புதன், பிப்ரவரி 26, 2014

துபாய் ஓபன் டென்னிஸ்: சோம்தேவ் 2வது சுற்றுக்கு முன்னேற்றம்


ஆண்களுக்கான டியூட்டி பிரீ சர்வதேச டென்னிஸ் போட்டி துபாயில் நடந்து வருகிறது. இதன் ஒற்றையர் முதலாவது சுற்றில் 78-ம் நிலை வீரர் இந்தியாவின் சோம்தேவ் தேவ்வர்மன், உலக தரவரிசையில் 5-வது இடம் வகிக்கும் அர்ஜென்டினாவின் ஜூவான் மார்ட்டின் டெல் போட்ரோவுடன் நேற்று பலப்பரீட்சை நடத்தினார். 


இதில் பலம் வாய்ந்த டெல்போட்ரோவின் சவாலுக்கு ஈடுகொடுத்து சோம்தேவ் விளையாடினார். 12-வது கேமில், டெல்போட்ரோவுக்கு மூன்று முறை செட்டை வசப்படுத்துவதற்கான வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அவற்றை எல்லாம் முறியடித்த சோம்தேவ் செட்டை டைபிரேக்கர் வரை கொண்டு சென்று 7-6 (3) என்ற கணக்கில் தனதாக்கி அதிர்ச்சி அளித்தார். இந்த செட் 1 மணி 7 நிமிடங்கள் நடந்தது.


இதன் பின்னர் இடது மணிக்கட்டில் ஏற்பட்ட காயத்துக்கு டெல்போட்ரோ சிகிச்சை எடுத்தார். ஆனால் வலி குறையாததால், ஆட்டத்தை தன்னால் தொடர இயலாது என்று கூறி பாதியிலேயே விலகினார்.

இதையடுத்து சோம்தேவ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. டெல்போட்ரோ 2009-ம் ஆண்டு அமெரிக்க ஓபன் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றவர் ஆவார். சோம்தேவ் தனது வாழ்க்கையில் டாப்-5 வீரர் ஒருவரை சாய்ப்பது இதுவே முதல் முறையாகும். இதற்கு முன்பு அவரது சிறந்த வெற்றியாக குரோஷியாவின் மரிச் சிலிச்சுக்கு (15-ம் நிலை வீரராக இருந்த போது) எதிராக 2009-ம் ஆண்டில் நிகழ்ந்தது.

இரட்டையர் முதலாவது சுற்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா- பாகிஸ்தானின் குரேஷி ஜோடி 6-1, 5-7, 10-8 என்ற செட் கணக்கில் டேவிடென்கோ (ரஷியா)- விக்டர் ஹனேஸ்கு (ருமேனியா) இணையை விரட்டியது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக