வியாழன், ஜூலை 12, 2012

காங்கிரஸின் துணை ஜனாதிபதி வேட்பாளர் அன்சாரிக்கும் மம்தா எதிர்ப்பு. காங்கிரஸ் அதிர்ச்சி !

 ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்தப்பட்ட பிரணாப் முகர்ஜியை ஆதரிக்க மத்திய அரசின் கூட்டணியில் உள்ள மம்தா பானர்ஜி மறுத்து விட்டார். இதனால் காங்கிரசுக்கும், மம்தாபானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரசுக்கும் இடையே உரசல் ஏற்பட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக மம்தா பானர்ஜியின் ஆதரவை பெற்று விட வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர்கள் சிலர் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் மம்தாபானர்ஜி தனது நிலையை மாற்றிக் கொள்ள விரும்பவில்லை என்று  கூறப்படுகிறது. 

எனவே அவர் ஜனாதிபதி தேர்தலில் பிரணாப்முகர்ஜி, சங்மா  இருவரையும் ஆதரிக்காமல்  ஓட்டெடுப்பை புறக்கணிப்பார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த நிலையில் துணை ஜனாதிபதி தேர்தலும் சூடு பிடித்துள்ளது. மத்தியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி சார்பில் ஹமீத் அன்சாரி மீண்டும் துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவருக்கு பிரதமர் மன்மோகன் சிங் ஆதரவு திரட்டி வருகிறார். 

காங்கிரஸ் கூட்டணியில் உள்ள கட்சிகள் தவிர மற்ற மாநில கட்சி தலைவர் களிடமும் பிரதமர் மன் மோகன்சிங் தொடர்பு கொண்டு பேசி வருகிறார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆதரவு பெற அவர் முயன்றதாக தெரிகிறது. இதற்கிடையே துணை ஜனாதிபதி  பதவிக்கு அன்சாரியை  மீண்டும் தேர்வு செய்வதற்கு மம்தா பானர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக இன்று தகவல் வெளியாகி உள்ளது. 

மேல்-சபை நடவடிக்கைகளில் அன்சாரி சிறப்பாக செயல்படவில்லை என்று மம்தாபானர்ஜி குற்றம் சாட்டியுள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும் துணை ஜனாதிபதி தேர்தலில் தான் விரும்பும் ஒருவரை தேர்வு செய்ய வேண்டும் என்று அவர் நிபந்தனை விதித்துள்ளதாக கூறப்படுகிறது. இது காங்கிரஸ் தலைவர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மேற்கு வங்கத்தில் கவர்னராக இருக்கும் கோபால கிருஷ்ண காந்தியை துணை  ஜனாதிபதியாக்க வேண்டும் என்று  மம்தாபானர்ஜி விரும்புவதாக தெரிகிறது. அவரை ஏற்காவிட்டால் கிருஷ்ணபோஸ் என்பவரை துணை ஜனாதிபதியாக்க மம்தா முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். அவரது  முயற்சிக்கு வெற்றி கிடைக்குமா என்று தெரியவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக