திங்கள், ஜனவரி 09, 2012

நதிகளை இணைத்தால் நீருக்காக யாரிடமும் கையேந்த வேண்டியிருக்காது-கலாம்


Abdul Kalamசென்னை: தமிழ்நாடு முழுவதும் பாயும் வற்றாத ஜீவநதிகளை இணைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குடியரசு முன்னாள் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல்கலாம் வலியுறுத்தியுள்ளார்.
முல்லைப்பெரியாறு அணைப்பிரச்சினையை இருமாநில முதல்வர்களும் பேசி தீர்வுகாணவேண்டும் என்றும் அவர் யோசனை தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்றுவரும் புத்தகக் கண்காட்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழாவில் பங்கேற்ற அப்துல்கலாம் பேசியதாவது,

உழுதவன் கணக்கு

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகப் பேராசிரியர் வடிவேலன் எழுதிய "உழுதவன் கணக்கு', காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் சோமராமசாமி எழுதிய "செயற்கைகோளின் பார்வையில் தமிழக நதிகள்' என்ற இரண்டு நூல்களையும் கடந்த வாரம் வாசித்தேன். துல்லியப் பண்ணைத் திட்டம் மூலம் குறைந்த செலவில் அதிக விளைச்சல் விளைவிப்பது எப்படி? என்பது குறித்து உழுதவன் கணக்கு நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. விவசாயிகளும், தொழில்முனைவோரும் இதுபோன்ற புத்தகங்களை படிப்பது மிகவும் அவசியம்.

செயற்கைகோளின் பார்வையில் தமிழக நதிகள் என்ற நூலில் தமிழக நதிகளின் பிறப்பிடம், அது பிறந்து ஓடும் மலைப்பகுதி, சமவெளிப்பகுதி உள்ளிட்டவை குறித்தும், நதிகள் ஓடுவதால் நிலத்தின் மேற்பரப்பு, பூமிக்குள் வரும் மாற்றங்கள் குறித்தும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

நதிகளை இணைக்க வேண்டும்

தமிழகத்தில் பாயும் காவிரி, தாமிரபரணி, பாலாறு உள்ளிட்ட நதிகளை இணைத்து நீர்வழிச்சாலை அமைத்தால் 100 டிஎம்சி தண்ணீரை தேக்கிவைக்க முடியும். இதன் மூலம் தமிழகம் வளமான மாநிலமாக மாறும். நதிகளை இணைத்து வளமான தமிழகத்தை அமைக்க அனைத்துத் தரப்பினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள், கவிஞர்கள் இதற்காக ஒருங்கிணைந்து கனவு காண வேண்டும். அந்தக் கனவு நனவாகும் வரை தூங்கக்கூடாது. தூக்கத்தில் வருவதல்ல கனவு. தூங்கவிடாமல் செய்வதுதான் கனவு என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக