திங்கள், ஜனவரி 09, 2012

புயல் தாக்கிய கடலூர் - போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு


அண்மையில் ஏற்பட்ட தானே புயலால் கடலூர் மாவட்டம் பெரிதும் பாதிக்கப்பட்டது. முதல்வர் ஜெயலலிதா நேரில் சென்று பார்வையிட்ட பிறகு இங்கு சீரமைப்பு பணிகள் போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப்பட்டு வருவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.சீரமைப்பு வேலைகள் சம்பந்தமாக கடலூர் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டு்ள்ள அறிக்கை பின்வருமாறு - 
கடலூர் மாவட்டத்தில் தானே புயுலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தமிழக முதல்வர் 4.1.2012 அன்று பார்வையிட்டு
பாதிக்கப்பட்ட  பொதுமக்களுக்கு ஆறுதல் தெரிவித்து, நிவாரண உதவிகளை வழங்கினார். அமைச்சர்களை கடலூர் மாவட்டத்திலேயே தங்கி நிவரணப்பணிகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார். அதனடிப்படையில் அமைச்சர்கள் கடலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று நிவாரணப் பணிகளை மேற்கொண்டுள்ளனர். மின்விநியோக சீரமைப்பு பணிகள் போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப்பட்டு வருகின்றன.
முதல்வர் ஜெயலலிதா தானே புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்தில் மின்விநியோக சீரமைப்பு பணிகளை மிக விரைவாக முடிக்குமாறு உத்தரவிட்டுள்ளார். இதனடிப்படையில் மின்சீரமைப்பு பணிகள் அலுவலர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மின்சீரமைப்பு பணிகளில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 1,000 க்கும் மேற்பட்ட அலுவலர்கள், பணியாளர்கள், தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகிறார்கள். மேலும் தமிழகம் முழுவதும் உள்ள 33 மின் பகிர்மான வட்டங்களைச் சார்ந்த பொறியாளர்கள், அலுவலர்கள், தொழிலாளர்கள் உள்ளிட்ட 1,000 பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு, கடலூர் மாவட்ட மின் சீரமைப்பு பணிகளில் ஈடுபடுத்துவதற்காக திருமண மண்டபங்களில் தங்கவைக்கப்பட்டு, மின்சீரமைப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள ஜீப், வேன், மின் கம்பங்களை கொண்டு செல்லும் லாரிகள், மின்தளவாட பொருட்களை கொண்டு செல்லும் லாரிகள் உள்ளிட்ட 100 வாகனங்களும், சீரமைப்பு பணிகளுக்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும் காற்றாலை மின்உற்பத்தி கோபுர கட்டமைப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள் 200 நபர்கள் மின்சீரமைப்பு பணிகளுக்காக கடலூர் மாவட்டத்திற்கு வந்து நேற்று முதல் பணியில் ஈடுபட்டுள்ளார்கள்.
கடலூருக்கு, நெய்வேலியிலிருந்து மின்விநியோகம் செய்துவரும் 230 கி.வோ. மின்பாதையில் தானே புயலினால் முற்றிலும் சேதமடைந்த மூன்று கோபுரங்கள் சீரமைக்கும் பணி முடிவடைந்து கடலூருக்கு மின்விநியோகம் வழங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் பாதிப்புக்குள்ளான 47 துணை மின்நிலையங்கள் போர்க்கால வேகத்தில் சீரமைக்கபட்டு தற்போது மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான புதிய மின்கம்பங்கள் நடப்பட்டு மின்பாதைகள் சீரமைக்கப்பட்டுள்ளன. தற்போது வரை நகரப்பகுதிகளில் 1,98,595 மின்இணைப்புகளுக்கும், கிராம பகுதிகளில் 2,65,680 மின்இணைப்புகளுக்கும் ஆக மொத்தம் 4,64,275 மின் இணைப்புகளுக்கு மின்சாரம் மீட்டுத்தரப்பட்டுள்ளது. மீதமுள்ள மின்இணைப்புகளுக்கு மின்சாரம் வழங்க பணியாளர்கள் போர்க்கால அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக