செவ்வாய், பிப்ரவரி 25, 2014

பாராளுமன்ற தேர்தல்:12 கட்சிகள் தலைவர்கள் இன்று டெல்லியில் முக்கிய ஆலோசனை


பாராளுமன்ற தேர்தல் இன்னும் 2 மாதத்தில் நடைபெற இருப்பதால் அரசியல் கட்சிகள் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன. தேர்தல் தேதி எந்த நேரத்திலும் அறிவிக்கப்பட இருக்கும் சூழ்நிலையில் அரசியல் கட்சிகள் சுறுசுறுப்படைந்துள்ளன. 


தேசிய அளவில் காங்கிரஸ் தலைமையில் ஒரு அணியும், பாரதீய ஜனதா தலைமையில் ஒரு அணியும் தேர்தலை சந்திக்கிறது. ஆம் ஆத்மி கட்சி யாருடனும் கூட்டணி சேராமல் தனியாக நாடு முழுவதும் வேட்பாளர்களை நிறுத்துகிறது. இதற்கிடையே காங்கிரஸ், பாரதீய ஜனதா அணிக்கு மாற்றாக புதிய அணி உருவாக்கப்பட்டுள்ளது. 

இடதுசாரி கட்சிகள், அ.தி.மு.க., பிஜு ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம், மதசார்பற்ற ஜனதா தளம், முலாயம்சிங் யாதவின் சமாஜ்வாடி உள்பட 12 கட்சிகள் இதில் இடம்பெற்றுள்ளன. 12 கட்சி தலைவர்கள் ஏற்கனவே டெல்லியில் 2 கட்டமாக சந்தித்து பேசி ஆலோசனை நடத்தினார்கள். அதில் 12 கட்சிகளும் ஒருங்கிணைந்து பாராளுமன்ற தேர்தலை சந்திப்பது என்றும் அந்தந்த மாநிலங்களுக்கு ஏற்றபடி கூட்டணி அமைத்துக் கொள்வது என்றும் முடிவு செய்யப்பட்டது.

 

இந்த மாற்று அணியின் அடுத்தகட்ட கூட்டம் டெல்லியில் இன்று கூடி ஆலோசனை நடத்துகிறது. கூட்டத்தில் 12 கட்சி தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொள்கிறார்கள். இந்த கூட்டத்தில் மாற்று அணியின் பொதுவான செயல் திட்டங்கள், பிரசார வியூகங்கள் பற்றி முக்கிய முடிவு எடுக்கப்படுகிறது. 

அந்தந்த மாநிலத்தக்கு தக்கவாறு தேர்தல் அறிக்கை வெளியிடுவதுடன் பொதுவான தேர்தல் அறிக்கை வெளியிடுவது பற்றியும் ஆலோசனை நடத்தப்படுகிறது. புதிய அணிக்கு பொதுவான பெயர் சூட்டவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. 

மேலும் இந்த அணிக்கு தலைவர் ஒருவரை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பும் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இன்றைய கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக புதிய அணிக்கு இறுதி வடிவம் கொடுக்கப்பட்டு விடும் என்று தகவல் வெளியாகி உள்ளது. 

பாராளுமன்ற தேர்தல் தொடர்பான கருத்து கணிப்புகளில் பாரதீய ஜனதா கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும். ஆனால் தனித்து ஆட்சி அமைக்க கூடிய மெஜாரிட்டி கிடைக்காது. காங்கிரஸ் 2–வது இடத்துக்கு தள்ளப்படும். எனவே ஆட்சி அமைப்பதில் மாநில கட்சிகளின் பங்கு முக்கியமானதாக இருக்கும் என்று கூறுகின்றன. 

சில நிறுவனங்கள் நடத்திய கருத்து கணிப்பில் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் மாநில கட்சிகள் செல்வாக்கு பெற்று இருப்பதாகவும் மாநில கட்சிகளே அதிக இடங்களில் வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. 

எனவே பாரதீய ஜனதாவுக்கு அடுத்தபடியாக மாநில கட்சிகள் வசம் அதிக எம்.பி.க்கள் இருப்பார்கள் என்று கருத்துக்கணிப்பு கூறுகிறது. இதனால் மாநில கட்சிகளை ஒன்றிணைத்து புதிய தேசிய அளவில் கூட்டணி அமைக்கும் முயற்சி தீவிரம் அடைந்துள்ளது.
  


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக