சனி, ஜனவரி 21, 2012

முஸ்லிம்கள் தொழும் பள்ளிவாசலில் மனித மலத்தை பூசிய கயவர்கள் !

மசூதி சுவர்மதுரை அருகே கீழமாத்தூர் கிராமத்திலுள்ள ஒரு மசூதியின் சுவற்றில் மலம் பூசப்பட்டு, முஸ்லிம்களைக் கொச்சைப்படுத்தும் வாசகங்கள் எழுதப்பட்டுள்ளதைத் தொடர்ந்து அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மது‍ரையிலுள்ள மேலக்கால் அருகே உள்ளது கீழமாத்தூர் கிராமம். இங்கு தேவர் சமூகத்தைச் சேர்ந்த மறவர்களும், முஸ்லிம்கள் 150 குடும்பங்களும், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த சிலரும் வசித்து வருகின்றனர். இவர்கள் பெரும்பாலும் விவசாயம்
செய்து வருகின்றனர். நெல், வாழை, தென்னை உள்பட பயிர்கள் வைகை ஆற்றின் கரையில் பயிரிடப்பட்டு உள்ளன.
இங்குள்ள முஸ்லிம்கள் தொழுகைக்காக ஒரு மசூதி உள்ளது. இங்கு வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகை உள்பட 5 வேளை தொழுகை நடந்து வருகிறது. இந்த மசூதி சுமார் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. கடந்த சிலதினங்களுக்கு முன்பு அதாவது கடந்த 16 ஆம் தேதி பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதற்காக நடத்தப்பட்ட பட்டிமன்றத்தில் முஸ்லிம்களும், இந்துக்களும் கலந்து கொண்டனர். இதில் சொந்தமா, சொத்தா என்ற தலைப்பில் விவாதம் நடந்தது.
இந்தப் பட்டிமன்றம் நடந்த மறுநாள் இரவு (17.01.2012) சில சமூக விரோதிகள் மசூதியின் வெளிப்புற சுவரில் மனித மலத்தைப் பூசி, அதில் முஸ்லிம்களை கெட்டவார்த்தைகளால் திட்டி எழுதி வைத்துச் சென்றுள்ளனர். அடுத்தநாள் அதிகாலை தொழுகைக்காக முஸ்லிம்கள் மசூதிக்கு வந்தபோது சுவற்றில் கொச்சையாக மனித மலத்தால் எழுதப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து உடனடியாக நாகமலை புதுக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.
இதற்கிடையே நேற்று முன்தினம் இரவு  யாரோ சிலர் மது அருந்திவிட்டு அந்த பாட்டில்களை மசூதி வாசலில் போட்டு உடைத்துள்ளனர். அதனைத் தொடர்ந்து கீழமாத்தூர் முஸ்லிம்களும், ஜமாத்தார்களும் நாகமலை புதுக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். ஆனால் காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாமல், புகாரை பெற்றுக்கொண்டதற்கான ரசீது மட்டு‍‍மே கொடுத்துள்ளனர். ஆனால் காவல்துறை ஆய்வாளர் சம்பவ இடத்துக்கு நேற்று வரை வந்து விசாரணை மேற்கொள்ளவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த முஸ்லிம்கள் நேற்று காலை அந்தப் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதற்கிடையே மதுரை மாவட்ட இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் மதுரை மாவட்ட எஸ்.பி. அஸ்ரா கார்க்கை நேரில் சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்தனர். அதில், "கீழமாத்தூர் மசூதி சுவற்றில் மலத்தால் முஸ்லிம்களை கொச்சைப்படுத்தி எழுதிய சம்பவம் தொடர்பாக நாகமலை புதுக்கோட்டை காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை" என்று புகார் தெரிவித்து இருந்தனர். மேலும், "இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை உடனே கைது செய்ய வேண்டும்" என்றும் அந்த மனுவில் கூறியிருந்தனர்.
சாலை மறியல் மற்றும் முஸ்லிம் அமைப்பின் புகாரை தொடர்ந்து எஸ்.பி. உத்தரவின் பேரில், துணை போலீஸ் சூப்பிரண்டு குமார், ஆய்வாளர் பொம்மைசாமி மற்றும் காவல்துறையினர் கீழமாத்தூர் விரைந்தனர். சம்பவ இடத்தை பார்வையிட்ட அவர்கள் அங்கு பாதுகாப்பு பணிக்காக காவலர்களை 24 மணி நேரமும் கண்காணிக்க உத்தரவிட்டனர்.
ஏற்கனவே, மதுரை காஜிமார் தெருவில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இதேபோல, பன்றி தலையை மசூதியில் வைத்ததோடு மனித கழிவை மசூதி சுவற்றில் பூசியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து மதுரையில் மசூதிகளை அவமதிக்கும் செயல்கள் முஸ்லிம்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது ஏதோ ஒரு திட்டமிட்ட கலவரத்துக்கான சதி வேலைதான் என முஸ்லிம்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே மிகப்பெரிய கலவரம் ஏதும் உருவாகும் முன்பாக சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்க முயற்சி செய்யும் சமூகவிரோதிகள் மீது அரசு கடும் நடவடி்ககை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக