செவ்வாய், பிப்ரவரி 25, 2014

பெண் என்ஜினீயரை கொன்ற கொலையாளி அடையாளம் தெரிந்தது: எஸ்.எம்.எஸ். காட்டி கொடுத்தது

சிறுசேரி சிப்காட் வளாகத்தில் டி.சி.எஸ். நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த என்ஜினீயர் உமா மகேஸ்வரி கொலை சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். ஐ.டி. நிறுவன பெண் ஊழியர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இச்சம்பவம் குறித்து போலீஸ் டி.ஜி.பி. ராமானுஜம் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

சி.பி.சி.ஐ.டி. போலீஸ் ஐ.ஜி.மஞ்சுநாதா தலைமையிலான சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள் கடந்த 3 நாட்களாக சிறுசேரியில் முகாமிட்டு கொலை நடந்த இடத்தில் தடயங்களை சேகரித்தனர். உமா மகேஸ்வரி கொலை செய்யப்பட்டு கிடந்த இடத்தில், புதர்களுக்கு நடுவில் போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது சிகரெட் துண்டுகள் மதுபாட்டில்கள் மற்றும் தலை முடிகளும் சிதறிக் கிடந்தன. இவற்றை சேகரித்து தடயவியல் சோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்துள்ளனர்.



கடுமையான சவால்களுக்கு மத்தியிலேயே இந்த வழக்கை போலீசார் கையாண்டு வருகிறார்கள். உமா மகேஸ்வரி தனது அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு நடந்து செல்லும் ஒரே ஒரு வீடியோ காட்சியை தவிர வேறு எந்த ஆரம்ப கட்ட தடயங்களும் போலீசிடம் சிக்கவில்லை. இதனால் அவர் யாருடன் சென்றார். அதன் பின்னர் நடந்தது என்ன என்பது எல்லாமே மர்மமாகவே உள்ளது.

எப்போதும் கம்பெனி வாகனத்தில் புறப்பட்டு மேடவாக்கத்தில் தான் தங்கியிருந்த வீட்டுக்கு செல்லும் உமா மகேஸ்வரி கடந்த 13–ந்தேதி (காதலர் தினத்துக்கு முந்தைய நாள்) நண்பர் ஒருவரை பார்க்க வேண்டியுள்ளது என்று கூறிவிட்டு சென்றிருக்கிறார். இதை வைத்து பார்க்கும் போது உமா மகேஸ்வரி தனக்கு நன்கு அறிமுகமானவர்களுடன் தான் சென்றிருக்க வேண்டும் என்று போலீசார் உறுதியாக நம்பினர்.

இதையடுத்து அவரது செல்போன், இ–மெயில் ஆகியவற்றை வைத்து துப்பு துலக்கினர். இது ஓரளவுக்கு போலீசுக்கு கை கொடுத்துள்ளது என்றே கூறலாம்.

கடந்த 10–ந்தேதியில் இருந்து 3 நாட்களும் உமா மகேஸ்வரியின் செல் போனுக்கு வந்த அழைப்புகள், எஸ்.எம்.எஸ்.கள் ஆகியவற்றை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது உமா மகேஸ்வரியின் செல்போனுக்கு அடிக்கடி எஸ்.எம்.எஸ். அனுப்பிய வாலிபர் ஒருவர் சிக்கினார். அவரிடம் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள். கடந்த 3 நாட்களாக செல்போனை வைத்து விசாரணை செய்ததில் இக்கொலைக்கும் அவருக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

எஸ்.எம்.எஸ்.சில் இடம் பெற்றுள்ள வாசகங்களை வைத்து போலீசார் இந்த முடிவுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் கொலையாளிகள் யார் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். சிப்காட் வளாகத்தில் வைத்து உமா மகேஸ்வரி கொலை செய்யப்பட்டிருக்க வாய்ப்பில்லை. அவரை, கொலையாளிகள் கடத்திச் சென்று வேறு எங்காவது வைத்து கொலை செய்து விட்டு உடலை மறைப்பதற்காக புதருக்குள் வீசிச் சென்றிருக்கலாம் என்றே போலீசார் கருதுகிறார்கள்.

எனவே இக்கொலையில் ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் (4 அல்லது 5 பேர்) ஈடுபட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இது தொடர்பாக ஐ.ஜி. மஞ்சுநாதா கூறும் போது, கொலையாளிகளை நெருங்கிவிட்டோம். இன்னும் சில தினங்களில் உமா மகேஸ்வரி கொலையின் குற்றவாளிகள் அனைவரையும் பிடித்து விடுவோம் என்றார்.

மாமல்லபுரத்தில் வடக்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. மஞ்சுநாதா தலைமையில் நடந்த சிறுசேரி சிப்காட் வளாக பாதுகாப்பு பற்றிய அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் 26–க்கும் மேற்பட்ட தகவல் தொழில் நுட்ப நிறுவன பிரதிநிதிகள் கலந்து கொண்டு பாதுகாப்பு குறைபாடுகள் பற்றிய கருத்துக்களை தெரிவித்தனர். இதில் வளாகம் உள்ளே போதிய போலீஸ் பாதுகாப்பு இல்லை என்பது தெரிய வந்தது.

இதையடுத்து சிறுசேரி சாப்ட்வேர் கம்பெனி பாதுகாப்பு கமிட்டியினர் 5 பேர் குழு ஒன்றை அமைத்து போலீசாருடன் இணைந்து ரோந்து பணியில் ஈடுபட்டு பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என ஐ.ஜி. மஞ்சுநாதா உத்தரவிட்டார். இக்கூட்டத்தில் காஞ்சீபுரம் சரக டி.ஐ.ஜி. சத்தியமூர்த்தி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், டி.எஸ்.பி. மோகன் உடனிருந்தனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக