வெள்ளி, மே 27, 2011

ஹெட்லியுடன் சிவசேனாவின் ராஜாராமுக்குத் தொடர்பு

மும்பை தாக்குதல் வழக்கில் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ள டேவிட் கோல்மென் ஹெட்லியும் அவனது பாகிஸ்தான் கூட்டாளிகளும் சிவசேனாவைச் சேர்ந்த ராஜராம் ரேகே என்பவருடன் தொடர்பில் இருந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சிவசேனாவின் மக்கள் தொடர்பு அலுவலராகக் கருதப்படும் ராஜாராம் ரேகே மூலம் ஹெட்லி சிவசேனாவுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் ரேகே இதனை மறுத்துள்ளார். தான் சிவசேனாவில் உறுப்பினர் இல்லை என்றும் கணினிப் பொறியாளரான தாம் அவ்வப்போது சமூக நலப் பணிகளும் செய்து வருவதாகக் கூறியுள்ளார். ஆனால் ஹெட்லிக்கு ரேகே அனுப்பியுள்ள மின்னஞ்சல் மூலம் ரேகே அரசியல் பின்னணி உள்ளவர் என்பது தெரிய வருகிறது.

ரேகே ஹெட்லிக்கு அனுப்பியுள்ள மின்னஞ்சலில், அமெரிக்காவைச் சேர்ந்த எவருமோ அல்லது வேறு எந்த நாட்டடைச் சார்ந்தவரோ இந்தியாவில் கூட்டுவணிகம் செய்யவோ முதலீடுகள் செய்யவோ விரும்பினால், அவர்களுக்கு நான் உதவுவேன். சுமார் 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான அரசுத் திட்டங்கள் என்னிடம் உள்ளன. நான் சொல்வது உங்களுக்குப் புரிந்ததா? என்று குறிப்பிட்டுள்ளார். ரேகே இந்த மின்னஞ்சலை 2008 மே 19ஆம் தேதி அனுப்பியுள்ளதாக அமெரிக்க வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.



அரசியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் மும்பை, குஜராத் மற்றும் டில்லியில் உள்ளோருடன் நான் நல்ல தொடர்பில் இருந்து வருகிறேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். மும்பை, குஜராத் மற்றும் டில்லியின் ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்களுடன் மிக நெருக்கமான நேரடித் தொடர்பு வைத்துள்ளேன் என்றும் ரேகே தன்னுடைய மின்னஞ்சலில் கூறியுள்ளார்.

இது குறித்து ரேகேவிடம் கேட்கப்பட்டபோது, நான் ஹெட்லியைச் சந்தித்துள்ளேன். அதனை மறுக்க இயலாது. ஆனால் அவருக்கு நான் ஒருபோதும் உதவியது இல்லை என்று ரேகே கூறியுள்ளார்.

ரேகே மூலம்தான் நான் சிவசேனாவின் தலைமையகமான சேனா பவனுக்குள் சென்றேன் என்று ஹெட்லி புதன் கிழமையன்று வாக்கு மூலம் அளித்துள்ளான். இதனை மறுத்துள்ள ரேகே, நான் சிவசேனாவின் உறுப்பினர் இல்லை. சில சமயம் மக்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்காக சேனாபவனுக்கு நான் செல்வதுண்டு. அவ்வாறு ஒரு நாள் சேனா பவனில் நான் இருந்த போது, விலாஸ் வரக் என்பவர் ஹெட்லியை அழைத்து வந்தார். ஹெட்லி சேனா பவனைச் சுற்றிப் பார்க்க விரும்புகிறார் என விலாஸ் கூறிய போது, இது  சுற்றுலாத் தலம் இல்லை என்பதால் நான் இவருக்கு உதவ முடியாது. அதற்கான அதிகாரமும் எனக்கு இல்லை எனச் சொன்னேன் என்று கூறுகிறார் ரேகே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக