டெல்லியில் கவர்னர் பரிந்துரையை ஏற்று ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த மத்திய மந்திரி சபை முடிவு செய்துள்ளது. இதன் மூலம் கெஜ்ரிவாலின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
டெல்லி சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், காங்கிரஸ் ஆதரவுடன் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சி அரசு அமைத்தது. சட்டசபையில் கடந்த 14–ந் தேதி, முதல்–மந்திரி முதல் அரசு ஊழியர்கள் வரை அனைத்து மட்டத்திலும் ஊழல் புரிவோருக்கு ஆயுள் தண்டனை விதிக்க வகை செய்யும் ஜனலோக்பால் மசோதாவை கொண்டு வந்து நிறைவேற்ற முதல்–மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் முயற்சித்தார். இது தோல்வியில் முடிந்தது.
உடனடியாக அரவிந்த் கெஜ்ரிவால் அரசு பதவி விலகியது. 48 நாள் ஆம் ஆத்மி ஆட்சி முடிவுக்கு வந்தது. பதவி விலகல் கடிதத்தை துணைநிலை கவர்னர் நஜீப் ஜங்கிடம் கெஜ்ரிவால் அரசு அளித்தது. அத்துடன், டெல்லி சட்டசபையை கலைத்து விட்டு தேர்தல் நடத்த வேண்டும் என்ற மந்திரிசபையின் பரிந்துரையையும் அளித்தது.
இந்த ராஜினாமா கடிதத்தை மத்திய அரசுக்கு கவர்னர் நஜீப் ஜங் நேற்று அனுப்பிவைத்தார். அத்துடன் அவர் டெல்லியின் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்த அறிக்கையையும் மத்திய அரசுக்கு அனுப்பினார்.
அதில், சட்டசபையை கலைத்துவிட்டு தேர்தல் நடத்த வேண்டும் என்ற கெஜ்ரிவால் அரசின் பரிந்துரையை கவர்னர் நஜீப் ஜங் நிராகரித்து விட்டார். டெல்லி சட்டசபையை முடக்கிவிட்டு, ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த அவர் பரிந்துரை செய்துள்ளார்.
இதையடுத்து, கவர்னர் நஜீப் ஜங்கின் பரிந்துரையை பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் மத்திய மந்திரிசபை நேற்று அவசரமாக கூடி விவாதித்தது.
இறுதியில், கவர்னர் பரிந்துரையை ஏற்று, டெல்லியில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த ஜனாதிபதிக்கு பரிந்துரைப்பது என மத்திய மந்திரிசபை முடிவு எடுத்தது. இருப்பினும், பாராளுமன்ற தேர்தலுடன் டெல்லி சட்டசபைக்கும் தேர்தல் நடத்தப்படும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
மத்திய மந்திரி சபையின் இந்த முடிவுக்கு பின்னணியில் காங்கிரஸ் செயல்பட்டதாக கூறப்பட்டது. இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஷகில் அகமதுவிடம் கேட்டபோது, ‘‘கவர்னர் எடுக்கும் முடிவை நாங்கள் ஏற்றுக்கொள்வோம் என்று ஏற்கனவே கூறியிருந்தோம். அவருக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் தகவல்கள் கிடைக்கும். எனவே இந்த சூழ்நிலையில் அவர் எடுக்கும் முடிவு தான் சரியாக இருக்கும். முடிவு அவர் கையில் தான் இருக்கிறது’’ என்றார்.
சட்டசபையை கலைக்க வேண்டும் என்ற அரசின் முடிவை கவர்னர் நஜீப் ஜங் நிராகரித்ததை கெஜ்ரிவால் கடுமையாக சாடினார். இதுபற்றி நேற்று அவர் செய்தி சேனல்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
துணைநிலை கவர்னர் என்ன அடிப்படையில் (சட்டசபையை கலைப்பதில்லை என்று) இந்த முடிவை எடுத்தார் என்று கேட்கிறேன். மெஜாரிட்டி அரசின் முடிவின்படி கவர்னர் நடக்க வேண்டும் என்றுதான் அரசியல் சட்டம் கூறுகிறது. எங்களது பல முடிவுகளை கவர்னர் ஏற்கவில்லை. சட்டசபை கூட்டத்தொடரை சபைக்கு வெளியே நடத்த மந்திரிசபை முடிவு எடுத்தது. அதற்கும் அவர் அனுமதி தரவில்லை. பகிரங்கமாகவே அவர் அரசியல் சட்டத்தை ஏற்க மறுக்கிறார். ஏன் என எனக்கு தெரியவில்லை.
பாரதீய ஜனதா கட்சியும் மறுதேர்தலைத்தான் விரும்புகிறது. அப்படி இருக்கும்போது என்ன அடிப்படையில் நஜீப் ஜங் இந்த முடிவை எடுத்தார்? இந்த முடிவு முழுக்க முழுக்க தவறானது. எங்கள் அரசு மைனாரிட்டி அரசு அல்ல. பதவி விலகுவதற்கு முன் சட்டசபையில் பண மசோதாவை நிறைவேற்றினோம். இது எங்களது அரசு மெஜாரிட்டி அரசாக இருந்ததை காட்டுகிறது. காங்கிரஸ் கட்சி தேர்தலை விரும்பவில்லை என்பதால்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், ‘‘காங்கிரசின் தூண்டுதல்பேரில் கவர்னர் செயல்படுகிறாரா?’’ என கேட்டபோது, அதை கெஜ்ரிவால் நிராகரித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக