டெல்லி: காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி தான் தனது மகளைத் திருமணம் செய்ய வேண்டும் என்று கூறி ராஜஸ்தானைச் சேர்ந்த பெண் ஓம் சாந்தி சர்மா டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த 9ம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரத்தத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் ராகுலுக்கு வரதட்சணையாக ரூ. 15 கோடி கொடுக்க
அவர் தயாராக உள்ளார்.
இது குறித்து மிட் டே பத்திரிக்கை வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது,
ஓம் சாந்தி சர்மா என்ற பெண் தனது மகளுக்கு காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி தான் மாப்பிள்ளையாக வர வேண்டும் என்று கூறி டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த 9ம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்து வருகிறார். மஞ்சள் நிறப் புடவை அணிந்து யாருடன் பேசாமல் மௌன விரதம் வேறு இருந்து வருகிறார். மழை, வெயில் என எதையும் பொருட்படுத்தாமல் அவர் உண்ணாவிரதத்தில்இருக்கிறார்.
அவர் தனக்கு அருகில் ஒரு பலகையை வைத்துள்ளார். அதில், ராகுல் காந்தி எனது மகளை மணக்க வேண்டும். அவ்வாறு அவர் திருமணம் செய்து கொண்டால் அவருக்கு ரூ.15 கோடி வரதட்சணையாகக் கொடுக்க தயார். நான் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரைச் சேர்ந்தவள். எனது மாமனார், மாமியார் குடும்ப சொத்தில் இருந்து எனக்கு கிடைக்க வேண்டிய பங்கு வந்து சேர வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஓம் சாந்தி சர்மா மனநிலை பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். ஆனால் டெல்லி மண்டல டிசிபி கே.சி. திவேதி இது குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.
இந்தப் பெண்ணின் இந்த வினோத உண்ணாவிரதத்தால் டெல்லியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக