வெள்ளி, செப்டம்பர் 16, 2011

அண்ணா பிறந்தநாளையொட்டி ஆயுள் கைதிகள் விடுதலை இல்லை!


அண்ணா பிறந்தநாளையொட்டி 10 ஆண்டு தண்டனை முடிந்த ஆயுள் கைதிகள் விடுதலை செய்யப்படாததால் அவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் அண்ணா பிறந்தநாளையொட்டி தமிழகம் முழுவதும் சிறைகளில் 10 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை அனுபவித்த ஆயுள் கைதிகள் நன்னடத்தை விதிகளின் அடிப்படையில் விடுதலை செய்யப்படுவார்கள். கடந்த 2008-ம் ஆண்டு அண்ணா நூற்றாண்டு விழாவையொட்டி 7 ஆண்டு தண்டனை முடித்த ஆயுள் கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். மேலும் 60 வயதிற்கு மேற்பட்ட 5 ஆண்டு தண்டனை அனுபவித்தவர்களும் விடுவிக்கப்பட்டனர்.

தமிழகம் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள் விடுதலையானார்கள். பாளை மத்திய சிறையில் இருந்து நெல்லை, தூத்துக்குடி மற்றும் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த 273 பேர் விடுதலையானார்கள். இதில் 7 வருடம் தண்டனை முடித்தவர்கள் 256 பேரும், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 17 பேரும் ஆவர்.

இந்த ஆண்டும் அண்ணா பிறந்தநாளையொட்டி நேற்று (15-ம்தேதி) 10 ஆண்டு தண்டனை முடிந்த ஆயுள் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. இந்திய தவ்ஹீத் ஜமாஅத், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் முதலான அமைப்புகளும் இது தொடர்பாக அரசுக்குக் கோரிக்கைகள் விடுத்திருந்தன.

தமிழகம் முழுவதும் உள்ள சிறைகளில் 10 ஆண்டு தண்டனை முடிந்த கைதிகள் 400 -க்கும் மேற்பட்டோர் உள்ளனர். இவர்களில் பாளை சிறையில் மட்டும் 40 கைதிகள் உள்ளனர். வழக்கமாக கைதிகள் விடுதலை குறித்து நள்ளிரவில் தான் அந்தந்தச் சிறைகளுக்கு தகவல்கள் வரும். இதை எதிர்பார்த்து பலர் காத்திருந்தனர். ஆனால் இந்த ஆண்டு அரசிடமிருந்து எந்த உத்தரவும் வராததால் கைதிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக