தோஹா:இஸ்லாத்தின் 2-வது கலீஃபா உமர் பின் கத்தாப் வரலாற்றை அடிப்படையாக கொண்ட தொலைக்காட்சி தொடர் வருகிற ரமலான் மாதம் முதல் ஒளிபரப்பாகும் என கத்தர் தொலைக்காட்சியின் இயக்குநர் முஹம்மது பின் அப்துற்றஹ்மான் அல்கவாரி அறிவித்துள்ளார். இஸ்லாமிய வரலாற்றில் பரிபூரண ஆளுமையான வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக
கொண்ட தொலைக்காட்சி தொடரை கத்தர் தொலைக்காட்சியும், எம்.பி.சி குழுமமும் இணைந்து தயாரித்துள்ளன.
அதேவேளையில், உமர் போன்ற மகத்தான ஆளுமைகளை கற்பனையான உருவங்களாக காட்சிப்படுத்த முடியுமா? என்ற விவகாரத்தில் கருத்துவேறுபாடு உள்ளது. தொடரில் அவரது கற்பனையான கதபாத்திரத்தின் குரலை மட்டுமே ஒலிபரப்ப வேண்டும் என்ற கோரிக்கையும் பல தரப்பிலிருந்தும் எழுந்துள்ளன.
தொலைக்காட்சி தொடரின் தயாரிப்பு முடிவடைந்த பிறகு மத விவகார குழு பரிசோதித்து, அவர்கள் பரிந்துரைக்கும் மாற்றங்களுடன் தொடர் ஒளிபரப்பாகும் என்று கத்தர் தொலைக்காட்சியின் நாடக-தொடர் பிரிவு தலைவர் ஃபைஸல் பின் ஜாஸிம் அல் தானி தெரிவித்துள்ளார்.
உலகம் கண்ட மிகச்சிறந்த ஆட்சியாளர் என்று இந்தியாவின் தேசத் தந்தையாக போற்றப்படும் மகாத்மா காந்தியால் புகழாரம் சூட்டப்பட்ட உமர்(ரலி) அவர்களின் வாழ்க்கை வரலாற்றுத் தொடரை காண உலகில் ஏராளமானோர் பெரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக