புதன், ஜனவரி 11, 2012

ஜன. 14ம் தேதிக்குள் நக்கீரன் அலுவலகத்திற்கு குடிநீர், மின்சாரம்- உயர்நீதிமன்றம் உத்தரவு !


Nakkeeran Gopalநக்கீரன் பத்திரிக்கை அலுவலகத்தில் துண்டிக்கப்பட்ட மின்சாரம், குடிநீர் இணைப்புகளை ஜனவரி 14ம் தேதிக்குள் வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 7ம் தேதியன்று நக்கீரன் அலுவலகம் அதிமுகவினரால் தாக்கப்பட்டது. அதோடு தமிழக அரசு நக்கீரன் அலுவலகத்தின் மின் இணைப்பையும், குடிநீர் இணைப்பையும் துண்டித்தது. இதன் மூலம் நக்கீரன் அலுவலகம் இயங்க முடியாத நிலையை ஏற்படுத்தியது அரசு.

இதைத்தொடர்ந்து, நக்கீரன் அலுவலகத்தின் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை உள்ளடக்கி சென்னை உயர்நீதிமன்றத்தில் நக்கீரன் சார்பில் அவசர வழக்கு 09.01.2012 அன்று தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு 10.01.2012 அன்று உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இக்பால் மற்றும் வாசுகி தலைமையிலான முதல் பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நக்கீரன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பெருமாள் வாதிடுகையில், அலுவலகம் தாக்கப்பட்டது தொடர்பான புகைப்பட ஆதாரங்களை காட்டி வாதிட்டார். மேலும், அரசு தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து மின் இணைப்பு மற்றும் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டதை எடுத்துக் கூறினார்.

இதையடுத்து தலைமை நீதிபதி இக்பால் குறுக்கிட்டு, அரசு வழக்கறிஞரைப் பார்த்து, அரசு என்பது எல்லோருக்கும் பொதுவானது. ஜாதி, மதம் பார்க்கக் கூடாது. கட்சி பேதம் பார்க்கக் கூடாது. மரண தண்டனை கைதிகளுக்கு கூட குடிநீரும், மின்சாரமும் கடைசி வரை வழங்க வேண்டும். அப்படி இருக்கும்போது நக்கீரன் அலுவலகத்தின் மின்சாரத்தையும், குடிநீர் இணைப்பையும் ஏன் நிறுத்தினீர்கள்? உங்களை யார் நிறுத்தச் சொன்னது? என்று சரமாரியாக கேட்டார்.

அப்போது குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படுவதற்கு நக்கீரன் அலுவலகத்துக்கு அளிக்கப்பட்ட நோட்டீசின் நகல் நீதிபதியிடம் காண்பிக்கப்பட்டது. அதில், குடிநீரில் அசுத்தம் ஏற்பட்டுள்ளது. அதனால்தான் துண்டித்துள்ளோம் என்று கூறப்பட்டிருந்தது.

இதனை ஏற்க மறுத்த நீதிபதி, எத்தனையோ இடங்களில் அசுத்தம் ஏற்பட்டுள்ளது. இதுநாள் வரை தூங்கிக் கொண்டிருந்த நீங்கள், எப்படி இந்த விஷயத்தில் மட்டும் அவசரமாக துண்டித்தீர்கள்? என்று கேள்வி எழுப்பினார்.

இதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தின் கேள்விகளுக்கு பதில் அளிக்க ஒரு நாள் அவகாசம் கேட்டது அரசு தரப்பு. இதையடுத்து வழக்கு விசாரணையை இன்றைக்கு நீதிபதிள் ஒத்திவைத்தனர்.

இன்று மீண்டும் விசாரணை நடந்தது. அதன் இறுதியில், வரும் 14ஆம் தேதிக்குள் நக்கீரன் அலுவலகத்துக்கு மின்சாரம், குடிநீர் இணைப்பு வழங்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதைச் செய்து முடித்த பின்னர் நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்றும் அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக