திங்கள், மார்ச் 05, 2012

பஹ்ரைன் புரட்சியாளர்களுக்கு டுனீசியர்கள் ஆதரவு !

வளைகுடா நாடுகளில் அண்மைக் காலமாய் மையங்கொண்டுள்ள புரட்சி அலைக்குத் தமது ஆதரவைத் தெரிவிக்குமுகமாக, "பஹ்ரைனின் நண்பர்கள்" எனத் தம்மை அழைத்துக்கொள்ளும் டூனீசியர்கள் குழுவொன்று கடந்த சனிக்கிழமை (03.03.2012) தலைநகர் டூனிஸில் ஒரு மாபெரும் கருத்தரங்கை ஒழுங்கு செய்திருந்தது. டூனீஸிய நோக்கில் பஹ்ரைன் புரட்சி' என்ற தலைப்பில் இடம்பெற்ற இந்த மாபெரும் கருத்தரங்கில் ஏராளமான பஹ்ரைன்
செயற்பாட்டாளர்களும் கலந்து சிறப்பித்தனர். 

தமது தலைவிதியைத் தீர்மானிக்கும் உரிமை அரபுலக மக்கள் அனைவருக்கும் உண்டு" என இந்நிகழ்வில் கலந்துகொண்ட பஹ்ரைன் செயற்பாட்டாளர் ஹுஸைன் யூஸுஃப் தெரிவித்தார்.

இக்கருத்தரங்கில், "அரபுலகின் மறக்கப்பட்ட மலர்" எனும் தலைப்பில் 18 நிமிடங்களுக்குத் திரையிடப்பட்ட ஆவணப்படம், கடந்த வருடம் பஹ்ரைன் புரட்சியின் ஆரம்பம் குறித்த காட்சிகளை உள்ளடக்கியிருந்தது.

அமைதியான முறையில் சாத்வீகப் புரட்சியில் ஈடுபட்ட பஹ்ரேனியர்கள் மீது ஆளும் அரசதரப்புப் படையினர் மேற்கொண்ட அராஜக அடக்குமுறைக் காட்சிகளும், அதன்போது அநியாயமாக உயிரிழந்த செயற்பாட்டாளர்களின் புகைப்படங்களும் அந்த ஆவணப்படக்காட்சியில் காண்பிக்கப்பட்டன.

"அரபுலகைப் பொறுத்தவரையில் பஹ்ரேனியப் புரட்சி மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. மனித உரிமைகளை அனுபவிக்கும் வாய்ப்பு அனைத்து மக்களுக்கும் கிடைக்கவேண்டும்" என்று ஹுஸைன் யூஸுஃப் செய்தியாளரிடம் குறிப்பிட்டார்.

  இதேவேளை, பஹ்ரைனில் உள்ள அரசின் எதிர்த்தரப்பினர், பஹ்ரைன் விவகாரம் தொடர்பில் மௌனம் சாதித்துவரும் அரபுலக ஊடகங்களை மிகக் கடுமையாகச் சாடியுள்ளனர். தமது நாட்டின் முன்னேற்றம் தொடர்பாக எந்தவொரு வலுவான செயற்பாட்டையும் மேற்கொள்ள முன்வராத அதிகாரத் தரப்பின் பொடுபோக்குத்தனம் குறித்து தமது காரசாரமான விமரிசனங்களை இவர்கள் தொடர்ந்து முன்வைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்க.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக