புதுடெல்லி:இந்தியாவில் மக்கள் தொகையில் பாதிபேரின் வீடுகளில் கழிப்பறை வசதி இல்லாததால் வெளியிடங்களை உபயோகிக்கின்றனர். ஆனால் அவர்களில் பெரும்பாலோருக்கு பாக்கெட்டில் மொபைல் ஃபோன் உள்ளது என்று உள்துறை செயலாளர் வெளியிட்டுள்ள புள்ளிவிபரம் கூறுகிறது.
புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பில் கிடைத்த
விபரங்களின் அடிப்படையில் இந்தியாவில் ஒவ்வொரு வீடுகளிலும் இருக்கும் வசதிகளை குறித்த புள்ளிவிபரங்களை பட்டியலிட்டு நேற்று மத்திய உள்துறை செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது:
கிராமப்புறங்களில் 65 சதவீதம் பேருக்கு விறகுதான் அடுப்பு எரிக்க உதவும் எரிபொருளாகும்.
45 சதவீதம் பேருக்கு வாகனம் சைக்கிள் ஆகும்.
பத்தில் ஒருவரின் வீட்டில் கம்ப்யூட்டர் உள்ளது.
இணையதள தொடர்பு இருப்போர் 3 சதவீதம் மட்டுமே.
இந்தியாவில் 24.66 கோடி வீடுகள் உள்ளன.
இவற்றில் 46.9 சதவீதம் பேருக்கும் வீடுகளில் டாய்லெட்(கழிப்பறை) இல்லை.
பாதிபேரும் காலைக் கடன்களை நிறைவேற்ற வெளிப் புறங்களை நாடுகின்றனர்.
3.2 சதவீதம் பேர் பொது கழிப்பறைகளை உபயோகிக்கின்றனர்.
இந்தியாவில் 63.2 சதவீதம் வீடுகளுக்கு ஃபோன் வசதி உள்ளது.
இவற்றில் 53.2 சதவீதம் மொபைல் ஃபோன்களாகும்.
ஜார்கண்டில் 77 சதவீத வீடுகளுக்கும் டாய்லெட், பாத்ரூம் இல்லை. இதில் ஜார்கண்டிற்கு அடுத்து ஒரிஸ்ஸாவும், பீகாரும் உள்ளன.
டெலிகம்யூனிகேஷனில் முன்னணியில் இருக்கும் பகுதி யூனியன் பிரதேசமான லட்சதீவு ஆகும். அங்கு நூற்றுக்கு 93-94 வீடுகளிலும் ஃபோன் வசதி உள்ளது. டெல்லி லட்சதீவை விட பின் தங்கியே உள்ளது. டெல்லியில் நூறு வீடுகளில் 90-91 வீடுகளில் மட்டுமே ஃபோன் வசதி உள்ளது.
வீடுகளில் தொலைக்காட்சிகளின் எண்ணிக்கை 16 சதவீதம் அதிகரித்துள்ளது (இதில் பெரும்பாலும் முன்னணியில் இருப்பது தமிழகமாக இருக்கலாம்-இலவச டிவி)
ரேடியோ உபயோகம் 15 சதவீதம் குறைந்துள்ளது.
கார் இந்தியாவில் 5 சதவீதம் பேரிடம் மட்டுமே உள்ளது.
ஐந்தில் ஒருவர் பைக்/சைக்கிள் உபயோகிக்கின்றனர்.
சைக்கிள் 45 சதவீதம் பேரிடம் உள்ளது. ஆனால் இத்தகைய வாகனங்கள் இல்லாத குடும்பத்தினர் 18 சதவீதம் ஆகும்.
நகரத்தைச் சார்ந்தவர்களில் 67 சதவீதம் பேரும் வங்கி வசதியை உபயோகிக்கின்றனர். கிராமப் புறங்களில் 54 சதவீதம் பேருக்கு இந்த வசதி இல்லை. போதுமான வங்கி வசதிகள் இல்லாத 296 மாவட்டங்கள் இந்தியாவில் உள்ளன. ஆறு லட்சம் கிராமங்களில் ஐந்து சதவீதமே வங்கிக் கிளைகள் உள்ளன.
இந்தியாவில் பாதி குடும்பத்தினருக்கே வீட்டில் குடிநீர் வசதி உள்ளது. 36 சதவீதம் பேர் அரைகிலோ மீட்டராவது நடந்து சென்று தண்ணீரை பெறுகின்றனர். ஆனாலும், குழாய்நீர், ஆழ்கிணறு நீர் என குடிநீர் வசதி 87 சதவீதம் பேருக்கு உள்ளது.
இந்தியாவில் 3 இல் ஒரு வீட்டிற்கு இதுவரை மின்சாரம் சென்று அடையவில்லை.
சமையலறையில் எரிபொருளாக விறகை 3 இல் 2 பேர் உபயோகிக்கின்றனர். மண்ணெண்ணெய் உபயோகிப்போர் 3 சதவீதம் ஆகும்.
சமையல் எரிவாயுவை உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை 10 ஆண்டுகளில் 18 சதவீதம் அதிகரித்துள்ளது. 29 சதவீதம் பேர் சமையல் எரிவாயுவை பயன்படுத்துகின்றனர்.
தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி அதீதமாக இருந்தபோதிலும் மக்கள் தொகையில் பாதிபேரும் வெளியிடங்களை கழிப்பறை வசதிகளுக்காக உபயோகிப்பது புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பு முடியும் வேளையில் சவாலாக தொடருகிறது.
இதற்கு பாரம்பரிய காரணங்கள், கல்வி அறிவின்மை, வறுமை, சுத்தமின்மை ஆகியன காரணங்களாகும் என்று மக்கள் தொகை கணக்கெடுப்பு கமிஷனர் சி.சந்திரமவுலி கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக