நெல்லை: நெல்லையில் உள்ள ஒரு உணவகத்தில் ரூ. 50 மதிப்புள்ள மதிய உணவை திடீரென ரூ.2.75க்கு வழங்கியதால் அங்கு 1,500 பேர் குவிந்தனர்.தமிழகத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலை தாறுமாறாக ஏறிவிட்டதால் உணவகங்களில் உணவுப் பொருட்களின் விலை கடுமையாக உயர்த்தப்பட்டுவிட்டது. இதனால் ஒரு வேளை நல்ல உணவு
எங்காவது இலவசமாகக் கிடைத்தால் கூட மக்கள் அதை ருசிக்க தயக்கமின்றி குவிந்து விடுகின்றனர். அந்த அளவுக்கு விலைவாசி மக்களை வாட்டி வதைக்கிறது.
நெல்லையில் கடந்த 1957ம் ஆண்டு முதல் 1985ம் ஆண்டு வரை ஒரு உணவகம் இயங்கியது. அதன் பிறகு ஏதோ காரணத்திற்காக அது மூடப்பட்டு கடந்த ஆண்டு ஜூலை 1ம் தேதி அதே இடத்தில் மீண்டும் செயல்படத் தொடங்கியது.
முதல் ஆண்டு நிறைவை வி்த்தியாசமாகக் கொண்டாட முடிவு செய்த உரிமையாளர் இப்ராஹிம் 2ம் ஆண்டு துவக்க விழாவை முன்னி்ட்டு நேற்று ஒரு நாள் மட்டும் 1985ம் ஆண்டு இந்த கடையில் உணவுப் பொருட்கள் என்ன விலைக்கு விற்கப்பட்டதோ அதே விலைக்கு விற்கப்படும் என அறிவித்து போஸ்டர் ஒட்டினார்.
மதிய உணவை ரூ.50க்கு பதில் ரூ.2.75க்கும், ஒரு புரோட்டா இன்றைய விலையான ரூ.10க்கு பதில் 50 பைசாவுக்கும் விற்கப்படும் என அறிவித்தார்.
இதையடுத்து ஏராளமான மக்கள் அந்த உணவகம் முன்பு நேற்று காலையிலேயே குவிந்தனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீசார் கூட்டத்தை ஒழுங்குபடுத்தி 50 பேராக உள்ளே அனுமதித்தனர். ரூ.2.75க்கு வழங்கப்பட்ட உணவில் மீன் குழம்பு, பொறியல், கூட்டு, ரசம், சாம்பார், மோர் மற்றும் அன்லிமிட் சாதம் ஆகியவை இடம் பெற்றிருந்தன. இதுபோல் 50 பைசா புரோட்டாவுக்கு சால்னா, வெங்காய சால்னா ஆகியவை வழங்கப்பட்டன.
1985ம் ஆண்டு வழங்கப்பட்ட உணவுக் கட்டணத்தில் கோழி பிரியாணி ஒரு பிளேட் ரூ.16, மட்டன் பிரியாணி ஒரு பிளேட் ரூ.12, முட்டை பிரியாணி ரூ.12, மட்டன் வறுவல் ரூ.2, மீன் குருமா ரூ.2.50, மீன் பொறியல் ரூ.2.60, புரோட்டா செட் ரூ.3.50, மட்டன் சாப்பாடு ரூ.5, மீன் சாப்பாடு ரூ.4, சிக்கன் ரோஸ்ட் ரூ.5, மட்டன் ரோஸ்ட் ரூ.5 என அனைத்துமே ரூ.10க்கு இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த விலைப் பட்டியலை பார்த்த வாடிக்கையாளர்கள் ஏக்கப் பெருமூச்சுவிட்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக