நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள கிராமம் மிட்டாதார்குளம். இப்பகுதியில் உள்ள நம்பியாற்றில் மணல் அள்ளப்பட்டு வருகிறது. இதற்கு மிட்டாதார்குளம் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இப்பகுதியில் மணல் அள்ளுவதால் நிலத்தடி நீர் உப்பாக மாறுவதாகவும் அப்பகுதியினர் புகார் கூறினர். எனினும் பொதுமக்களின் எதிர்ப்புகளையும் மீறி மணல் அள்ளப்பட்டு வருகிறது. ஆற்றுப்பகுதியின் ஓரமாக மிட்டாதார்குளத்தை சேர்ந்த எஸ்டாக் என்பவரது தோட்டம் உள்ளது. மணல் அள்ளும் கும்பல் எஸ்டாக்கின் தோட்டத்து பகுதியில் இருந்த மணலையும் தொடர்ந்து அள்ளி வந்தனர். நேற்று இரவு சிலர் லாரியில் மணல் அள்ளினர். இதை அறிந்த எஸ்டாக், அவரது மகன் சதீஷ்குமார் (வயது 21) மற்றும் பொதுமக்கள் அப்பகுதிக்கு சென்று மணல் அள்ளியவர்களை தடுத்தனர்.
மணல் லாரியை மறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆத்திரம் அடைந்த மணல் லாரி டிரைவர் திடீர் என்று லாரியை ஸ்டார்ட் செய்தார். கூட்டத்தில் நின்ற சதீஷ்குமார் மீது லாரியை ஏற்றிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார். லாரி ஏறியதில் சதீஷ்குமார் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார். இதுபற்றி திசையன்விளை போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
மிட்டாதார்குளம் பொதுமக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர். கொலை செய்யப்பட்ட சதீஷ்குமாரின் உடலை நடுரோட்டில் வைத்து மறியலில் ஈடுபட்டனர். நள்ளிரவு தொடங்கிய மறியல் இன்று அதிகாலை வரை விடிய விடிய நடந்தது. இதுபற்றி தகவல் அறிந்ததும் திசையன்விளை இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் போலீசார் வந்து பொதுமக்களிடம் பேச்சு நடத்தினர். லாரி கிளீனர் விஜய அச்சம்பாட்டை சேர்ந்த அருள்ராஜ் (32) என்பவரை போலீசார் கைது செய்தனர். டிரைவரை தேடிவருகின்றனர்.
சம்பவ இடத்துக்கு ராதாபுரம் தாசில்தார் சுப்பிரமணியன், வள்ளியூர் டி.எஸ்.பி.ஸ்டான்லி ஜோசப் ஆகியோரும் வந்து விசாரணை நடத்தினர். நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை பிரதான ஆற்றுப்பகுதிகளில் இருந்து ஏராளமான டன் மணல் அள்ளி கடத்தப்பட்டுவிட்டன. மீதமுள்ள மணலும் சுரண்டப்பட்டு வருகிறது. மணல் கடத்தலை தடுக்கும் அதிகாரிகள், பொதுமக்கள் தாக்கப்பட்ட சம்பவங்களும் நடந்துள்ளன.
இந்த நிலையில் மிட்டாதார்குளம் வாலிபர் சதீஷ்குமார் மணல் லாரி ஏற்றி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக