மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் இருந்து 80 கி.மீ. தூரத்தில் உள்ளது. சுடியா கிராமம். நாட்டின் மிகவும் மோசமான பகுதிகளில் இந்த ஊரும் ஒன்றாகும். இங்கு கற்பழிப்பு என்பது அன்றாட நிகழ்ச்சியாகி இருந்தது. கற்பழிப்பு பூமி என்று அழைக்கப்பட்ட இந்த ஊரில், பெற்றோர் கண் முன்னே இளம்பெண்கள் கற்பழிக்கப்படுவதும், கணவர்கள் கண்முன்னே மனைவிகள் கற்பழிக்கப்படுவதும், குழந்தைகள் கண்முன்னே தாய்மார்கள் கற்பழிக்கப்படுவதும் சர்வ சாதாரணமாக நடைபெற்று வந்தது. கும்பலாக சேர்ந்து கற்பழிப்பது என்பது ஒரு பேஷனாகவே இருந்தது. இந்த கற்பழிப்பு பயங்கரவாதத்தை எதிர்த்து போராட ஆசிரியை ஒருவர் முன் வந்தார். அவர் பெயர் பருன் பிஸ்வாஸ் (26). 10 ஆண்டுகளுக்கு முன்பு இவரும் காமவெறி கும்பலால் பாதிக்கப்பட்டவர். சுடியா மண்ணை விட்டே கற்பழிப்பு பயங்கரத்தை விரட்டி அடிக்க ஒரு அமைப்பை ஏற்படுத்தி போராடினார். விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நடத்தினார்.
இதையடுத்து போலீசாரின் முழுக் கவனமும் இந்தப் பக்கம் திரும்பியது. கற்பழிப்பு குற்றவாளிகள் ஒடக்கப்பட்டனர். இதனால் அந்த கும்பலுக்கு பருன் பிஸ்வாஸ் மீது கோபம் ஏற்பட்டது. இவர் கோபர்டங்கா ரெயில் நிலையத்தில் இறங்கி வீட்டு நடந்து வருவது வழக்கம். அது போல் சம்பவத்தன்று ரெயில் நிலையத்தை விட்டு வெளியே வந்த அவரை பட்டப்பகலில் நூற்றுக்கணக்கானோர் முன்னிலையில் ஒரு கும்பல் சுட்டுக் கொன்றது.
கொலைக்காரர்கள் ஒரு மாதமாக திட்டமிட்டு இடம் மற்றும் நேரத்தை தேர்வு செய்து பிஸ்வாசை கொலை செய்திருக்கின்றனர். இவரது இறுதிச் சடங்கில் சுமார் 40 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.
தங்களின் ரட்சகராக திகழ்ந்த பிஸ்வாஸ் கொலையை அவர்களில் சிலரால் பொறுத்துக் கொள்ள முடிய வில்லை. இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்களில் நூற்றுக்கணக்கான பெண்கள், போலீஸ் நிலையத்தை அடித்த சேதப்படுத்தினர். தடுக்க வந்த போலீசாரையும் அடித்து உதைத்தனர். சாலைகளில் தடுப்பு ஏற்படுத்தி போக்குவரத்தை தடை செய்தனர்.
இறுதிச் சடங்குகள் முடிந்த பின்னரே நிலைமை ஓரளவு சீரடைந்தது. குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்பட்டு உரிய தண்டனை வாங்கிக் கொடுக்கப்படும் என்று போலீசார் அதிகாரிகள் வாக்குறுதி அளித்ததால் கிராமக்கள் சமாதானம் அடைந்தனர். குற்றவாளிகளை கைது செய்ய தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக