செவ்வாய், ஜூன் 07, 2011

அப்துல்லா சலே நாட்டைவிட்டு ஒழிந்ததால் ஏமன் மக்கள் மகிழ்ச்சிக் கொண்டாட்டம்!!!

சனா : ஏமன் அதிபர் அலி அப்துல்லா சலே, மருத்துவ சிகிச்சைக்காக நேற்று முன்தினம் சவுதி அரேபியா சென்றார். அவர் நாட்டை விட்டு வெளியேறி விட்டதாக வந்த தகவல்களை அடுத்து, மக்கள் மகிழ்ச்சிக் கொண்டாட்டங்களில் மூழ்கினர்.
 சலேவுக்குப் பின், யார் அதிபராக வருவது என்ற அதிகாரப் போட்டி துவங்கும் பட்சத்தில், ஏமன் மேலும் மோசமான நிலைக்குத் தள்ளப்படலாம் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.
ஏமனில், அதிபர் அலி அப்துல்லா சலே, பதவி விலகக் கோரி, கடந்த பிப்ரவரி மாதம் முதல் மக்கள் போராடி வருகின்றனர். பதவி விலகுவதாக அறிவித்து மூன்று முறை அவர் பின்வாங்கியதை அடுத்து, அங்கு அவரது ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது.
எதிர்ப்பாளர்களுக்கு நிதியுதவி உள்ளிட்ட பல்வேறு வழிகளில் ஆதரவு அளித்து வந்தவரும், நாட்டின் மிகப் பெரிய பழங்குடியினமான "ஹஷீத்' இனத்தின் தலைவருமான ஷேக் சாதிக் அல் அமரின் ஆதரவாளர்கள், மக்களுடன் இணைந்து போராட்டத்தில் குதித்தனர். அதன் பின் காட்சிகள் மாறத் தொடங்கின. மோதல்கள், உள்நாட்டுக் கலவரமாக மாறக் கூடிய அபாய நிலையை எட்டின.
காயம் அடைந்த சலே: தென்பகுதியில் உள்ள ஜின்ஜிபார் நகரை, அல் - குவைதாவின் ஆதரவாளர்களான ஆயுதம் ஏந்திய 300 வீரர்கள் கைப்பற்றினர். இதைத் தொடர்ந்து, அதிபரின் ராணுவம், எதிர்ப்பாளர்கள் மீது பீரங்கி, துப்பாக்கி மற்றும் போர் விமானங்கள் மூலம் தாக்குதலை நடத்தியது. கடந்த 10ம் தேதி, அதிபர் மாளிகையின் வளாகத்தில் உள்ள அல் நஹ்டியான் மசூதியில், அதிபர், பிரதமர், துணைப் பிரதமர், பார்லிமென்டின் இரு சபாநாயகர்கள், அதிபரின் மகன்கள் மற்றும் உயரதிகாரிகள் பலரும் கூடி தொழுகையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது மசூதியின் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அதிபர், பிரதமர், துணைப் பிரதமர், பார்லி சபாநாயகர்கள், அதிபரின் மகன்கள் ஆகியோர் காயமடைந்தனர். அதிபரின் இதயத்துக்குக் கீழே, ஏவுகணையின் சிதறல்கள் கடும் வேகத்தில் துளைத்து விட்டன. அவரது கழுத்து, முகம் மற்றும் தலைகளிலும் காயங்கள் ஏற்பட்டன. வெளியேறினார்: பிரதமர், துணைப் பிரதமர், சபாநாயகர்கள் இருவர், மேலும் ஒரு நபர் என ஐந்து பேர் உடனடியாக சவுதி அரேபிய தலைநகர் ரியாத்துக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.
அதிபர் சலேயும், சிகிச்சைக்காக, ரியாத்துக்குச் சென்றார் என நேற்று முன்தினம் முதலில் தகவல்கள் வந்தன. உடனடியாக அரசுத் தரப்பில் அவை மறுக்கப்பட்டன. ஆனால், சலே, நேற்று முன்தினம் மாலை, ரியாத்துக்கு தனி மருத்துவ விமானத்தில் சென்றுவிட்டார். அவருடன் அவரது மனைவி உள்ளிட்ட 35 குடும்ப உறுப்பினர்களும் சென்றுள்ளனர்.
மக்கள் கொண்டாட்டம்: ரியாத்தில் உள்ள காலித் அரசர், விமான நிலையத்தில் அவர் வந்திறங்கிய தகவலை சவுதி அதிகாரிகள் உறுதிப்படுத்திய பின், ஏமனில் பல்வேறு இடங்களில் அதிபரின் வெளியேற்றத்தை மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். ஏமன் மக்கள் புரட்சிக்கு அடித்தளமிட்ட சனா பல்கலைக்கழக மாணவர்கள், "இன்று ஏமன் புதிதாய்ப் பிறந்துள்ளது' என்று கோஷமிட்டு தங்கள் சந்தோஷத்தை வெளிப்படுத்தினர்.
துணை அதிபர் அதிபர் ஆனார்: ஏமன் அரசியல் சாசனப்படி, அதிபரின் பொறுப்பை துணை அதிபர் அப்துல் ரப்பு மன்சூர் ஹாடி ஏற்றுக் கொண்டார். அதன்படி ராணுவம், பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்தும் அவர் வசம் இருக்கும். அவர், ஏமன் அதிபரின் காயம் அடைந்த மகன்களையும், ராணுவ உயரதிகாரிகளையும் விரைவில் சந்திக்க உள்ளார்.
திரும்புவாரா சலே? அதிபர் மாளிகையைக் காக்கும் பொறுப்பில் உள்ள "பிரசிடென்சியல் கார்ட்' படைவீரர்களை வழிநடத்தும் அகமது, சலேயின் மூத்த மகன். அவரும் அவரது உறவினர்களான அம்மர் மற்றும் ஏகியா இருவரும், பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் அமெரிக்க அரசுடன் இணைந்து செயல்பட்டவர்கள்.
இவர்கள் மூவரும், மற்றும் சில உறவினர்களும், இன்னும் சனாவில் தான் உள்ளனர். அவர்களும் அதிபருடன் சென்றனரா என்பது உறுதியாகவில்லை. அவர்களும் உடன் சென்றிருந்தால், அதிபரின் பயணம் ஒருவழிப் பயணமாக, அதாவது ஏமனை விட்டு வெளியேறியதாகத்தான் இருக்கும்.
ஆனால், அதிபரின் இப்பயணம் மருத்துவ சிகிச்சைக்காக மட்டும்தான் என, அவரது ஆளும் கட்சி மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கூறி வருகிறது. அரசு அதிகாரி நேற்று முன்தினம் அளித்த பேட்டியில், விரைவில் சலே நாடு திரும்பப் போவதாகத் தெரிவித்தார்.
அதிகாரப் போட்டி ஆரம்பம்: அகமது உள்ளிட்ட மூவரும் சனாவில் இருக்கும் பட்சத்தில், அதிகாரப் போட்டிக்கான அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் துவக்கப்படும். துணை அதிபர் மன்சூர் ஹாடி, சலேயின் மகன் அகமது, பழங்குடியினத் தலைவர் அமர், மக்கள் போராட்டத்தில் இணைந்திருந்த எதிர்க்கட்சிகள் ஆகியோருக்கிடையில் பல மோதல்கள் நிகழக் கூடும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.
மொத்தத்தில் தற்போது ஏமன் பெருங்குழப்பத்தில் உள்ளது. அதிபரின் வெளியேற்றத்துக்குப் பின், அல் - குவைதாவின் கை ஓங்கும் வாய்ப்பும் உள்ளது. அதனால், நிலைமையை சவுதி உள்ளிட்ட அண்டை நாடுகளும், அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளும் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக