வெள்ளி, ஜூலை 13, 2012

அடடே... 'டைம்' பத்திரிக்கைக்குப் பதில் 'டைம்ஸ் ஆப் இந்தியா' நாளிதழை கிழித்த தமிழக காங்கிரஸார்

 Tn Youth Congress Mistakes Times For Time சென்னை: நம்ம பிரதமரைப் போய் செயல்திறன் இல்லாதவர் என்று கூறி விட்டதே டைம் பத்திரிக்கை என்று கொதித்தெழுந்த தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸார், டைம் பத்திரிகைக்குப் பதில் டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழைக் கிழித்துப் போராட்டம் நடத்தி அனைவர் முன்பும் பெரும் கேலிப் பொருளாகியுள்ளனர். அமெரிக்காவைச் சேர்ந்தது டைம் பத்திரிக்கை. இந்தியாவைச் சேர்ந்தது டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கை.
இந்த இரண்டுக்கும் வித்தியாசம் தெரியாமல் இளைஞர் காங்கிரஸார் நடத்திய போராட்டத்தால் அவர்களைப் பார்த்து அனைவரும் சிரிக்கும் நிலை ஏற்பட்டு விட்டது.
தமிழக இளைஞர் காங்கிரஸார் நேற்று சென்னை அமெரிக்க துணைத் தூதரகம் முன்பு திரண்டனர். அப்போது கைகளில் டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ்களை வைத்திருந்தனர். இந்தப் போராட்டம் குறித்து செய்தி சேகரிக்க வந்த பத்திரிக்கையாளர்கள், இது என்ன டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கையை கையில் வைத்துள்ளீர்கள் என்று காங்கிரஸாரிடம் கேட்டபோது, இந்தப் பத்திரிக்கைதானே நமது பிரதமரை செயல் திறன் இல்லாதவர் என்று கூறியது என்று கோபமாக கேட்டனர்.
அதற்குப் பத்திரிக்கையாளர்கள் அட ஏங்க நீங்க வேற, இது வேற பத்திரிக்கை, அது வேறு பத்திரிக்கை, இரண்டும் வேறு வேறு நிறுவனம் என்று விளக்கினர். ஆனால் அதை கேட்க மறுத்த காங்கிரஸார் தங்களது போராட்டத்தைத் தொடர்ந்தனர். கைகளில் இருந்த டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கையை தாறுமாறாக கிழித்தும், காலில் போட்டு மிதித்தும் தங்களது எதிர்ப்பைக் காட்டி கோஷம் போட்டனர்.
ஆனால் நடந்த தவறை உணர்ந்து கொகண்ட மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ராம்குமார் இதுகுறித்து விளக்குகையில், சில தொண்டர்கள் தவறுதலாக டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ்களை கொண்டு வந்து விட்டனர். போராட்டத்திற்கு வரும் அவசரத்தில் இந்தத் தவறு நடந்து விட்டது. இருப்பினும் பெரும்பாலானவர்கள் கையில் டைம் பத்திரிகைதான் இருந்தது என்று கூறி சமாளித்தார்.
போராட்டம் குறித்து விளக்கிய மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜ், நாங்கள் எந்த மீ்டியாவுக்கும் எதிரானவர்கள் இல்லை. அமெரிக்க தூதரக அதிகாரிகளை சந்திக்கவே நாங்கள் திட்டமிட்டு வந்தோம். டைம் பத்திரிக்கை இந்தியத் தலைவர்களை தாக்கி எழுதுவதையே பிழைப்பாக கொண்டுள்ளது. முன்பு வாஜ்பாயை விமர்சித்து கடுமையாக எழுதியது. தற்போது பிரதமர் மன்மோகன் சிங்கை விமர்சித்துள்ளது. இது கண்டனத்துக்குரியது என்றார் அவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக