புதன், பிப்ரவரி 26, 2014

ஆசிய கோப்பை கிரிக்கெட்: வீழ்ந்தது பாகிஸ்தான்


ஐந்து நாடுகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வங்காளதேசத்தில் நடைபெற்று வருகின்றது. இப்போட்டியில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா இருமுறை மோதவேண்டும். லீக் சுற்றில் முதலிரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.


பாதுல்லாவில் இன்று நடைபெற்ற முதலாவது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தானும், இலங்கையும் பலப்பரீட்சை நடத்தின. டாசில் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. இதன்படி இன்னிங்சை தொடங்கிய இலங்கையின் குசால் பெரெரா 14 ரன்களில் ஆட்டமிழந்தார். 



பின்னர் களமிறங்கிய சங்ககாரா திரிமன்னேவுடன் இணைந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். அபாரமாக ஆடி தனது 84வது அரை சதத்தை பூர்த்தி செய்த சங்ககாரா 67 ரன்களில் ஆட்டமிழந்தார். அபாரமாக ஆடிய திரிமன்னே ஒருநாள் போட்டியில் தனது இரண்டாவது சதத்தை பூர்த்தி செய்தார். அவர் 110 பந்துகளில் 102 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் கேப்டன் ஏஞ்சலா மேத்யூசின் அதிரடி ஆட்டத்தால்(55) இலங்கை அணி 50 ஓவர்களில் 296 ரன்கள் குவித்தது.

சவாலான இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தானின் சர்ஜீல் கான் 26 ரன்களும் அஹமத் செஷாத் 28 ரன்களிலும், முகமது ஹபீஸ் 18 ரன்களிலும், மசூத் 17 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் மிஸ்பாவும் உமர் அக்மலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றிப்பாதை நோக்கி அழைத்துச் சென்றனர். ஆனால் எதிர்பாராத விதமாக இந்த ஜோடியை லக்மல் பிரித்தார். 74 ரன்கள் குவித்து உமர் அக்மல் ஆட்டமிழந்தார். இதன் பின்னர் அந்த அணியின் சரிவு ஆரம்பமானது.

அப்ரிடி 4 ரன்னிலும், மிஸ்பா 73 ரன்களிலும் அடுத்து வந்தவர்கள் சொற்ப ரன்களிலும் ஆட்டமிழந்தனர். முடிவில் பாகிஸ்தான் 284 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. கடைசி 34 ரன்களுக்கு அந்த அணி 5 விக்கெட்டுகளை இழந்தது குறிப்பிடத்தக்கது. இதில் 3 விக்கெட்டுகளை மலிங்கா வீழ்த்தினார். இதனால் 12 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றது. 

சிறப்பாக பந்து வீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்திய மலிங்கா ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக