சனி, ஏப்ரல் 07, 2012

போஸ்னியா:இனப் படுகொலைக்கு 20 ஆண்டுகள் !

In Sarajevo a red chair was put out for every person killed in the city Dadoஸரயேவோ:சுதந்திரம் பிரகடனப்படுத்தப்பட்டதை தொடர்ந்து போஸ்னிய முஸ்லிம்கள் மீது ஸெர்ப் இனவெறியர்கள் நடத்திய இனப் படுகொலைகள் நிகழ்ந்து 20 ஆண்டுகள் நிறைவுற்றுள்ளன. போஸ்னியா முழுவதும் இனப் படுகொலையை நினைவுகூறும் நிகழ்ச்சிகள் நடந்தேறின. இனப் படுகொலையில் பலியானவர்களை நினைவுக்கூறும் விதமாக 11,541 சிவந்த காலியான நாற்காலிகளை நிரப்பி
இசை கச்சேரி நடத்தி நினைவு நிகழ்ச்சி அதிகாரப்பூர்வமாக துவங்கப்பட்டது. தலைநகரில் தனிமேடையில் இந்நிகழ்ச்சி நடந்தது.
இனப் படுகொலையை துவக்கம் குறித்த போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடந்து இருபது ஆண்டுகள் நிறைவுறும் நிமிடத்தில் இசை நிகழ்ச்சி துவங்கியது.
1992-ஆம் ஆண்டு ஏப்ரல் ஆறாம் தேதி துப்பாக்கிச்சூடு நடந்தது. சுதந்திரம் பிரகடனப்படுத்தப்பட்ட மறு தினம் நடந்த பேரணியில் கலந்துகொண்டோர் மீது யூகோஸ்லாவியா கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் ஸ்லோபோதான் மிலோசெவிச்சின் செர்பிய இன வெறிப்பிடித்த ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியது. பின்னர் நடந்த கூட்டுப் படுகொலையில் குறைந்தது லட்சம் பேர் படுகொலைச் செய்யப்பட்டதாக புள்ளிவிபரம் கூறுகிறது.
44 லட்சம் மக்கள் தொகை கொண்ட போஸ்னிய முஸ்லிம்களில் பாதிபேரும் அகதிகளாக மாறினர். கூட்டுப் படுகொலையில் மிகவும் கொடூரமானதாக கருதப்படும் செர்பனிகா சம்பவம் 1995-ஆம் ஆண்டு நிகழ்ந்தது.
ராட்கோ மிலாடிச்சின் தலைமையிலான செர்பியப் படை ஐ.நா அகதிகள் முகாமிற்கு சென்று பிஞ்சு குழந்தைகள் உள்பட 8 ஆயிரத்திற்கும் அதிகமான நபர்களை கூட்டுப் படுகொலைச் செய்தார். ஐ.நா பாதுகாப்பில் இருந்த நகரமான செர்பனிகா ஹாலந்து ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த பொழுதுதான் கூட்டுப் படுகொலை அரங்கேறியது.
ஸ்லோபோதான் மிலாசெவிச், ராட்கோ மிளாடிச், ராதோவான் கராடிச் ஆகியோர் கூட்டுப் படுகொலைக்கு தலைமை தாங்கினர். மிளாடிச்சும், கராடிச்சும் தற்பொழுது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணையை எதிர்கொள்கின்றார்கள்.
இனப் படுகொலை முடிந்த பிறகு அதன் காயங்கள் இதுவரை ஆறவில்லை. செர்ப், க்ரோட், முஸ்லிம் வம்சாவழியைச் சார்ந்தோருக்கு பெரும்பான்மை கொண்ட 3 குடியரசுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இனப் படுகொலை நிகழ்ந்த காலத்தில் சேதமடைந்த பல கட்டிடங்களும் புனர்நிர்மாணிக்கப்பட்ட போதிலும், அவற்றின் மிச்சமீதிகள் பலவற்றையும் கெளரவத்துடன் பாதுகாத்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக