கூடங்குளம்: தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று முக்கிய விவாதத்தை மேற்கொள்ளவுள்ள நிலையில், கூடங்குளத்தில் கூடுதல் டிஜிபி ஜார்ஜ் தலைமையில் 10 மாவட்ட எஸ்.பிக்கள், போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது. கூடங்குளம் அணு மின் நிலைய எதிர்ப்புப் போராட்டம் தொடர்பாக இது நாள் வரை தமிழக அரசு போராட்டக் குழுவுக்கு ஆதரவாக இருப்பதாக கூறப்பட்டு வந்தது. அதற்கேற்ப போராட்டக் குழுவினர் மீது தமிழக அரசு எந்தவிதமான கடுமையான நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
ஆனால் உதயக்குமார் தலைமையிலான போராட்டக் குழுவினர் எந்தவிதமான சமாதானத்திற்கும் வர மறுத்து வருவதால் தமிழக அரசு எரிச்சலடைந்திருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக தமிழக அரசு அமைத்த நிபுணர் குழுவின் அறிக்கையில், அணு மின் நிலையம் மிகவும் பாதுகாப்பானதாக இருப்பதாக கூறப்பட்டிருந்தது. ஆனால் இந்த அறிக்கையையும் உதயக்குமார் நிராகரித்து விட்டார். இதனால் தமிழக அரசு கோபமடைந்திருப்பதாக கூறப்படுகிறது.
இதையடுத்து அணு மின் நிலையத்தைத் தொடங்க தமிழக அரசு பச்சைக் கொடி காட்டலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இதற்கேற்ப சமீபத்தில் கூடுதல் டிஜிபி ஜார்ஜ் கூடங்குளம் உள்ளிட்ட பகுதிகளை திடீரென ஆய்வு செய்தார். இவர் முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தின்போது தேனி மாவட்டத்தில் ஏற்பட்ட கொந்தளிப்பான நிலையை, போராட்டத்தை பெரும் போலீஸ் பட்டாளத்துடன் சென்று முறியடித்தவர் என்பதால் ஜார்ஜின் வருகை கூடங்குளம் பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் தற்போது மீண்டும் ஜார்ஜ் கூடங்குளத்தில் முகாமிட்டுள்ளார். அவர் போக 10 மாவட்ட எஸ்.பிக்களும் வந்துள்ளனர். பெருமளவில் போலீஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் மீண்டும் பதட்டம் தொற்றிக் கொண்டுள்ளது.
இன்று தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. இந்த பின்னணியில், கூடங்குளத்தில் ஜார்ஜ் மற்றும் பத்து மாவட்ட எஸ்.பிக்கள், போலீஸாரின் வருகை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக