சனி, செப்டம்பர் 03, 2011

இந்தியக் கப்பலை மிரட்டிய சீன கடற்படைக் கப்பல்!

3-9-11.
வியத்நாம் அரசின் அழைப்பின் பேரில் அந்த நாட்டுத் துறைமுகத்துக்குச் சென்ற ஐ.என்.எஸ். ஐராவதம் என்ற கடற்படைக் கப்பலை சீன நாட்டுக் கடற்படைக் கப்பலொன்று மிரட்டியிருக்கிறது. சீனக் கப்பலின் மிரட்டலுக்கு இந்தியக் கப்பல் அஞ்சி நடுங்கவில்லை என்றாலும் தென் சீனக் கடல் முழுக்க தனக்கே பட்டா போட்டுத் தரப்பட்டுவிட்டதைப் போல சீனா நடந்துகொள்ளும் போக்கை உலக நாடுகள் கண்டிக்கின்றன.
ஜூலை 19 முதல் 22 வரை வியத்நாம் அரசின் அழைப்பின் பேரில் இந்தியக் கடற்படையைச் சேர்ந்த ஐ.என்.எஸ். ஐராவத் என்ற கப்பல் நல்லெண்ணத் தூதுப் பயணமாக தென் சீனக் கடலில் வியத்நாமின் துறைமுகங்களுக்குச் சென்றது.அங்கிருந்து மீண்டும் இந்தியாவுக்குப் புறப்பட்டபோது தென் சீனக் கடலில் இந்தியக் கப்பலுக்கு மிக அருகில் வந்த சீன கடற்படைக் கப்பல், ""யார் நீ, ஏன் இங்கு வந்தாய், உன்னுடைய பெயர் என்ன, எங்களுக்குச் சொந்தமான தென் சீனக் கடலில் எங்களிடம் அனுமதி பெறாமல் எப்படி வந்தாய், இங்கு உனக்கு என்ன வேலை?'' என்றெல்லாம் பலவாறாகக் கேட்டது.வியத்நாமியத் துறைமுகத்துக்கு அந்தக் கப்பல் சென்று திரும்புகிறது என்று தெரிந்தும் சீனா தன்னுடைய ஆதிக்கத்தை நிலைநாட்ட முயன்றது.இந்தியக் கப்பல் தன்னுடைய பாணியில் அதற்குப் பதில் அளித்தது. அதற்குப் பிறகே சீனக் கப்பல் அந்த இடத்தைவிட்டு நகர்ந்தது.தென் சீனக் கடலில் யாரும் ஒரு துரும்பைக்கூட தன்னைக் கேட்காமல் நகர்த்தக்கூடாது என்று சீனா தொடர்ந்து பிடிவாதம் பிடித்து வருகிறது.வியத்நாம் மட்டும் அல்லாது மலேசியா, புரூணை, தைவான் ஆகிய நாடுகளும் சீனாவின் இந்த சட்டாம்பிள்ளைத் தனத்தை அவ்வப்போது கண்டித்து வருகின்றன.இந்த நாடுகளை விட அளவிலும் பொருளாதார வளத்திலும் பெரிய நாடு என்பதால் சீனா தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தப் பார்க்கிறது.இதையே அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டனும் சமீபத்தில் நடந்த கூட்டமொன்றில் கண்டித்துள்ளார்.தென் சீனக் கடலில் தனக்கு இருப்பதாகக் கருதிக்கொண்டுள்ள உரிமையை நிலைநாட்ட தன்னுடைய கடற்படையை வலுப்படுத்தும் வேலையில் சீனா இப்போது களம் இறங்கியிருக்கிறது என்று அமெரிக்க ராணுவத்தின் தலைமையகமான பென்டகன் எச்சரிக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக