ஞாயிறு, ஜனவரி 22, 2012

இத்தாலி படகு விபத்தில் தப்பியவர்கள் சென்னை வந்தனர் !

இத்தாலி படகு விபத்தில் இருந்து தப்பியவர்கள் சென்னை வந்தனர். பிரம்மாண்டமான கோஸ்டா கன்கார்டியா சொகுசு கப்பலில் 4,550 பேர், சென்றனர். அதில் 3,500 பேர் பயணிகள், 1050 பேர் கப்பல் ஊழியர்கள். இந்தியாவை சேர்ந்த ஊழியர்கள் 202 பேர். கடந்த வெள்ளிக்கிழமை இத்தாலி அருகேயுள்ள டுஸ்கன் தீவை சுற்றிப்பார்க்க சென்றனர். கப்பல் திடீரென ஒரு பாறையில் மோதி கவிழ்ந்தது. அதில் 11 பேர் பலியாயினர். 21 பேரை
காணவில்லை. மற்றவர்கள் மீட்கப்பட்டனர். 

ஒரு இந்தியரை காணவில்லை. மீட்கப்பட்ட 200 பேர் தனித் தனி குழுக் களாக கடந்த 2 நாட்களாக துபாய் வழியாக இந்தியாவுக்கு வந்து கொண்டிருக்கின்றனர்.
தமிழகம், புதுச்சேரியை சேர்ந்த 8 பேர் நேற்று முன்தினம் இரவு 8.30 மணிக்கு விமானம் மூலம் சென்னைக்கு வந்தனர். அவர்கள் விவரம்:

வைத்தியநாதன் (கடலூர்), பிரசன்னா (மகாபலிபுரம்), புவனேஷ் (ஆலந்தூர்), ராஜேஷ் (சேலம்), மனோஜ்குமார், தினேஷ் (மயிலாப்பூர்), கண்ணன் (தேனி), ராம்குமார் (முதலியார்பேட்டை). இவர்களை அரசு சார்பில் மண்டல பாஸ்போர்ட் அலுவலர் செந்தில் பாண்டியன் வரவேற்றார். நேற்று காலை 8.30 மணிக்கு விமானத்தில் மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த ரபேக்கா, சிம்ராய். சுந்தரபாண்டியன் (நெல்லை), ஞானசேகர பிரபு (ராமநாதபுரம்), கருப்பண்ணன் (மதுரை), வெற்றிவேல் (ராஜபாளையம்), மணிகண்டன் (திண்டுக்கல்) ராஜ் பெல்லர் (மதுரை) ஆகிய 8 பேர் வந்தனர். இவர்களை உறவினர்கள் கட்டித் தழுவி, கண்ணீர் மல்க வரவேற்றனர். நேற்று இரவு சென்னைக்கு வந்த விமானத்தில், 6 பேரும் இன்று துபாயில் இருந்து வரும் விமானத்தில் 8 பேரும் வருகின்றனர்.

கப்பல் விபத்தில் உயிர் தப்பி வந்த தமிழக இளைஞர்கள் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களி டம் கூறியதாவது: இந்த கப்பலில் 3,500 பயணிகளுடன் கப்பல் ஊழியர்களாக நாங்கள் உட்பட மொத்தம் 4,550 பேருடன் கடந்த 13ம் தேதி கப்பல் இத்தாலி நாட்டில் உள்ள சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த தீவுக்கு சென்று கொண்டிருந்தது. இரவு 9.30 மணிக்கு கப்பல் பாறை மீது மோதி பயங்கரமாக குலுங்கியது.

ஆனால் கப்பல் கேப்டன் இது சிறிய இயந்திரக் கோளாறுதான் சீக்கிரம் சரியாகிவிடும் என்றார். ஆனால் சிறிது சிறிதாக கப்பல் சாய்ந்து மூழ்கியது.
இரவு 11.30 மணிக்கு பெரும்பகுதி மூழ்கியது இதையடுத்து நாங்கள் கப்பலில் இருந்த உயிர் காக்கும்படகில் ஏறி சுமார் 500 மீட்டர் தூரத்தில் உள்ள ஒரு தீவில் தஞ்சமடைந்தோம். அங்கு இரவு முழுவதும் கடும் குளிரிலும் கும்மிருட்டிலும் தவித்தோம். மறுநாள் காலையில் தான் இத்தாலி அரசு அதிகாரிகள், வந்து எங்களை மீட்டு, அருகில் உள்ள கிராமங்களில் பள்ளி, கிருஸ்தவ தேவாலயங்களில் தங்கவைத்தனர்.

பின்பு எங்களை ரோம் நகருக்கு அழைத்து சென்று ஒரு ஓட்டலில் தங்கவைத்தனர். ஆனால் எங்களது பாஸ்போர்ட், கல்விச்சான்றிதழ், துணிகள் உடமைகள் ஆகியவை அனைத்தும் கப்பலில் மூழ்கிவிட்டன.
கல்விச்சான்றிதழ், பாஸ்போட் ஆகியவைகளுக்கு மாற்று நகல்கள் கிடைக்க உடனடியாக ஏற்பாடு செய்தால் பெரும் உதவியாக இருக்கும். நாங்கள் மறுபிறவி எடுத்துள்ளோம்.

மீண்டும் கப்பல் வேலைக்கு செல்ல விருப்பம் இல்லை. விபத்துக்கு முழு காரணம் கப்பல் கேப்டன் தான். ஆபத்து என்று தெரியவந்ததும் எங்களைப் பற்றி கவலைப்படாமல் உடனடியாக அவர் மட்டும் உயிர் காக்கும் படகில் ஏறி தப்பிச்சென்று விட்டார். இவ்வாறு அவர்கள் கூறினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக