ஆசிய கோப்பை தொடரின் லீக் போட்டியில் இன்று இந்திய அணி வங்கதேசத்தை எதிர்த்து விளையாடுகிறது. இந்த ஆண்டில் ஒரு வெற்றியை கூட ருசிக்காத இந்திய அணி மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்புமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.
இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 5 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் வங்கதேசத்தில் நடக்கிறது. பதுல்லா மைதானத்தில் இன்று நடக்க உள்ள லீக் போட்டியில் இந்தியா, வங்கதேசத்தை எதிர்கொள்கிறது.
காயம் காரணமாக டோனி விலகியுள்ளதால், இந்திய அணி கேப்டன் பொறுப்பை விராத் கோஹ்லி ஏற்றுள்ளார்.
2013ல் உலக கோப்பையை வென்று சாதித்த இந்திய அணி, அடுத்தடுத்து சோதனைகளை சந்தித்து வருகிறது.
தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் படுதோல்வி அடைந்தது. குறிப்பாக, இந்தாண்டில் இந்திய அணி ஒருநாள் போட்டியில் ஒரு வெற்றியை கூட பெறவில்லை. இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில் விராத் அண்ட் கோ ஆசிய கோப்பை தொடரை சந்திக்கிறது.
மூத்த வீரர்கள் இல்லாமல் முழுக்க முழுக்க இளம் வீரர்களுடன் இந்திய அணி இம்முறை களமிறங்கியுள்ளது. புஜாரா ஒருநாள் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். டோனிக்கு பதிலாக விக்கெட் கீப்பராக தினேஷ் கார்த்திக் களமிறங்குகிறார்.
சமீபகாலமாக மிடில் ஆர்டரில் இந்திய அணி தடுமாறி வருகிறது. அந்த குறைபாட்டை புஜாரா, தினேஷ் கார்த்திக், ரஹானே ஆகியோர் நீக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ரோஹித் சர்மா, தவான், புஜாரா, ரஹானே ஆகியோருக்கு இந்த தொடர் மிக முக்கியமானதாகும்.
கேப்டன் பொறுப்புடன், அணியை தோல்வியிலிருந்து மீட்டு வெற்றிப்பாதைக்கு கொண்டு செல்ல வேண்டுமென்ற மிகப்பெரிய பொறுப்பும் கோஹ்லிக்கு உண்டு. எப்போதுமே இந்திய துணைக்கண்டத்தில் நமது வீரர்கள் சிறப்பாக விளையாடுவார்கள் என்பது பிளஸ் பாயிண்டு. அதனால், ஆசிய கோப்பை தொடரை நமது அணி வெற்றியுடன் துவங்க அதிக வாய்ப்புள்ளது.
வங்கதேச அணியை பொறுத்த வரையில், பல்வேறு சிக்கல்களுடன் சொந்த மண்ணில் களமிறங்குகிறது. நட்சத்திர ஆல்ரவுண்டர் ஷாகிப் ஹசன் 3 போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளார். தமிம் இக்பால் காயம் காரணமாக அணியில் இடம் பெறவில்லை.
தேர்வுக்குழுவின் போது கேப்டன் முஷ்பிகுர் ரஹ்மானிடம் ஆலோசனை கேட்கப்படவில்லை என்பதால் அவர் கடுப்பில் இருக்கிறார். நட்சத்திர பந்து வீச்சாளர் மோர்டசா காயத்துடனே களமிறங்குகிறார். இப்படிப்பட்ட நிறைய மைனஸ் பாயிண்டுகள் இருப்பதால், வங்கதேச அணிக்கு வெற்றி வாய்ப்பு மிக மிக குறைவே. இப்போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது.
இந்தியா: தவான், ரோஹித், கோஹ்லி (கேப்டன்), புஜாரா, ரஹானே, தினேஷ் கார்த்திக், ரவீந்திர ஜடேஜா, பின்னி, அம்பாதி ராயுடு, அஸ்வின், முகமது ஷமி, புவனேஸ்வர் குமார். வங்கதேசம்: அனாமுல் ஹக், சம்சுர் ரஹ்மான், மோமினுல் ஹக், முஹ்பிகுர் ரஹ்மான் (கேப்டன்), இஸ்லாம், நசீர் ஹஸ்சைன், மோர்டசா, காஸி, ரூபெல் ஹஸ்சைன், ஜியர் ரஹ்மான், சன்னி, அப்துர் ரசாக்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக