதற்குப் போய் காவல்துறை ஏன் இத்தகைய கெடுபிடி
காட்டியது என்பது விளங்கவில்லை.
பரிந்துரைகள்
1. எழுத்து
மூலம் ஒன்றைச் சொல்வது, வாய்மொழியாக வேறொன்றைச் சொல்வது, உளவுத்துறை மூலம்
எழுத்து மூலம் கூறப்பட்டதற்கு மாறாக நடக்க ஊக்குவிப்பது என்கிற காவல்துறை
நடவடிக்கைகள் வன்மையாகக் கண்டிக்கத் தக்கன. கண்ணீர்ப்புகை, கடுந் தடியடி,
இருபதுக்கும் மேற்பட்டோர் படுகாயம் எனத் தேசிய அளவில் கவனம் பெற்றுவிட்ட
இச்சம்பவத்திற்கு காவல்துறையின் இந்த இரட்டை நிலையே காரணம். எனவே வீடியோ
பதிவுகள், உளவுத்துறை அதிகாரி அருளரசுவின் தொலைபேசி உரையாடல்,
துண்டறிக்கைகள், பழி வாங்கும் நோக்கில் வழக்குரைஞர்கள் தாக்கப்பட்டது
ஆகியவை பணியில் உள்ள நீதிபதி ஒருவரால் விசாரிக்கப்பட வேண்டும்.
2.
பழிவாங்கும் நோக்கில் வழக்குரைஞரைத் தாக்கிய கூடுதல் கண்காணிப்பாளர்
வெள்ளத்துரை தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டு உரிய சட்டப் பிரிவுகளின்
கீழ் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
3. காவல்துறையினர்
மதத்தைக் குறிப்பிட்டு இழிவாகப் பேசியதை கண்காணிப்பாளரிடம் நாங்கள்
குறிப்பிட்டபோது அவர், தாக்குதல் நடக்கும்போது இப்படியெல்லாம் நடக்க
வாய்ப்புண்டு என்பதுபோல எதிர்வினையாற்றி, எனினும் அதை விசாரிப்பதாகக்
கூறினார். காவல்துறை மத்தியில் உள்ள சார்புத் தன்மையையே இது காட்டுகிறது,
புகழ் பெற்ற மனித உரிமைப் போராளியும் அறிஞருமான மறைந்த பாலகோபால் அவர்கள்
கூறியுள்ளதைப்போல காவல்துறை, நீதித்துறை முதலியன சிறுபான்மையினர் மற்றும்
அடித்தள மக்கள் மீது கடுமையாக நடந்துகொள்வதற்கு அவர்கள் செய்ததாகக்
கருதப்படும் குற்றச்சாட்டுகளின் மீது இத்துறையினர் கொண்டுள்ள வெறுப்பைக்
காட்டிலும் அந்தக் குற்றச்சாட்டுகளுக்கு ஆட்பட்டவர்களின் மீதுள்ள வெறுப்பே
காரணமாகிறது. சச்சார் குழு அறிக்கையில் பரிந்துரைத்திருப்பதைப்போல,
முஸ்லிம்கள் அதிகமுள்ள இராமநாதபுரம், கோவை போன்ற பகுதிகளில் போதிய அளவில்
முஸ்லிம் காவலர்களும், அதிகாரிகளும் நியமிக்கப்பட வேண்டும்.
4.
காவல்துறையினரின் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா இரண்டு லட்சம்
இழப்பீடு வழங்குவதோடு, அவர்களது மருத்துவச் செலவையும் அரசு ஏற்க வேண்டும்.
உடைக்கப்பட்ட காமிராக்களுக்கும் இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.
5.
இந்துத்துவ அமைப்பினர் கலவரத்தைத் தூண்டும் நோக்கில் ஒரு குறிபிட்ட
கட்டிடத்திலிருந்து கல்லெறிந்தனர் என முஸ்லிம்கள் தரப்பில் வைக்கப்படும்
குற்றச்சாட்டை எங்களின் ஒரு நாள் விசாரணையில் உறுதி செய்ய இயலவில்லை.
எனினும் ஒரு சிறுபான்மைச் சமூகத்தினர் மத்தியில் இப்படியான ஒரு ஐயம்
உருவாவது நல்லதல்ல. இந்தக் குற்றச்சாட்டை கவனத்தில் எடுத்துக் கொண்டு உரிய
விசாரணை நடத்தப்பட வேண்டும். ஊர்வலத்தினரால் பிடித்துக் கொடுக்கப்பட்டதாகச்
சொல்லப்படும் இருவரும் இது தொடர்பாக விசாரிக்கப்டுதல் அவசியம்.
6. கிழக்குக் கடற்கரை ஓரப்பகுதிகளில், குறிப்பாக இராமநாதபுரத்தில் மதக்
கலவரம் உருவாகக் கூடிய சூழல் இருப்பது கவலை அளிக்கிறது. இரு சமூக
அமைப்புகளும் இது குறித்துப் பொறுப்பாக நடந்துகொள்வதோடு, பிற அரசியல்
கட்சிகளும் சமூக இணக்கத்தை முதன்மைப்படுத்திச் செயல்பட வேண்டும்.
தொடர்பு :
வழக்குரைஞர் ரஜினி,
பிளாட் எண் 50,
கே.கே. நகர், மதுரை – 20,
செல்: 9443294892, 9444120582
நன்றி..
பேரா.அ. மார்க்ஸ்,
மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக