புதுடெல்லி:2008-ஆம் ஆண்டில் நடந்த மலேகான் குண்டுவெடிப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஹிந்துத்துவா பயங்கரவாதியான கர்னல் புரோகித் வழக்கிலிருந்து தப்பிக்க அபினவ் பாரத்தில் ஊடுருவ ராணுவம் தன்னை நியமித்ததாக கூறுவதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை என விசாரணையில் தெரியவந்துள்ளது.2008-ஆம் ஆண்டு செப்டம்பர் 29-ஆம் தேதி மலேகானில்
நடந்த குண்டுவெடிப்பு வழக்கில் ராணுவத்தில் கர்னலாக பணியாற்றிய புரோகித்தை அன்றைய மஹராஷ்ட்ரா ஏ.டி.எஸ் தலைவர் மறைந்த ஹேமந்த் கர்கரே கைது செய்தார்.
தீவிரவாத வழக்கில் கைது செய்யப்பட்ட முதல் ராணுவ அதிகாரி புரோகித் ஆவார். புரோகித்தின் கைது மூலம் ஹிந்துத்துவா பயங்கரவாதத்தின் முகம் வெட்ட வெளிச்சமானது.
இந்தியாவில் நடந்த பல்வேறு குண்டுவெடிப்புகளை நடத்திய ஹிந்துத்துவா பயங்கரவாதிகளான சன்யாசினி பிரக்யாசிங் தாக்கூர், தயானந்த் பாண்டே உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
சங்க்பரிவாரின் ஒரு பகுதியாக செயல்படும் அபினவ் பாரத்தின் உறுப்பினர்கள்தாம் மக்கா மஸ்ஜித், டெல்லி ஜும்ஆ மஸ்ஜித், அஜ்மீர், சம்ஜோதா எக்ஸ்பிரஸ், மலேகான் 2006 உள்ளிட்ட குண்டுவெடிப்புகளின் பின்னணியில் செயல்பட்டவர்கள் என்பது தொடர் விசாரணைகளில் தெரியவந்தது.
அபினவ் பாரத்தின் ரகசிய கூட்டங்களில் பங்கேற்றிருந்த புரோகித், ராணுவத்தில் இருந்து 60 கிலோ கிராம் ஆர்.டி.எக்ஸை திருடி அபினவ் பாரத்திடம் ஒப்படைத்துள்ளான். மேலும் வெடிக்குண்டை தயாரிப்பது குறித்து பயிற்சி மற்றும் பொருளாதார உதவியை ஏற்பாடுச் செய்தும் புரோகித் உதவியது கர்கரேயின் விசாரணையில் தெரியவந்தது.
கர்கரே மும்பை தாக்குதலின்போது மர்மமான முறையில் கொலைச் செய்யப்பட்டதைத் தொடர்ந்து விசாரணையின் வேகம் குறைந்தது. இவ்வழக்கில் இருந்து புரோகித்தை தப்பவைக்க திரைமறைவு வேலைகள் நடந்துவந்தன. இந்நிலையில் அபினவ் பாரத்தில் ஊடுருவ மிலிட்டரி இண்டலிஜன்ஸ்(எம்.ஐ) அதிகாரியாக இருந்த தன்னை மேலதிகாரிகள் நியமித்தார்கள் என்று புரோகித் கூறியுள்ளான்.
அபினவ் பாரத்துடன் புரோகித் தொடர்பு கொண்டது ராணுவ சேவைச் சட்டங்களுக்கு எதிரானது என்று புரோகித்திற்கு எதிரான குற்றச்சாட்டுக்களை பரிசோதித்த ராணுவ புலனாய்வுக் குழு கண்டுபிடித்துள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ராணுவ புலனாய்வுக் குழு கண்டுபிடித்தவை மலேகான் வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு ஏஜன்சி நடத்தி வரும் விசாரணையை பாதிக்காது என்று என்.ஐ.ஏ கூறியுள்ளது.
ஹிந்துத்துவா சக்திகளின் பயங்கரவாத நடவடிக்கைகளை கண்காணிக்க ராணுவ நடத்திய ரகசிய ஆபரேசனின் ஒரு பகுதியாக தான் மலேகான், அஜ்மீர், மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்புகளை திட்டமிட்டு நடத்திய அபினவ் பாரத் தலைவர்களுடன் உறவை ஏற்படுத்த முனைந்ததாக கூறும் புரோகித்தின் கூற்றிற்கு பின்புலமாக எவ்வித ஆதாரமும் ராணுவ புலனாய்வுக் குழுவிற்கு கிடைக்கவில்லை.
புரோகித் மேலதிகாரிகளின் எவ்வித உத்தரவையும் பெறாமலேயே இம்முயற்சிகளை மேற்கொண்டதாக என்.ஐ.ஏவின் கூற்றிற்கு பலம்சேர்க்கும் விதமாக ராணுவ புலனாய்வு குழுவின் ஆதாரங்கள் அமைந்துள்ளன.
மத்திய பிரதேச மாநிலம் தியோலாவில் தன்னை ராணுவம் நியமித்ததாக கூறப்படும் வேளையில், ஃபரீதாபாத், இந்தூர், கொல்கத்தா ஆகிய இடங்களில் கூட்டம் நடத்த புரோகித்திற்கு அதிகாரம் இல்லை என்றும், இது கடுமையான சட்டவிதி முறை மீறல் என்றும் ராணுவ புலனாய்வு தெரிவிக்கிறது.
இவ்வழக்கின் இன்னொரு குற்றவாளியான சுவாமி அஸிமானந்தாவிடம், புரோகித் தன்னை எம்.ஐ அதிகாரி என அறிமுகப்படுத்தினார் என்பதை என்.ஐ.ஏ ஏற்கனவே கண்டறிந்தது. அபினவ் பாரத்தில் ரகசியமாக ஊடுருவ நியமிக்கப்பட்டிருந்தால் ஏன் புரோகித் தன்னை எம்.ஐ அதிகாரி என்று அஸிமானந்தாவிடம் அறிமுகப்படுத்த வேண்டும்? இதில் முரண்பாடு உள்ளதாக என்.ஐ.ஏ வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
புரோகித் மீது தொடர் நடவடிக்கைகள் எடுக்கும் முன்பு தரைப்படை தலைமை புலனாய்வு அறிக்கையை அங்கீகரிக்க வேண்டும். புரோகித்தை ராணுவ நீதிமன்றத்தில் விசாரணைச் செய்யவும், ராணுவத்தில் இருந்து நீக்கவும் போதுமான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக