திங்கள், மார்ச் 19, 2012

சாத்தான் ஓதும் வேதம்:இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க கூடாது: ஆர்.எஸ்.எஸ்

rssபுதுடெல்லி:சங்க்பரிவார இயக்கங்களின் இரட்டை வேடம் அவ்வப்போது கலைந்துவருவது தொடர்ந்து நாட்டு மக்கள் அனைவருக்கும் தெரிந்த செய்தியாகும். இலங்கை தமிழர்களுக்கு எதிராக ராஜபக்‌ஷே தலைமையிலான இலங்கை அரசு நடத்திய போர்க்குற்றங்களுக்கு அந்நாட்டிற்கு எதிராக ஐ.நா மனித உரிமை கவுன்சில்
கூட்டத்தில் கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானத்திற்கு சங்க்பரிவாரின் அரசியல் பிரிவான பா.ஜ.க ஆதரவு தெரிவித்து வருகிறது.
இந்நிலையில் பா.ஜ.கவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ் அமைப்பு ஐ.நா மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்கா, இலங்கைக்கு எதிராக கொண்டுவரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க கூடாது என்று கருத்து தெரிவித்துள்ளது.
ஈராக்,ஆஃப்கானிஸ்தான் என பல்வேறு நாடுகளை ஆக்கிரமித்து அந்நாட்டில் வாழ்ந்த அப்பாவி குடிமக்களை அநியாயமாக படுகொலைச் செய்து அவர்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கிய அமெரிக்கா தான் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஐ.நா மனித உரிமை கவுன்சிலில் கொண்டுவருகிறது என்பதே ஒரு கேலிக்கூத்து என்பது வேறு விஷயம்.
இந்நிலையில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கவேண்டும் என்ற கோரிக்கையை பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் குரல் கொடுத்துவரும் வேளையில் ஹிந்துத்துவா தீவிரவாத அமைப்பான ஆர்.எஸ்.எஸ்ஸின் அதிகாரப்பூர்வ ஏடான ஆர்கனைசரில் எழுதப்பட்டுள்ள தலையங்கத்தில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது:
இலங்கையில் ஈழத்தமிழர்களுக்கு எதிரான ராஜபக்சே தலைமையிலான அரசின் நடவடிக்கையை பாரதிய ஜனதா கட்சி ஆரம்பத்தில் இருந்தே கண்டித்து வருகிறது. இப்போது அந்நாட்டுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானத்துக்கும் ஆதரவு தெரிவித்து வருகிறது.
இதுபோன்ற நிலையில் பாரதிய ஜனதாவின் நிலைப்பாட்டுக்கு எதிரான நிலையை ஆர்எஸ்எஸ் எடுத்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இலங்கை போர் குற்றம் புரிந்ததாகக் குற்றம் சுமத்தி அந்நாட்டுக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் கொண்டுவந்துள்ளது. இதை இந்தியா ஆதரிக்கக்கூடாது. ஏனென்றால் இந்தத் தீர்மானத்தின் மூலம் இலங்கையின் மீது மேற்கத்திய நாடுகள் தங்கள் ஆதிக்கத்தை செலுத்த முயல்கின்றன. ஒரு ஜனநாயக அரசின் மீது அமெரிக்காவோ, ஐரோப்பிய நாடுகளோ ஆதிக்கத்தை செலுத்த முயல்வதை இந்தியா அனுமதிக்கக் கூடாது என்று ஆர்எஸ்எஸ் கூறியுள்ளது.
ஐ.நா.மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானம் இந்தியாவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. இதனால் இந்த விவகாரத்தை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. இதில் நடுநிலையான நிலைப்பாட்டை எடுக்காமல் தீர்மானத்தை துணிச்சலாக எதிர்க்க வேண்டும் என்றும் அந்த அமைப்புக் கேட்டுக்கொண்டுள்ளது.
இலங்கையில் விடுதலைப் புலிகள் எவ்வளவோ அராஜகம் செய்தார்கள். ஈழத்தமிழ் மக்களுக்கு எதிராகவும் அவர்களது நடவடிக்கை அமைந்திருந்தது. ஈழத்தமிழ் இனத்தைச் சேர்ந்த சிறுவர்களை எல்லாம் கட்டாயத்தின் பேரில் தங்களது அமைப்பில் சேர்த்தனர். அவர்களின் கையில் துப்பாக்கி அளித்து பயிற்சி அளித்தனர். இவ்வாறு புலிகள் செய்த தவறுகள் ஏதும் அமெரிக்கா கொண்டுவந்துள்ள தீர்மானத்தில் குறிப்பிடப்படவில்லை. இவ்வாறு அப்பத்திரிகை கூறுகிறது.
மேற்கண்ட ஆர்கனைசரின் தலையங்கத்தில் அடிக்கோடு இடப்பட்ட வாசகங்களை பார்த்தால் சிரிப்புத்தான் வருகிறது. ஏனெனில் விடுதலைப் புலிகளை விட பிஞ்சு நெஞ்சங்களில் பாசிச வெறியை ஊட்டி சிறுவர்கள், பெண்கள், மாற்றுத் திறனாளிகள் என்று பாராமல் துப்பாக்கி உள்ளிட்ட கொடிய ஆயுதங்களை வழங்கி பயிற்சி கொடுத்துவரும் அமைப்புதான் ஆர்.எஸ்.எஸ்.விடுதலைப்புலிகள் நடத்திய அராஜகங்களை யாரும் மறுக்க முடியாது. அதேவேளையில் இலங்கை அரசு அப்பாவி மக்களை கொடூரமாக படுகொலைச் செய்தது நிச்சயமாக போர்க்குற்றமே. ஆனால், பல்வேறு கலவரங்கள், இனப்படுகொலைகள், குண்டுவெடிப்புகளை நிறைவேற்றி இந்திய தேசத்திற்கே அச்சுறுத்தலாக விளங்கிவரும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு இலங்கை அரசு நடத்திய இனப்படுகொலைகள் துச்சமாகத்தான் தெரியும்.
மேலும் மனித உரிமைகள், ஜனநாயகம் குறித்துப் பேச இவர்களுக்கு துளியும் அருகதை இல்லை என்பதும் நடுநிலையாளர்களின் கருத்தாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக