இங்கிலாந்துடன் இணைந்து ஆயுத உற்பத்தியில் ஈடுபடுவதற்கான உடன்படிக்கையில் ஜப்பான் கையெழுத்திட்டுள்ளது. 1967 ஆம் ஆண்டு முதல் ஆயுத உற்பத்திசெய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு ஜப்பானுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை, தற்போது நீக்கப்பட்டுள்ளது.
ஜப்பானியப் பிரதமர் யோஷிஹிகோ நோடா வுக்கும் இங்கிலாந்து பிரதமர் டேவிட் கெமரோனுக்கும் இடையில் இடம்பெற்ற இப்புதிய ஒப்பந்தத்துக்கு அமைய, பன்னாட்டு ஆயுத உற்பத்திச் செயற்திட்டத்தில் ஜப்பானும் ஒரு பங்குதாரராக
இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளது.அண்மைக் காலமாக உலகப் பொருளாதார நெருக்கடியில் ஆழ்ந்துள்ள இங்கிலாந்து முதலான ஐரோப்பிய நாடுகளைப் பொறுத்தவரையில், ஜப்பானுக்குத் தற்போது வழங்கப்பட்டுள்ள ஆயுத உற்பத்தி மற்றும் ஆயுத ஏற்றுமதிக்கான தடைநீக்கம் பெரும் வரப்பிரசாதமாக அமையும் என நம்பப்படுகின்றது.
இரண்டாம் உலகமகா யுத்தத்தின் போது ஜப்பான், தானும் ஒரு வல்லரசாக மாறும் முனைப்பில் மிக உக்கிரமாகப் போரில் குதித்திருந்தது. வெற்றிமேல் வெற்றி வாகை சூடிக்கொண்டு வந்த ஜப்பான், பசிபிக் கடல் பிராந்தியத்தின் பேர்ள் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த அமெரிக்கக் கப்பலைத் தாக்கி மூழ்கடித்தது. அதன்பின் போரின் போக்கு முற்றாகத் திசைதிரும்பியது. முடிவில், அமெரிக்கா, தான் புதிதாகக் கண்டுபிடித்திருந்த அணுகுண்டுகளை வெடிக்கவைத்துப் பார்க்கும் பரிசோதனைக்கூடமாக ஜப்பானைப் பயன்படுத்திக் கொண்டது. ஹிரோஷிமா, நாகசாக்கி ஆகிய ஜப்பானிய நகரங்களில் அமெரிக்கப் போர் விமானங்கள் மூலம் அணுகுண்டுகள் வீசியெறியப்பட்டன. நினைத்துப் பார்க்கவும் முடியாத பேரழிவுகளை ஜப்பான் சந்திக்க நேர்ந்தது. அந்த அழிவின் சாட்சியங்கள் இன்றும் அந்த நாட்டில் நிலைத்துள்ளன.
இந்நிலையில், பன்னாட்டு ஆயுத உற்பத்திச் செயற்திட்டத்தில் ஒரு பங்காளனாக ஜப்பான் இணைந்துள்ளமை அந்நாட்டில் பரவலான வாதப் பிரதிவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக