புதன், மே 25, 2011

ஆக்கிரமிக்கப்பட்ட ஜெரூசலத்தை யூதமயப்படுத்தும் இஸ்ரேலியத் திட்டம்!

கடந்த செவ்வாய்க்கிழமை (24.05.2011) காலையில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அதிகார சபை ஊழியர்கள் ஆக்கிரமிக்கப்பட்ட ஜெரூசல நகரத்தின் பாபுல் அமூத் எனப்படும் டமஸ்கஸ் நுழைவாயிலை அடுத்துள்ள பூங்காவில் ஆக்கிரமிப்பு இராணுவத்தின் அனுசரணையுடன் அதிரடியாக நுழைந்து அங்கே நெடிதுயர்ந்து வளர்ந்திருந்த ஒலிவ் மரங்களை புல்டோஸர் மூலம் இடித்துத் தரைமட்டமாக்கினர்.
பழம் பெருமை வாய்ந்த ஜெரூசல நகரெங்கிலும் உள்ள பாரம்பரிய வரலாற்றுச் சின்னங்களைப் பராமரித்தல் எனும் போர்வையிலேயே இந்த அழிப்பு நடவடிக்கையை இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அதிகார சபை மேற்கொண்டுள்ளது.
அதுமட்டுமன்றி, "பழம்பெரும் ஜெரூசல நகரம் தல்மூதிய பாரம்பரியத்துக்கு ஏற்றவகையில் சீர்திருத்தப்படவுள்ளதால், வெகுவில் மேற்படி பூங்கா தல்மூதிய பாணியில் மறுசீரமைக்கப்படும்" என ஸியோனிஸ மாநகர சபை அறிவிப்பு விடுத்துள்ளது.

ஆக்கிரமிக்கப்பட்ட ஜெரூசல நகரை முற்றுமுழுதாக யூதமயப்படுத்தும் இத்தகைய நடவடிக்கைகளால் ஆத்திரமடைந்த ஜெரூசலவாசிகளான பலஸ்தீன் இளைஞர்கள் தமது எதிர்ப்பை வெளிக்காட்டுமுகமாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு இராணுவம் அவர்களை அடக்கியொடுக்க முற்பட்டபோது இரு தரப்பினருக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டது. இதனையடுத்து இரு பலஸ்தீன் இளைஞர்களைக் கைதுசெய்த இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக் காவல்துறையினர் ஸலாஹுத்தீன் தெருவில் உள்ள காவல்நிலையத்துக்கு அவர்களை இழுத்துச் சென்றுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக