செவ்வாய், பிப்ரவரி 25, 2014

அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் அதிருப்தி : அம்மா வைத்த ஆப்பு

லோக்சபா தேர்தலில், விருதுநகர் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்ற இலக்குடன், தே.மு.தி.க.,வில் இருந்து, அ.தி.மு.க., பக்கம் தாவிய, அக்கட்சியின் அதிருப்தி, எம்.எல்.ஏ., பாண்டியராஜனுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. அதேபோல், தே.மு.தி.க., அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் மற்ற ஆறு பேரும், அதிருப்தி அடைந்துள்ளனர்.

நிராகரித்து விட்டார்:
விருதுநகர் தொகுதி, தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,வாக இருப்பவர் பாண்டிய ராஜன். இவர், தே.மு.தி.க., சார்பில், விருதுநகர் லோக்சபா தொகுதியில் போட்டியிட, விஜயகாந்தி டம், 'சீட்' கேட்டார். ஆனால், கட்சியில் ஒருவருக்கு, ஒரு பதவிதான் வழங்கப்படும் எனக் கூறி, அவரின் கோரிக்கையை, விஜய காந்த் நிராகரித்து விட்டார். இதையடுத்து, தே.மு.தி.க., அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் வரிசையில், ஏழாவது ஆளாக முதல்வரை சந்தித்து, அ.தி.மு.க., ஆதரவாளராக மாறினார், பாண்டியராஜன். அதுமட்டுமின்றி, தன் காரிலும், அ.தி.மு.க., கொடியை பயன்படுத்தினார். அ.தி.மு.க., கரைவேட்டி அணிந்து, பொது நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார். லோக்சபா தேர்தலில், விருதுநகர் தொகுதியில் போட்டியிட, தனக்கு நிச்சயம், அ.தி.மு.க.,வில், சீட் கிடைக்கும் என, எதிர்பார்த்தார். சீட் கொடுக்கப்பட்டால், தற்போதைய, எம்.எல்.ஏ., பதவியை, ராஜினாமா செய்யவும், தயாராக இருந்தார். அதனால், விருதுநகர் தொகுதியில், மகளிர் குழுக்களை உருவாக்கி, நிதி உதவி அளித்து வந்தார். தன், திருமண நாளை ஒட்டி, சமீபத்தில், முதல்வர் ஜெயலலிதாவை, தன் மனைவியுடன் சந்தித்து வாழ்த்தும் பெற்றார். அப்போது, அ.தி.மு.க., உறுப்பினராக்கும்படி கேட்டு, கடிதம் ஒன்றையும், முதல்வரிடம், பாண்டியராஜன் வழங்கினார்.


லோக்சபா தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடம் இருந்து, அ.தி.மு.க.,வில் விருப்ப மனுக்களை பெற்ற போது, அ.தி.மு.க., தலைமையக நிர்வாகிகளின் ஆலோசனைப்படி, தன் மனைவி பெயரிலும், இரண்டு தொகுதிகளுக்கு, விருப்ப மனுக்களை தாக்கல் செய்தார், பாண்டியராஜன். மேலும், விருதுநகர் தொகுதி வழங்கப்படாத பட்சத்தில், மத்திய சென்னை அல்லது வட சென்னை தொகுதியிலாவது, போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும் கோரினார். இந்நிலையில், முதல்வர் ஜெயலலிதா, நேற்று அறிவித்த வேட்பாளர் பட்டியலில், எந்த தொகுதியிலும் பாண்டியராஜன் பெயர் இடம் பெறவில்லை. அதனால், எம்.பி., சீட் பெறும் நோக்கில், அ.தி.மு.க., ஆதரவாளராக மாறிய பாண்டியராஜனின் முயற்சி வீணாகியுள்ளது.


அதிர்ச்சி:
இது, பாண்டியராஜனுக்கு மட்டு மின்றி, அவருக்கு முன்னதாக, அ.தி.மு.க., ஆதரவாளர்களாக மாறிய, தே.மு.தி.க., அதிருப்தி எம்.எல்.ஏ.,க் கள் ஆறு பேருக்கும், அதிர்ச்சியை அளித்துள்ளது. வரும், 2016ம் ஆண்டு, சட்டசபை தேர்தலில், தங்களுக்கும் இதே நிலைமை ஏற்படுமோ, தொகுதி மக்களின் கோரிக்கை தொடர்பாக, முதல்வரிடம் முன்வைத்த வேண்டு கோள்கள் நிறைவேறுமா அல்லது நிராகரிக்கப்படுமா என்ற கவலையில் ஆழ்ந்து உள்ளனர். மேலும், பாண்டியராஜனைப் போலவே, தே.மு.தி.க., வில் இருந்து வெளியேறிய, பண்ருட்டி ராமச்சந்திரன் மகன், சம்பத்துக்கு, கடலூர் தொகுதியில் போட்டியிட சீட் வழங்கப்படும் என, கூறப்பட்டது. ஆனால், அவருக்கும், சீட் கிடைக்கவில்லை. அதேநேரத்தில், அதிருப்தி எம்.எல்.ஏ.,க்களுக்கு, முதல்வர் ஜெயலலிதா கொடுத்த, 'ஷாக்' தே.மு.தி.க., தலைமைக்கும், நிர்வாகிகளுக்கும், மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக