வெள்ளி, மே 20, 2011

ஜாமீன் மனு தள்ளுபடி:கனிமொழி கைது

kanimoli arrested
புதுடெல்லி:2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் குற்றம் சாட்டப்பட்ட தமிழக முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் மகளும், மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழியும், கலைஞர் டி.வி இயக்குநர் சரத்குமாரும் கைது செய்யப்பட்டனர். டெல்லி சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் அவர்களது ஜாமீன் மனுவை தள்ளுபடிசெய்ததை தொடர்ந்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
சி.பி.ஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஒ.பி.ஸைனி இந்த உத்தரவை பிறப்பித்தார். கைது செய்யப்பட்ட கனிமொழி திஹார் சிறைக்கு கொண்டு செல்லப்படுகிறார். கைது நடவடிக்கை ஏற்கனவே எதிர்பார்த்தது என நீதிமன்ற உத்தரவுக்கு பிறகு கனிமொழி தெரிவித்தார். தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதியின் குடும்பத்தினரால் நடத்தப்பட்டும் கலைஞர் தொலைக்காட்சிக்கு டி.பி ரியாலிட்டி நிறுவனம் வழியாக 214 கோடி ஊழல் பணம் வந்தது நிரூபணமானதை தொடர்ந்து குற்றப்பத்திரிகையில் கனிமொழியின் பெயர் சேர்க்கப்பட்டது.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் கனிமொழிக்கு லஞ்சம் வாங்கியதாக கனிமொழியின் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஊழல் தடுப்புச்சட்டத்தின் 7 மற்றும் 11-வது பிரிவுகளின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. டி.பி ரியாலிட்டியின் ஷாஹித் உஸ்மான் பல்வா வழியாக கலைஞர் தொலைக்காட்சிக்கு பணம் வந்துள்ளது. கனிமொழிக்கு கலைஞர் தொலைக்காட்சியில் 20 சதவீத பங்குகள் உள்ளன.
கனிமொழிக்காக க்ரிமினல் வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி ஆஜரானார். ஆ.ராசா தன்னந்தனியாக 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் சதித்திட்டம் தீட்டியதாக ராம்ஜெத் மலானி நீதிமன்றத்தில் தெரிவித்தார். 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பான இரண்டாவது குற்றப்பத்திரிகையில் கனிமொழியின் பெயர் சேர்க்கப்பட்டது.
நீதிபதி தனது தீர்ப்பை வழங்கியவுடன் கனிமொழி கண் கலங்கினார். தனது கணவர் அரவிந்தன் பக்கம் திரும்பிய அவரது கண்களில் நீர் வழிந்தது. அவருக்கு அரவிந்தன் சமாதானம் கூறினார்.
முன்னதாக இன்று காலை கோர்ட்டுக்கு வருவதற்கு முன்பு ஜாமீன் மனு மீதான தீர்ப்பு பாதகமாக அமையுமா என்று செய்தியாளர்கள் கேட்டதற்குப் பதிலளித்த கனிமொழி, எந்த உத்தரவு வந்தாலும் அதை சந்தித்தாக வேண்டிய நிலையில் நான் உள்ளேன். உத்தரவுக்காக காத்திருக்கிறேன். நான் நன்றாகவே இருக்கிறேன், எந்தப் பதட்டமும் இல்லை என்றார் அவர்.
இந் நிலையில் கனிமொழிக்காக வாதாடிய வழக்கறிஞர் ராம்ஜெத் மலானி கூறுகையில், இந்த விஷயத்தில் கைது நடவடிக்கைகையை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் கனிமொழி மனு தாக்கல் செய்யலாம் என்றார். ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணை நாளை மீண்டும் நடைபெற உள்ளதால் கனிமொழியை நாளை காலை 10 மணிக்கு மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் நீதிபதி சைனி உத்தரவிட்டுள்ளார். இதனால் அவர் நாளை நீதிமன்றம் அழைத்து வரப்படவுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக