திங்கள், ஏப்ரல் 09, 2012

பா.ஜ., மேலிட பொறுப்பாளர் ரகசிய ஆலோசனை: எடியூரப்பாவுக்கு மீண்டும் முதல்வர் பதவி?


பெங்களூரு:முதல்வர் பதவியில் சதானந்த கவுடா தொடரலாமா அல்லது எடியூரப்பாவை மீண்டும் முதல்வராக்குவதா என, மாநில பா.ஜ., தலைவர்களுடன், கர்நாடக மாநில பா.ஜ., மேலிட பொறுப்பாளர் பிரதான் ரகசிய ஆலோசனை செய்து வருகிறார். கர்நாடகாவில், "முதல்வர் பதவியை மீண்டும் எடியூரப்பாவுக்கு தரவேண்டும்' என, அவரின் ஆதரவாளர்கள் பா.ஜ., மேலிடத்தை வலியுறுத்தி வருகின்றனர்.
எடியூரப்பா, தனக்கு பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள், 70 பேர் ஆதரவு இருப்பதாகக் கூறி வருகிறார்.இந்நிலையில், நேற்று காலை, டில்லியிலிருந்து கர்நாடக மாநில பா.ஜ., மேலிட பொறுப்பாளர் பிரதான், பெங்களூரு வந்தார். அவரது வருகை, பா.ஜ., வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. நேற்று முதல்வர் சதானந்த கவுடா, வெளிமாவட்டங்களில் சுற்றுப்பயணத்தில் இருந்தார்.

ஆலோசனை :இதுகுறித்து பிரதான் கூறுகையில், ""நான் அரசியல் ரீதியாக வரவில்லை. பெங்களூருவில் நடக்கிற ஒரு திருமண விழாவில் கலந்து கொள்ள வந்தேன்,'' என்றார்.

மேலும், மாநில அரசியல் பற்றி கேட்டபோது,""கர்நாடகாவில், முதல்வர் சதானந்த கவுடா நல்ல நிர்வாகம் நடத்தி வருகிறார். முன்னாள் முதல்வர் எடியூரப்பா கட்சி வளர்ச்சிக்கு மிகவும் பாடுபட்டவர்,'' என்றார். ஆனால், நேற்று காலை, மாநில பா.ஜ., அலுவலகத்தில், ஒரு மணி நேரம் எடியூரப்பா ஆதரவு அமைச்சர் ஜெகதீஸ் ஷெட்டருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதுகுறித்து, இருவரும் கருத்து கூற மறுத்து விட்டனர். பிரதான் இன்றும், பெங்களூருவில் தங்குகிறார்.

பிரதானுக்கு உத்தரவா? இன்றைய தினம், முதல்வர் சதானந்த கவுடா, எடியூரப்பா மற்றும் முக்கிய தலைவர்களுடன் ஆலோசனை செய்கிறார். எடியூரப்பா ஆதரவாளர்கள், அவருக்கு முதல்வர் பதவி வழங்க வேண்டும் என கூறி வருவதால், பா.ஜ., மேலிடம் கர்நாடக நிலவரம் குறித்து ஆய்வு நடத்தி, அறிக்கை தாக்கல் செய்யுமாறு, கட்சி மேலிடம் பிரதானுக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது.அறிக்கையின்படி முடிவு 
மாநில பா.ஜ., தலைவர்களின் கருத்துகளை கேட்டு, பிரதான் மேலிடத்துக்கு அறிக்கை தாக்கல் செய்வார் என்றும், அவரது அறிக்கையின்படி, முதல்வர் சதானந்த கவுடாவை தொடர வைப்பதா அல்லது எடியூரப்பாவை மீண்டும் முதல்வராக்குவதா என, மேலிடம் முடிவு செய்யும் என, பா.ஜ., தலைவர்கள் கருத்து தெரிவித்தனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக