உத்தரப்பிரதேசத்தில் உள்ள அசம்கர்க் நகரின் முகமதாபூர் பகுதியில் மத வழிபாட்டு தளத்தில் நடைமேடை கட்டுவது தொடர்பாக இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் பலியானதுடன் மேலும் 18 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த மோதலை தொடர்ந்து நிகழ்த்தப்பட்ட வன்முறையில் அங்குள்ள கடைகள் அடித்து நொறுக்கப்பட்டதுடன், வாகனங்களும் தீவைத்து கொளுத்தப்பட்டன. நேற்று முகமதாபூர் அருகேயுள்ள ரசூல்பூர் கிராம பஞ்சாயத்து தலைவரின் கணவர், மத வழிபாட்டு தளத்தில் நடைமேடை கட்டும் பணியில் ஈடுபட்டபோது மற்றொரு சமூகத்தை சேர்ந்தவர்கள் அதை எதிர்த்ததுடன் அவரை கடுமையாக தாக்கியுள்ளனர்.
இதைத்தொடர்ந்து இரு தரப்பினரும் ஒருவரையொருவர் கற்களை கொண்டு தாக்கிக்கொண்டதாக தெரிவித்த போலீசார், அங்குள்ள கடைவீதியில் நுழைந்து 30க்கும் மேற்பட்ட கடைகளை ஒரு கும்பல் அடித்து நொறுக்கியதுடன் இரண்டு இரு சக்கர வாகனங்களுக்கும் தீ வைத்ததாகவும் தெரிவித்தனர். இந்த வன்முறையால் அசம்கர்ஹ்-வாரணாசி இடையேயான மாநில நெடுஞ்சாலையில் நான்கு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஏராளமான காவல்துறையினர் அங்கு குவிக்கப்பட்டதுடன் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த கலவரத்தினால் விஜய் பிரசாத் யாதவ் என்பவர் உயிரிழந்ததாகவும், படுகாயமடைந்த அசார் என்பவர் வாரணாசி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் கூறியுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக