வெள்ளி, செப்டம்பர் 09, 2011

இந்து முன்னணி மாநிலத் தலைவர் ராஜகோபாலன் படுகொலை வழக்கு- 6 பேருக்கு ஆயுள்

நெல்லை: இந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவராக இருந்த பி.ராஜகோபாலன் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேருக்கு ஆயுள் தண்டனையும், ஒருவருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் விதித்து நெல்லை தடா கோர்ட் பரபரப்புத் தீர்ப்பளித்துள்ளது.

மதுரையைச் சேர்ந்தவர் ராஜகோபாலன். இவரது வீடு வடக்கு ஆவணி மூல வீதியில் உள்ளது. 46 வயதாக இருந்த ராஜகோபாலன், கடந்த 1994ம் ஆண்டு அவரது வீட்டில் வைத்து ஒரு கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.

இதையடுத்து திலகர்திடல் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு பின்னர் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

சிபிசிஐடி போலீஸார் தீவிர விசாரணை நடத்தி மதுரையைச் சேர்ந்த சீனி நயினார் முகமது என்பவரைக் கைது செய்தனர். தடா சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டார். பின்னர் அவரிடமிருந்து பெறப்பட்ட வாக்குமூலத்தில் கொலைக்கான காரணம், அதன் பின்னணியில் இருந்தவர்கள் குறித்து பரபரப்புத் தகவல்கள் கிடைத்தன. இந்த நிலையில் வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது.

அதன் பின்னர் ஷாகுல் அமீது, ராஜா உசேன், ஜாகிர் உசேன், அப்துல் அஜீஸ், முகம்மது சுபையா ஆகியோரை சிபிஐ கைது செய்தது.

இந்த வழக்கை விசாரித்த நெல்லை தடா கோர்ட் நேற்று தீர்ப்பை வழங்கியது. இதையடுத்து 6 பேரும் பலத்த பாதுகாப்புடன் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

பின்னர் நீதிபதி விஜயராகவன் தீர்ப்பளித்தார். அதன்பபடி, சீனி நயினா முகமதுவுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், ரூ. 10,000 அபராதமும் விதிக்கப்பட்டது. மற்றவர்களுக்கு ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ. 10,000 அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக