சென்னை: SDPI-யின் துறைமுக தொகுதி தலைவர் அமீர் சுல்தான் போலீசாரின் பொய் வழக்கிலிருந்து நீதிமன்ற தீர்ப்பின் மூலம் 4 மாத சிறைவாசத்திற்கு பிறகு இன்று புழல் சிறைச்சாலையிலிருந்து விடுதலை பெற்றார்.
எஸ்.டி.பி.ஐயின் துறைமுக தொகுதி தலைவராக செயல்பட்டு வந்த அமீர் சுல்தான் கடந்த வருடம் அக்டோபர் 25ம் தேதி நள்ளிரவில் அரசியல் காழ்புணர்ச்சியின் காரணமாக பொய் வழக்கு புணையப்பட்டு கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட இரு நாட்கள் பிறகு அவரை குண்டர் சட்டத்தில் புழல் சிறையில் அடைத்தனர்.
ஐஸ்ஹவுஸ் பகுதியில் அதிமுகவினர் தாக்கப்பட்ட வழக்கில் அமீர் சுல்தான் ஈடுபட்டார் என அவர் மீது பொய்வழக்கு போட்டு கைது செய்தது காவல்துறை. இதனை எதிர்த்து அமீர் சுல்தான் தரப்பிலிருந்து வழக்கறிஞர் அபூதாஹிர் ஆஜரானார். நேற்றைய தினம் இவ்வழக்கினை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் இதனை பொய்வழக்கு என்று கூறி டிஸ்மிஸ் செய்தனர். இதனைத் தொடர்ந்து அமீர் சுல்தான் இன்று விடுதலை செய்யப்பட்டார்.
ம.ம.க தலைவர் ஜாமீனில் விடுதலை
மமக-தமுமுக தலைவரான மவ்லவி ஜே.எஸ்.ரிஃபாயும் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி இன்று ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
கடந்த 1995 ம் ஆண்டு நாகூர் பகுதி இந்து முன்ணனி தலைவர் முத்து கிருஷ்ணனை கொலைச் செய்ய பார்சல் வெடிகுண்டு அனுப்பப்பட்டதாகவும் அதை பிரித்த அவரது மனைவி இறந்ததாகவும் காவல்துறையால் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இக்குண்டுவெடிப்புக்கு அன்றைக்கு இஸ்லாமிய பெண்கள் கல்லூரியின் முதல்வராக இருந்த ஜே.எஸ்.ரிஃபாய்க்கு தொடர்பிருப்பதாக கூறி அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு ஆயுள்தண்டனை வழங்கியது. இதனால் அவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் அவருக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. உயர்நீதிமன்றத்தின் உத்தரவுப்படி ஜாமீனில் இன்று காலை அவர் விடுதலை செய்யப்பட்டார். சிறைக்கு வெளியே நிர்வாகிகள், நகர, கிளை நிர்வாகிகள், தொண்டர்கள் ஆகியோர் அவருக்கு உற்சாக வரவேற்பளித்தார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக