புதன், பிப்ரவரி 26, 2014

விஜயகாந்த் பேச்சைக் கேட்டு குடிகாரர்களே மயங்கி விட்டார்கள்.. நாஞ்சில் சம்பத்..

குடிப்பதில் என்ன தப்பு என்று விஜயகாந்த் பேசுவதைக் கேட்டு குடிகாரர்களே மயங்கிக் கிடக்கிறார்கள். இவருக்கு சரித்திரமும் தெரியாது, பூகோளமும் தெரியாது.. இதில் கோலாலம்மபூர் போய் என்ன செய்யப் போகிறார் என்று கேட்டுள்ளார் அதிமுக கொள்கை பரப்பு இணைச் செயலாளர் நாஞ்சில் சம்பத். 


விஜயகாந்த் குறித்து அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில்தான் இப்படிப் போட்டுத் தாக்கியுள்ளார். தனது பேட்டியில் விஜயகாந்த்தை மேலும் அவர் கடுமையாக சாடியுள்ளார். சம்பத்தின் பேட்டியிலிருந்து சில பகுதிகள்..

எதிர்க்கட்சிக்கு உரிய எந்த இலக்கணத்தையும் வரம்பையும் தெரிந்துகொள்ளாத பேர்வழியாக விஜயகாந்த் இன்னும் இருப்பது தமிழகத்துக்குத் துரதிஷ்டவசமானது.
தமிழகத்தில் சமீபத்தில் ஏற்காடு இடைத்தேர்தல் நடைபெற்றது. ஆனால், அவர் நின்றது டெல்லியில். உடையில் கிழிந்தது ஓரிடம்; ஆனால், தைப்பது வேறிடமா?
15 லட்சம் தமிழர்கள் வாழும் டெல்லியில் 11 வேட்பாளர்களை நிறுத்தி தொகுதிக்கு நூறு ஓட்டுகூட வாங்க போக்கில்லாத இந்தப் பேர்வழியை நம்புவதற்கு இன்றைக்கு காவியும் தயாராக இல்லை; கதரும் தயாராக இல்லை.
குடித்தால் என்ன தப்பு? என்று கேட்டு அவர் தந்த விளக்கத்தால், குடிகாரர்களே மயங்கிக் கிடக்கிறார்கள்.
தன்னுடைய கட்சி எம்.எல்.ஏ-க்களைக்கூட அடையாளம் தெரியாத, தமிழகத்தின் பூகோளத்தையும் சரித்திரத்தையும் புரிந்துகொள்ள இயலாத, கூட்டணி முடிவெடுக்க கோலாலம்பூர் போன இந்த போலித் தலைவனை இந்தத் தமிழகம் நிராகரிக்கும்.


கேலிப் பொருளாகி விட்டார் விஜயகாந்த்!
      இப்போது எந்த திண்ணைக் காலியாக கிடக்கிறது என்று தேடிக்கொண்டிருக்கும் விஜயகாந்த்தைத் தமிழக மக்கள் ஒரு கேலிப்பொருளாகத்தான் பார்க்கிறார்கள்.
ஊழல் எதிர்ப்பு மாநாடு, உளுந்தூர்பேட்டையில் போட்டுவிட்டு, ஊழலால் இந்த தேசத்தையே சூறையாடிய காங்கிரஸ் கட்சியின் கதவைக் கூச்சமில்லாமல் போய் தட்டுகிறார் என்றால், உள்ளத்துக்கும் உதட்டுக்கும் இட்டு நிரப்ப முடியாத இடைவெளியைக் கொண்டிருக்கிற ஓர் இருட்டு பேர்வழியை இப்போதுதான் தமிழகம் பார்க்கிறது.

சீட்டுக்காக அரசியல் நடத்தாமல் ரேட்டுக்காக அரசியல் நடத்துவது, இப்போது டெல்லியில் வெட்டவெளிச்சமாகிவிட்டது. இவரா ஊழல் குறித்து கீதா உபதேசம் செய்வது?
ஆகவே, உளுந்தூர்பேட்டை மாநாட்டோடு உளுத்துபோன விஜயகாந்த் அரசியல் முடிவுக்கு வந்துவிட்டது. இது ஒரு மண் குதிரை. இதை நம்பி எவனாவது இனி சவாரிக்குத் தயாரானால், அவன் நடக்க தெம்பில்லாதவனாகத்தான் இருக்க முடியும் என்று காட்டமாக பேசியுள்ளார் சம்பத்.
இவர் சில மாதங்களுக்கு முன்பு அதிமுகவில் இணைந்து பிரசாரம் மற்றும் கூட்ட வசதிகளுக்காக இன்னோவா காரை அன்புடன் பெற்றுக் கொண்டார் என்பது நினைவிருக்கலாம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக