எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் படித்த ஜிஸ்தி மருத்துவர் ஆனார். கராச்சியில் வைராலஜியில் நிபுணராக ஜிஸ்தி திகழ்ந்தார்.
இந்நிலையில் கடந்த 1992-ஆம் ஆண்டு அஜ்மீருக்கு தனது உறவினர்களை பார்க்க வந்த ஜிஸ்தியின் வாழ்க்கையில் மிகவும் சோகமான திருப்புமுனை ஏற்பட்டது. அப்போது உறவினர்களிடையே நடந்த சொத்து தகராறு கொலையில் முடிந்தது. இந்நிலையில் சம்பவ இடத்தில் இருந்த ஜிஸ்தியும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். விசாரணை நீதிமன்றம் ஜிஸ்திக்கு ஆயுள்தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. இதனைத் தொடர்ந்து ஜிஸ்தி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். ஆனால், உயர்நீதிமன்றமோ பொறுப்பற்ற முறையில் ஜிஸ்தி பாகிஸ்தான் குடிமகன் என்பதால் கருணை காணிக்க தேவையில்லை என்று கூறி தீர்ப்பளித்தது. இவ்வழக்கின் முக்கிய குற்றவாளிக்குகூட ஜாமீன் கிடைத்த போதிலும் ஜிஸ்தி பாக். குடிமகன் என்பதால் ஜாமீன் மறுக்கப்பட்டது.
வழக்கு விசாரணை நீண்டதால் 19 ஆண்டுகளாக பரோல் கூட கிடைக்காத நிலையில் ஜிஸ்தி சிறையில் துயர வாழ்க்கையை அனுபவித்து வந்தார்.
இதய நோய் மற்றும் வயதானதால் ஏற்படும் உடல்நலக் குறைவினால் ஜிஸ்தி சிறையில் படுக்கையில் கிடந்தார். இதனிடையே உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்த மார்க்கண்டேய கட்ஜுவின் தலையீட்டால் பாக். சிறையில் 27 ஆண்டுகளாக அடைக்கப்பட்டிருந்த இந்தியாவைச் சார்ந்த கோபால்தாஸ் விடுதலைச் செய்யப்பட்டார். கோபால்தாஸின் உறவினர்கள் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையில் சட்டரீதியாக இயலாவிட்டாலும் மனிதநேயத்தின் அடிப்படையில் கோபால்தாஸை விடுவிக்ககோரி கட்ஜு பாக்.அதிபர் ஆசிஃப் அலி சர்தாரிக்கு தனிப்பட்ட ரீதியில் கடிதம் எழுதினார்.
இந்திய உளவாளியாக முத்திரை குத்தப்பட்டு பாகிஸ்தான் சிறையில் 27 ஆண்டுகள் அடைக்கப்பட்டிருந்த கோபால் தாஸுக்கு, கட்ஜு அனுப்பிய கடிதத்தை தொடர்ந்து 16 தினங்களில் அவரது விடுதலைக்கான நடைமுறைகளை முடித்தார் சர்தாரி.
கடந்த ஆண்டு மொகாலியில் இந்தியா-பாகிஸ்தான் இடையே நடந்த உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியை காண இந்தியாவுக்கு பாக். பிரதமர் கிலானி வருகை தந்ததையொட்டி கோபால் தாஸ் விடுவிக்கப்பட்டார். ஆனால், கோபால் தாஸின் விடுதலைக்காக தலையிட்ட கட்ஜு கோரிக்கை விடுத்தபோதிலும் இந்திய அரசு வயதான ஜிஸ்தியை விடுவிக்க தயாராகவில்லை.
நோயாளியான ஜிஸ்தி இந்திய சிறையில் மரணித்தால் அது நாட்டிற்கு அவமானம் என்றும், மனிதநேயத்தின் அடிப்படையில் அவரை விடுதலைச்செய்ய வேண்டும் என்றும் கட்ஜு, பிரதமர் மன்மோகனுக்கு கடிதம் எழுதிய போதும் எவ்வித பலனும் ஏற்படவில்லை.
ராஜஸ்தான் ஆளுநருக்கும், அரசுக்கும் கட்ஜு கடிதம் எழுதிய பொழுதும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இதே கோரிக்கையை முன்வைத்து கட்ஜு ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவி சோனியா காந்திக்கும் கடிதம் எழுதினார். அவரும் எவ்வித பதிலையும் தரவில்லை.
இந்நிலையில் ராஜஸ்தான் மாநில மக்கள் சிவில் உரிமைக் கழகமும்(பி.யு.சி.எல்) ஜிஸ்தியின் விடுதலைக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தது. ஜிஸ்தியின் கருணை மனு ராஜஸ்தான் ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. 19 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஜிஸ்தியை அரசியல் சாசனம் மற்றும் சட்டத்தின் அடிப்படையில் மனிதநேயத்தின் காரணமாக விடுதலைச்செய்ய வேண்டும் என்பதே அக்கோரிக்கை. ஜிஸ்தியை விடுதலைச்செய்ய கோரும் மனு உச்சநீதிமன்றத்திலும் உள்ளது.
இந்நிலையில் நேற்று இந்தியாவுக்கு வருகை தந்த பாகிஸ்தான் அதிபர் சர்தாரியும் ஜிஸ்தி விவாகரத்தில் கருணை காட்டுமாறு வலியுறுத்தினார். இது பற்றி கருத்துத் தெரிவித்திருந்த மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், ஜிஸ்தி விவகாரம் உச்சநீதிமன்றத்தில் இருக்கிறது என்றார். இந்நிலையில் ஜிஸ்தியின் மேல்முறையீட்டு மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் ஜிஸ்திக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
மேலும் கராச்சிக்கு திரும்பிச் செல்லுவதற்கான அனுமதி கோரும் மனுவை தனியே தாக்கல் செய்யுமாறும் அதுவரை அஜ்மீரிலேயே இருக்குமாறும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக