வியாழன், ஜூலை 05, 2012

ஆதர்ஷ் ஊழல்:சவாண் உள்பட 13 பேர் மீது குற்றப்பத்திரிகை !

CBI names ex-CM Chavan in Adarsh scam chargesheetமும்பை:ஆதர்ஷ் ஹவுஸிங் சொஸைட்டி ஊழல் தொடர்பான வழக்கில் மஹராஷ்ட்ரா முன்னாள் முதல்வர் அசோக் சவாண் உள்பட 13 பேர் மீது சி.பி.ஐ குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது.10 ஆயிரம் பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிகை செசன்ஸ் நீதிமன்ற பதிவாளர் முன்பு சமர்ப்பிக்கப்பட்டது. வழக்கு பதிவுச்செய்யப்பட்டு 18 மாதங்களுக்கு பிறகு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுவது
குறிப்பிடத்தக்கது. ஆதர்ஷ் அடுக்குமாடி குடியிருப்பு முறைகேட்டில் குற்றம் சாட்டப்பட்டதால் தனது முதல்வர் பதவியை அசோக் சவாண் இழந்தார்.
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 29-ஆம் தேதி சி.பி.ஐ வழக்கு பதிவுச் செய்தது. இவ்வழக்கில் சவாணைத் தவிர அதிகாரிகள் மற்றும் ஓய்வுப் பெற்ற ராணுவத்தினரும் அடங்குவர்.
ஆதர்ஷ் செகரட்டரி ஆர்.சி.தாக்கூர், ஓய்வுப்பெற்ற பிரிகேடியர் எம்.எம்.வாஞ்சு, முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.சி கனய்யலால் கித்வானி, நகர வளர்ச்சித்துறை முன்னாள் துணைச் செயலாளர் பி.வி.தேஷ்முக், ஐ.ஏ.எஸ் அதிகாரிகளான ராமானந்த் திவாரி, ஜெய்ராஜ் பதக், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல்களான எ.ஆர்.குமார், டி.கே.கவுல், முன்னாள் சிட்டி கலெக்டர் பிரதீப் வியாஸ் ஆகியோரை சி.பி.ஐ கடந்த மார்ச் மாதம் கைது செய்தது. கைது செய்யப்பட்டவர்கள்மீது 60 நாள்களுக்குள் சிபிஐ குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யத் தவறியதையடுத்து அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
இந்திய தண்டனைச் சட்டத்தின்படி குற்றச்சதி செய்தது, ஏமாற்றியது, போலி ஆவணங்களை தயாரித்து அதனையே உண்மையான ஆவணமாகப் பயன்படுத்தியது உள்ளிட்ட குற்றங்கள் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது. இதுக்குறித்து சவாண் கூறுகையில், ‘ஆதர்ஷ் வீட்டு ஒதுக்கீடு நிர்வாகரீதியான நடவடிக்கை. இதில் சிபிஐ விசாரணை துரதிருஷ்ட வசமானது. குற்றப்பத்திரிகையில் எனது பெயர் சேர்க்கப்பட்டது எதிர்பார்க்காதது. அரசியல் எதிரிகள் என் மீது வீண் பழிகளைச் சுமத்தியுள்ளனர்.
ஆதர்ஷ் குடியிருப்புக்கு நிலம் ஒதுக்கியது, குடியிருப்பில் உறுப்பினர்களைச் சேர்த்தது உள்ளிட்ட எதிலும் நான் ஈடுபடவில்லை. நீதித்துறையின் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. நான் குற்றமற்றவன் என்று நிரூபிப்பேன். அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து எனது வழக்குரைஞர்களுடன் ஆலோசித்து முடிவெடுப்பேன்’ என்று சவாண் தெரிவித்தார்.
இதனிடையே, ஆதர்ஷ் அடுக்குமாடி குடியிருப்பு ஊழல் வழக்கில் சேர்த்துக்கொள்ள பொதுநல மனுவை தாக்கல் செய்த மத்திய பாதுகாப்பு அமைச்சகத்திற்கு மும்பை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இவ்வழக்கை சி.பி.ஐ விசாரிக்க முடியாது என்ற மஹராஷ்ட்ரா  அரசின் நிலைப்பாட்டிற்கு இரண்டு வாரத்திற்குள் பதிலளிக்க பாதுகாப்பு அமைச்சகத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆதர்ஷ் நிலம் தங்களுடையது என்றும், எனவே சி.பி.ஐ இவ்வழக்கை விசாரிக்க கூடாது என்பது மஹராஷ்ட்ரா அரசின் நிலைப்பாடாகும். இதற்கு பாதுகாப்பு அமைச்சகத்தின் வழக்குரைஞர் கெவிக் ஸெடல் வாட் எதிர்ப்பு தெரிவித்தார். இவ்வழக்கில் அடுத்த விசாரணை இம்மாதம் 18-ஆம் தேதி நடைபெறும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக