புதுடெல்லி:சட்டீஷ்கர் மாநிலம் பிஜாப்பூரில் நடந்த கூட்டுப் படுகொலை தொடர்பான உண்மைகள் வெளியே வரும் வேளையில் சட்டீஷ்கர் அரசும், மத்திய உள்துறை அமைச்சகமும் இணைந்து நடத்திய அரச பயங்கரவாதம் வெட்ட வெளிச்சமாகியுள்ளது.கொலைச் செய்யப்பட்ட 20 பேரில் பெரும்பாலோர் நக்ஸலைட்டுகள் என்ற அரசின் கூற்று
பொய்யென நிரூபணமாகியுள்ளது.
பெண்களும், குழந்தைகளும் உள்ளிட்ட நிராயுதபாணிகளான கிராமவாசிகளை வெறிப்பிடித்த சி.ஆர்.பி.எஃப் படையினர் அநியாயமாக சுட்டுக் கொன்றுள்ள தகவலை சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்திய மக்கள் பிரதிநிதிகளும், ஊடகங்களும் வெளியிட்டுள்ளன.
காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த 15க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்கள் அடங்கிய குழுவினர் சம்பவம் நடந்த கோட்டேகுடா கிராமத்திற்கு சென்று வீடு வீடாகச் சென்று விசாரணை நடத்தினர். விவசாய அறுவடை திருவிழா குறித்து ஆலோசனை நடத்த கூடிய கிராமவாசிகளை நக்ஸலைட்டுகள் கூட்டம் என தவறாக புரிந்துகொண்டு போலீஸ் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக விசாரணையில் தெரிய வந்ததாக இக்குழுவிற்கு தலைமை தாங்கிய காங்கிரஸ் எம்.எல்.ஏ கோஸி லக்மா தெரிவித்துள்ளார்.
கொலைச் செய்யப்பட்டவர்களில் 12 வயது சிறுமியும் அடங்குவார். நக்ஸலைட் தலைவர் என்று போலீஸ் கூறும் காகா ராகேஷ், மத்கன் ராம்விலாஸ் ஆகியோர் அருகில் உள்ள பள்ளிக்கூடத்தில் பயிலும் 9-வது வகுப்பு மாணவர்கள் ஆவர்.
போலீஸாரால் சுட்டுக் கொலைச் செய்யப்பட்டஇரண்டு மாணவர்களும் பள்ளிக்கூடத்தில் நன்றாக படிக்கும் மிகச்சிறந்த மாணவர்கள் என அவர்களுக்கு பாடம் கற்பிக்கும் ஆசிரியர்கள் கூறியதாக லக்மா கூறுகிறார்.
ஜூன் 26-ஆம் தேதி நடந்த இந்த பயங்கரவாத படுகொலையை நக்ஸல் வேட்டையின் வெற்றியாக மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் பெருமிதத்துடன் தெரிவித்திருந்தார். மேலும் அப்பாவிகளை சுட்டுக்கொன்ற சி.ஆர்.பி.எஃப் ஜவான்களுக்கு புகழாரம் சூட்டினார்.
இச்சம்பவம் போலி என்கவுண்டர் என்றும், கொலைச் செய்யப்பட்டவர்கள் அப்பாவிகள் என்று சொந்தக் கட்சியான காங்கிரஸைச் சார்ந்தவர்களே சுட்டிக்காட்டிய பிறகும் ப.சிதம்பரம் தனது தவறை திருத்தாமல் கூறியதையே திரும்ப கூறி வருகிறார்.
பாட்லா ஹவுஸ் போலி என்கவுண்டரில் அப்பாவி முஸ்லிம்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தை காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் திக்விஜய்சிங் ஒப்புக்கொள்ளும் பொழுது கொலைச் செய்யப்பட்டவர்கள் தீவிரவாதிகள் என்று தொடர்ந்து அபாண்டத்தை ப.சிதம்பரம் கூறிவருகிறார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
சட்டீஷ்கரில் பா.ஜ.க அரசுக்கு தலைமை தாங்கும் முதல்வர் ரமண்சிங் இச்சம்பவத்தை அரசியலாக்க காங்கிரஸ் முயல்வதாக குற்றம் சாட்டுகிறார். இச்சம்பவம் குறித்து சி.ஆர்.பி.எஃப் விசாரணை நடத்தும் என இயக்குநர் ஜெனரல் கே.விஜயகுமார் கூறியுள்ளார்.
நக்ஸலைட்டுகளை எதிர்கொள்ள அரசு உருவாக்கிய கூலிப் பயங்கரவாதப் படையான சல்வாஜுதும் தீவிரமாக செயல்பட்ட 2006 காலக்கட்டத்தில் கோட்டேகுடா கிராமத்தில் ஏராளமானோர் கிராமத்தை விட்டு வெளியேறினர். இக்கிராமத்தில் பலர் கொல்லப்பட்டிருந்தனர்.
நக்ஸல் வேட்டையின் பெயரால் நடைபெறும் போலீஸ் பயங்கரவாதம் குறைந்த பிறகு 2010-ஆம் ஆண்டு கிராமவாசிகள் மீண்டும் தங்களது சொந்த கிராமத்திற்கு திரும்பினர்.
“அவர்கள் எங்களை முதலில் கொலைச் செய்வார்கள். பின்னர் நக்ஸலைட்டுகள் என முத்திரைக்குத்தி எங்களை கொலைச் செய்ததை நியாயப்படுத்துவார்கள். பல வருடங்களாக இதுதான் நடந்துவருகிறது” என்று கோட்டேகுடா கிராமவாசிகள் கூறுகின்றனர்.
கொலைச் செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கவும், நீதி விசாரணை நடத்தவும் சி.பி.எம் பொலிட்பீரோ கோரிக்கை விடுத்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக