டெல்லி:கோமாவில் இருப்பதாக வழக்கறிஞரால் தெரிவிக்கப்பட்ட முன்னாள் தொலைதொடர்புத்துறை அமைச்சர் சுக்ராம் இன்று நீதிமன்றத்தில் சரணடைந்தார் இதனையடுத்து அவரை திகார் சிறையில் அடைக்க பட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டது. நரசிம்மராவ் ஆட்சி காலத்தில் நடந்த தொலை தொடர்புத் துறை ஊழலில், முன்னாள் மத்திய அமைச்சர் சுக்ராம், தொலை தொடர்புத் துறை முன்னாள் அதிகாரி ருனு கோஷ், ஐதராபாத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ராமராவ் ஆகியோருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தண்டனைக்கு தடை விதிக்கக் கோரி, மூன்று பேரும் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், மூன்று பேரும் உடனடியாக சி.பி.ஐ., சிறப்புக் கோர்ட்டில் சரண் அடைந்து சிறை செல்ல வேண்டும் என, சில தினங்களுக்கு முன் உத்தரவிட்டது. அந்த உத்தரவை ஏற்று ருனுகோஷ் மற்றும் ராமராவ் ஆகியோர் சரண் அடைந்தனர். பின்னர், அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
சுக்ராமுக்கு கோமா
ஆனால், முன்னாள் அமைச்சர் சுக்ராம் சரண் அடையவில்லை. அவருக்கு உடல் நலம் சரியில்லை என, அவரது வழக்கறிஞர் சார்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், மருத்துவமனையிலேயே நீதிமன்றக் காவலில் இருக்க அனுமதி கோரியும் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், சுக்ராம் மனு வெள்ளிக்கிழமை, சி.பி.ஐ., நீதிமன்றம் சிறப்பு நீதிபதி சர்மா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, சுக்ராம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், "மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுக்ராம், தற்போது கோமா நிலையில் உள்ளார். அவரால் மருத்துவனையில் இருந்து நகர முடியாது' என்றார்.
ஆம்புலன்சில் வந்தார்
இதையடுத்து, சுக்ராம் சரணடையாவிட்டால் ஜாமீனில் வெளிவரமுடியாது என்று நீதிபதிகள் எச்சரித்தனர். இந்த நிலையில் சுக்ராம் இன்று ஆம்புலன்சில் வந்து சிபிஐ நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை மூன்றாண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்கவும்,, திகார் சிறையில் அடைக்கவும், பட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக