கூடங்குளத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அணுசக்திக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பு சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் தலைமையில் தொடர் போராட்டம் நடந்தது. தமிழகம் முழுவதும் இந்த போராட்டம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதன் மூலம் பிரபலமான அந்த அமைப்பு தற்போது டெல்லியில் ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்தி ஆட்சியை பிடித்து சாதனை படைத்த ஆம் ஆத்மி கட்சியுடன் கைகோர்த்து பாராளுமன்ற தேர்தலில் குதிக்கிறது
இடிந்தகரையில் போராட்டம் நடந்தபோது உதயகுமாரை அரவிந்த் கெஜ்ரிவால் நேரில் சந்தித்து ஆதரவை தெரிவித்தார். ஆம் ஆத்மியின் மூத்த தலைவர்களில் ஒருவரான பிரசாந்த் பூஷனும் இடிந்தகரை வந்து போராட்டக்குழுவினரை சந்தித்து பேசினார்.
அப்போது அவர்கள் ஆம் ஆத்மியுடன் கூட்டணி அமைக்க 10 கோரிக்கைகளை முன் வைத்தனர். இந்த கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக ஆம் ஆத்மி கட்சியும் உறுதி அளித்துள்ளது. இதையடுத்து அணுசக்திக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பு ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளது.
நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மீனவர்கள் அதிக அளவு வசித்து வருகிறார்கள். இவர்கள் ஓட்டுகளை குறி வைத்து கன்னியாகுமரி தொகுதியில் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் உதயகுமாரும், நெல்லை தொகுதியில் பாதிரியார் ஜேசுராஜூம், தூத்துக்குடியில் அமைப்பின் தலைவர் புஷ்பராயனும் போட்டியிட முடிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து உதயகுமார் கூறியதாவது:–
ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவது கிட்டத்தட்ட முடிவாகி விட்டது. அரவிந்த் கெஜ்ரிவால் தமிழ்நாட்டுக்கு வரும்போது கூட்டணி பற்றி இறுதி முடிவு எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூடங்குளம் அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்க தலைவர் புஷ்பராயன் கூறியதாவது:–
அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தினர் வரப்போகிற பாராளுமன்ற தேர்தலில் எங்களது நிலைப்பாட்டை உறுதிபடுத்தும் வகையில் நெல்லை, குமரி, தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் நாங்களே போட்டியிட வேண்டும் என்று விரும்புகிறார்கள்.
ஆம் ஆத்மி கட்சியுடன் நாங்கள் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று அதன் தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் நாங்கள் ஆம் ஆத்மி கட்சியில் இணைய வேண்டும் என்றால் கட்சிக்கு தமிழ் பெயர் சூட்டுவது உள்பட இலங்கை தமிழர் உரிமைக்கு குரல் கொடுப்பது வரை பல்வேறு கோரிக்கைகள் வைத்துள்ளோம். இது தொடர்பாக எங்களுக்குள் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற நிலை ஏற்பட்டால் ஆம் ஆத்மி சின்னமான துடைப்பம் சின்னத்தில்தான் போட்டியிடுவோம். தேர்தலுக்கு இன்னும் நிறைய கால அவகாசம் உள்ளது. எனவே எங்கள் நிலைபாட்டை இப்போதே அறிவிக்க மாட்டோம். மக்களுடன் கலந்து ஆலோசித்து எங்கள் முடிவை அறிவிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் எவ்வாறு பிரசாரத்தை மேற்கொள்ளலாம் என்பது குறித்தும், தேர்தல் அறிக்கை குறித்தும் அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தினர் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர். பாராளுமன்ற தேர்தலில் அணு உலைக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பு ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக