ஞாயிறு, ஜனவரி 22, 2012

மிகவும் வேண்டப்பட்ட நாடு அந்தஸ்தை அளிக்க இந்தியாவிற்கு பாகிஸ்தான் நிபந்தனை !

 இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகத் தடைகள் நீங்கும்போது "மிகவும் வேண்டப்பட்ட நாடு' என்ற அந்தஸ்தை இந்தியாவுக்கு பாகிஸ்தான் அளிக்கும் என்று அந்நாட்டு வர்த்தகத் துறை அமைச்சர் மக்தூம் அமின் ஃபஹிம் தெரிவித்தார்.   இந்தியாவும், பாகிஸ்தானும் ஏற்றுமதி இறக்குமதி செய்யும் சாத்தியமுள்ள பொருள்கள் அடங்கியப் பட்டியலை தயாரித்து வருகின்றன. இதில் வர்த்தகம் செய்ய ஆட்சேபமற்ற 1900 பொருள்களுக்கு இருநாடுகளும் ஒப்புதல் அளித்துள்ளன.   தற்போது வர்த்தகம் செய்யக் கூடாத பொருள்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. அதில் இடம்பெற்றுள்ள பொருள்களை இருநாடுகளும் பரஸ்பரம் வர்த்தகம் செய்யக் கூடாது. அவ்வாறு செய்வது உலக வர்த்தக அமைப்பு (டபிள்யூ.டி.ஒ.) சட்டப்படி குற்றமாகும்.

  இந்தப் பட்டியலில் இருந்து வர்த்தகம் செய்ய முடியாத பொருள்கள் அனைத்தும் நீங்கிய பிறகு மிகவும் வேண்டப்பட்ட நாடு என்ற அந்தஸ்து இந்தியாவுக்கு அளிக்கப்படும். அந்தப் பட்டியல் பாரபட்சமற்ற வர்த்தகத்துக்கு தடையாக உள்ளது. அது வேண்டப்பட்ட அந்தஸ்து அளிக்க தடையாக உள்ளது என்று மக்தூம் தெரிவித்தார்.

  இந்தியாவுடனான தாராளமய வர்த்தக உறவுகள் அரசியல் விவகாரங்களோடு முடிச்சு போடப்படுகிறாதா என்று கேட்டதற்கு, "2004-ல் இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக பேச்சு தொடங்கியது. அந்த வரிசையில்தான் வர்த்தக உறவுகளும் அமைந்துள்ளது' என்று அவர் தெரிவித்தார்.

  மேலும் வர்த்தகம் செய்ய இயலாத பொருள்களின் பட்டியல் அடுத்த மாத இறுதிக்குள் தயாராகிவிடும் என்றார்.

  மக்தூம் தெரிவித்த கருத்து இது தொடர்பான குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்த அந்தஸ்து இந்தியாவுக்கு அளிக்கப்படுவதாக பாகிஸ்தான் செய்தித் துறை அமைச்சர் ஃபிர்தெüஸ் அஷித் அவான் அறிவித்தார். இது பாகிஸ்தானில் மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது.

  இது குறித்து பேசிய பாகிஸ்தான் வர்த்தகச் செயலர் ஜாபர் மெஹ்மூத், "வர்த்தகம் செய்ய இயலாத பொருள்களின் பட்டியல் பாகிஸ்தான் அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். பின்பு கால வரையறையுடன் பகுதி பகுதியாக அதிலுள்ள பொருள்கள் வாபஸ் பெறப்படும். அந்தப் பட்டியலில் உள்ள அனைத்துப் பொருள்களும் வரும் டிசம்பர் மாதத்துக்குள் வாபஸ் பெறப்படும் என்று எதிர்பார்க்கிறோம். எனினும் அது இறுதியான காலவரம்பு அல்ல' என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக