வியாழன், செப்டம்பர் 08, 2011

டெல்லி உயர்நீதிமன்றதில் குண்டுவெடிப்பு 12 பேர் பலி 75-க்கும் மேற்பட்டோர் படுகாயம்

imagesCAAPYJGE
டெல்லி:டெல்லி உயர்நீதிமன்ற வாயிலில் சூட்கேஸில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததில் 12 பேர் பலியாயினர். 75க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
டெல்லி உயர்நீதிமன்றத்தின் 5வது நுழைவாயில் அருகே நேற்று காலை 10.15 மணிக்கு பலத்த சப்தத்துடன் குண்டுவெடித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த வக்கீல்களும், கோர்ட்டுக்கு வந்தவர்களும் அங்கிருந்து ஓடினர்.
இதையடுத்து போலீஸாரும், தீயணைப்புப் படையினரும், ஆம்புலன்ஸ்களும், வெடிகுண்டு நிபுணர்களும் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
வெடிகுண்டு சூட்கேஸ் ஒன்றில் குண்டு வைக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. அமோனியம் நைட்ரேட் மற்றும் பிளாஸ்டிக் வெடி மருந்துகள், இரும்புத் துகள்கள் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளன. குண்டு வெடித்த இடத்தில் பெரிய பள்ளமே ஏற்பட்டுவிட்டது.
இந்த சம்பவத்தில் 12 பேர் பலியாகிவிட்டனர். 76க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் ராம் மனோகர் லோகியா மற்றும் சப்தர்ஜங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
இந்த குண்டு வெடிப்பு வழக்கை டெல்லி போலீசாரிடமிருந்து மாற்றி, மத்திய புலனாய்வு அமைப்பான NIA வசம் மத்திய அரசு ஒப்படைத்துள்ளது.
குண்டுவெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து உள்துறை அமைச்சக அதிகாரிகள் டெல்லி காவல்துறையுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து உள்துறை அமைச்சக மூத்த அதிகாரி யு. கே. பன்சால் கூறுகையில், இன்று காலை நீதிமன்றத்திற்குள் செல்வதற்காக நுழைவுச் சீட்டு வாங்க சுமார் 200 பேர் வரிசையாக நின்றிருந்தனர். அப்போது தான் அந்த குண்டு வெடித்துள்ளது. இதில் 4 பேர் பலியாகியுள்ளனர் என்றார்.
இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தையடுத்து டெல்லி உயர் நீதிமன்ற வளாகத்தில் தேசிய பாதுகாப்பு படை கமாண்டோக்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த மே மாதம் 25ம் தேதியும் டெல்லி உயர்நீதிமன்ற வளாகத்தில் சிறிய அளவிலான குண்டுவெடிப்பு நடந்தது நினைவிருக்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக