புதுடெல்லி: முல்லைப்பெரியாறு அணை பிரச்சினை பற்றி விசாரணை நடத்தி வரும் ஐவர் குழுவிடம் தமிழ்நாடு, கேரளா சார்பில் வெள்ளிக்கிழமை அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன. அணை வலுவாக இருக்கிறது. என்று தமிழ்நாடும், `புதிய அணை கட்டி நீர்பங்கீட்டை சுதந்திரமான குழு நிர்வகிக்கலாம்' என்று கேரளாவும் எதிரெதிராக தங்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளன.
ஐவர் குழு விசாரணை
முல்லைப்பெரியாறு அணை பிரச்சினை பற்றி, சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவின்படி, நீதிபதி ஆனந்த் தலைமையிலான ஐவர் குழு விசாரணை நடத்தி வருகிறது. கடந்த வாரம் நடைபெற்ற விசாரணையின்போது, தமிழ்நாடு, கேரளா மாநிலங்கள் தங்கள் கருத்துக்களை எழுத்து பூர்வமாக தெரிவிக்கும்படி நீதிபதி ஆனந்த் கேட்டு இருந்தார். இதனையடுத்து வெள்ளிக்கிழமை நடந்த கூட்டத்தில் தமிழக அரசு சார்பில், பொதுப்பணித்துறை உயர் அதிகாரி ஆர்.டி.சிங் ஒரு அறிக்கையை தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது,
அணை வலுவாக உள்ளது
முல்லைப்பெரியாறு அணை வலு இழந்து விட்டதாகவும், இதனால் அணை உடைந்து விடும் ஆபத்து இருப்பதாகவும், கேரளா தவறான தகவல்களை கூறி வருகிறது. தற்போதைய அணை, புதிய அணை போன்று பலமாக இருக்கிறது. இந்த அணை உடையக்கூடிய வாய்ப்பு இல்லை. எனவே இதற்கு பதிலாக புதிய அணை கட்ட வேண்டும் என்ற பேச்சுக்கே இடம் இல்லை. மேலும் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தற்போது தமிழ்நாட்டுக்கு வழங்கப்படும் தண்ணீரின் அளவு போதுமானதாக இல்லை. எனவே கூடுதல் தண்ணீர் வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு தமிழக அரசு தனது மனுவில் கூறி இருக்கிறது.
உரிமை கேரளாவுக்கே
ஆனால் புதிய அணை மட்டுமே தீர்வாகும் என்று கேரள அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,
முல்லைப்பெரியாறு அணை பலம் இழந்து விட்டது. எனவே புதிய அணை கட்ட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டு இருக்கிறது. புதிய அணையே இந்த பிரச்சினைக்கு தீர்வாக அமையும். புதிய அணையின் உரிமை கேரளாவிடமே இருக்கும்.
ஆனால் புதிய அணையின் நீர்பங்கீட்டை கேரளா, தமிழ்நாடு, மத்திய அரசு பிரதிநிதிகள் இணைந்த சுதந்திரமான குழு நிர்வகிக்கலாம். இதை கேரளா ஏற்றுக்கொள்கிறது. இவ்வாறு கேரளா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இரு மாநில அறிக்கைகளை பெற்ற நீதிபதி ஆனந்த், அடுத்த கூட்டம் 24, மற்றும் 25-ந்தேதி நடைபெறும் என்று அறிவித்தார். ஐவர் குழு நியமித்த நிபுணர் குழு தனது அறிக்கையை இந்த மாத இறுதிக்குள் ஐவர் குழுவிடம் தாக்கல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பின்னரே ஐவர் குழு தனது அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக