செவ்வாய், பிப்ரவரி 25, 2014

ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு ஆயுள் சிறை: உகாண்டாவில் புதிய சட்டம்


கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான உகாண்டாவிலும் ஓரினச் சேர்க்கையாளர்கள் சேர்ந்து வாழ்வதும், திருமணம் செய்து கொள்வதும் கொடும் குற்றமாக கருதப்படுகிறது.
எனினும், இதை தடுத்து நிறுத்தும் எவ்வித வலிமையான சட்டங்களும் அங்கு இல்லாத நிலையே இதுவரை நீடித்து வருகிறது. ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவோருக்கு அதிகபட்சமாக மரண தண்டனை வழங்க வகை செய்யும் சட்டம் கடந்த 2009-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும், சர்வதேச மனித உரிமை ஆர்வலர்களின் எதிர்ப்பையடுத்து அந்த சட்டம் கிடப்பில் போடப்பட்டது.

இந்நிலையில், ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு அதிகபட்சமாக ஆயுள் சிறை தண்டனை வழங்கும் புதிய சட்டத்திற்கு கடந்த ஆண்டு பாராளுமன்றம் ஒப்புதல் அளித்தது. முதல் முறை பிடிபடும் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு 14 ஆண்டு சிறை தண்டனையும், மீண்டும் பிடிபட்டால் ஆயுள் முழுவதும் அவர்களை சிறையில் அடைத்து வைக்கவும் இந்த புதிய சட்டம் வழிவகை செய்தது.



இந்த சட்டத்தின் கீழ் இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சில ஓரினச்சேர்க்கை ஜோடிகள் உகாண்டாவை விட்டு வெளியேறி விட்டனர்.

இந்த சட்டம் மனித உரிமைகளுக்கு எதிரானது என்று கருத்து கூறிய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கடும் கண்டனமும் தெரிவித்திருந்தார்.

‘ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு எதிரான இந்த புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டால், நாங்கள் ஏற்கனவே உகாண்டா அதிபருக்கு தெரிவித்துள்ளவாறு அமெரிக்கா-உகாண்டா ஆகிய நாடுகளுக்கிடையிலான நல்லுறவுக்கு இந்த நடவடிக்கை பாதிப்பை ஏற்படுத்தும்.

உகாண்டாவில் வாழும் ஓரினச்சேர்க்கை பிரியர்களுக்கு இந்த சட்டம் பேராபத்தாக அமைந்துவிடும். மனித உரிமைகளை பாதுகாப்பது தொடர்பான உகாண்டாவின் செயல்பாடுகளுக்கும் இது பின்னடைவை ஏற்படுத்தி விடக்கூடும்’ என ஒபாமா எச்சரித்திருந்தார்.

இதே போன்று, இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்தினால் சர்வதேச பொருளாதார தடையை உகாண்டா சந்திக்க நேரிடும் என ஐ.நா. மனித உரிமை அமைப்பின் உயர் கமிஷனர் நவி பிள்ளை மற்றும் பல மேற்கத்திய நாடுகளும் விடுத்த எச்சரிக்கையை பொருட்படுத்தாத உகாண்டா அதிபர் யோவேரி முசெவேனி இந்த சட்டத்துக்கு ஒப்புதல் அளித்து நேற்று கையொப்பமிட்டார்.

ஆப்பிரிக்க நாட்டு மக்களிடையே ஓரினச்சேர்க்கையை மேற்கத்திய நாடுகள் ஊக்குவித்து வரும் நிலையில் இத்தகைய கடுமையான சட்டம் அவசியமாகிறது. இந்த சட்டம் உடனடியாக அமலுக்கு வருகிறது எனவும் முசெவேனி அறிவித்துள்ளார்.

ரஷ்யா, நைஜீரியா போன்ற சில நாடுகளில் ஓரினச்சேர்க்கைக்கு எதிராக கடுமையான தண்டனை வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக