வெள்ளி, மே 20, 2011

தேர்தல் தோல்வி:தமிழக பா.ஜ.க தலைவர்களிடையே லடாய் துவங்கியது

CB11_L_K__ADVANI_GQ_546496e
சென்னை:தமிழகவாக்காளர்களால் முற்றிலும் புறக்கணிக்கப்பட்ட பாசிசத்தை தனது கொள்கையாக கொண்ட ஆர்.எஸ்.எஸ்ஸின் அரசியல் முகமூடியான பா.ஜ.கவின் தமிழக தலைவர்களிடையே மோதல் துவங்கியுள்ளது.
நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தேர்தலில் சுப்பிரமணிய சுவாமியின் ஜனதா கட்சி, ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து பா.ஜ.க. 209 தொகுதிகளில் போட்டியிட்டது. பாஜக மட்டும் 194 தொகுதிகளில் போட்டியிட்டது.
ஏற்கனவே தமிழக மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டபோதிலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு தொகுதியிலாவது வெற்றிப்பெறுவோம் என நப்பாசையில் மிதந்தனர் பா.ஜ.கவினர். சுஷ்மா சுவராஜ், குஜராத் முஸ்லிம்களின் நரவேட்டைக்கு தலைமைத்தாங்கிய மோடி உள்ளிட்ட பா.ஜ.கவின் தேசிய தலைவர்களெல்லாம் தமிழகத்தில் பிரச்சாரம் செய்தனர்.
தேர்தல் முடிவுகள் குறித்து எங்களுக்கு எந்தப் பதட்டமும், கலக்கமும் இல்லை. ஆனால் அதிமுகவும், திமுகவும்தான் கலக்கத்தில் உள்ளன என்று பா.ஜ.கவின் மூத்த தலைவர் இல.கணேசன் தம்பட்டம் அடித்திருந்தார்.ஆனால், பெருந்தோல்வியை சந்தித்த தி.மு.க அமைதியாக இருக்கும்பொழுது ஏற்கனவே தோல்வி உறுதியாகிவிட்ட பா.ஜ.க தலைவர்களிடையேதான் மோதல் வெடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

2009 மக்களவைத் தேர்தலில் கன்னியாகுமரி, நாகர்கோவில் தொகுதிகளில் திமுகவைவிட அதிக வாக்குகள் பெற்று பாஜக முதலிடம் பெற்றது. இதனால் நாகர்கோவில் தொகுதியில் போட்டியிட்ட தமிழக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணனுக்கு வெற்றி கிடைக்கும் கனவில் மிதந்தனர் பாசிச பா.ஜ.கவினர்.
ஆனால், தேர்தல் முடிவுகள் பாஜகவினரின் கனவை கானல் நீராக மாற்றிவிட்டது. வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட பொன். ராதாகிருஷ்ணனால் 33,623 வாக்குகள் பெற்று 3-வது இடத்தைதான் பிடிக்க முடிந்தது.
கன்னியாகுமரி, நாகர்கோவில், பத்மநாபபுரம், குளச்சல், கிள்ளியூர், விளவங்கோடு, ராமநாதபுரம், ஓசூர், பட்டுக்கோட்டை உள்ளிட்ட சில தொகுதிகளில் மட்டுமே பாஜக குறிப்பிடத்தக்க வாக்குகளைப் பெற்றது.
1996-ல் பத்மநாபபுரம் தொகுதியில் பல்வேறு கட்சிகள் வாக்குகளை பிரித்ததால் வெற்றி பெற்று பாஜக முதல் முறையாக தமிழக சட்டப் பேரவைக்குள் அடியெடுத்து வைத்தது. 2001-ல் திமுக கூட்டணியில் 4 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றது.
பாஜகவுடன் கூட்டணி வைத்தால் சிறுபான்மையினரின் வாக்குகள் கிடைக்காது என்ற கருத்து காரணமாக 2006 பேரவைத் தேர்தல், 2009 மக்களவைத் தேர்தல், 2011 பேரவைத் தேர்தலில் கூட்டணி அமைக்க எந்தக் கட்சியும் முன்வரவில்லை. இதனால் அக்கட்சியின் தோல்வி தொடர்ந்து வருகிறது.
நடந்து முடிந்த தேர்தலில் ஏற்பட்ட படுதோல்வி தமிழக பாஜகவுக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மாநில துணைத் தலைவரும், தேசிய செயற்குழு உறுப்பினருமான எச். ராஜா, தனது கட்சிப் பதவிகளை ராஜிநாமா செய்துள்ளார். இது தொடர்பாக அவர் மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணனுக்கு நீண்ட கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில் மாநிலத் தலைமையின் செயல்பாடுகளை குறை கூறியிருப்பதாகக் கூறப்படுகிறது. இது குறித்து எச். ராஜாவிடம் கேட்டபோது, மாநிலத் தலைமைக்கு நான் எழுதிய கடிதம் குறித்து யாருக்கும் தெரிவிக்கவில்லை. அப்படியிருக்கும்போது பத்திரிகைகளில் செய்தி வெளியானது எப்படி எனத் தெரியவில்லை. இது தனக்கு அதிர்ச்சியை அளிப்பதாக தெரிவித்தார்.
எதிர்காலம் குறித்த அச்சம்-கட்சி மாறத்திட்டம்
எச். ராஜாவின் கடிதம் தமிழக பாஜக தலைவர்களிடையே மோதல் இருப்பதை வெட்டவெளிச்சமாக்கியிருப்பதாக அக்கட்சியினரே தெரிவிக்கின்றனர். தேர்தல் தோல்வியினால் தங்களது அரசியல் எதிர்காலம் குறித்த அச்சத்தில் இருக்கும் மாநில நிர்வாகிகள் சிலர் கட்சி மாற திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
பாஜகவுடன் கூட்டணி அமைக்க எந்தக் கட்சியும் தயாராக இல்லை. தனித்து போட்டியிட்டால் தோற்கும் கட்சிக்கு எதற்காக வாக்களிக்க வேண்டும் என்பதற்காக பா.ஜ.க. ஆதரவு வாக்காளர்கள்கூட அதிமுக அணிக்கு வாக்களித்து விடுகிறார்கள். இதனால் எங்களின் உழைப்பு வீணாகிறது என்று பாஜக நிர்வாகி ஒருவர் ஆதங்கப்படுகிறாராம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக