டெஹ்ரான்:அமெரிக்காவும், இஸ்ரேலும் சர்வதேச தீவிரவாதத்தின் உண்மையான சின்னங்கள் என்று இண்டர்நேசனல் இஸ்லாமிக் அவேக்கனிங் கான்ஃப்ரன்ஸ் பொதுச்செயலாளர் அலி அக்பர் விலாயத்தி கூறியுள்ளார். ஈரானுக்கு எதிராக மனரீதியான போரை வலுப்படுத்தும் விதமாக பொய் பிரச்சாரங்களை இந்நாடுகள் நடத்திவருவதாக அவர் குற்றம் சாட்டினார்.
கிழக்கு ஜெருசலம் நோக்கி பேரணியாக செல்லும் ஆசியா நாடுகளைச் சார்ந்த ஃபலஸ்தீன் ஆதரவு தன்னார்வ தொண்டர்களை வரவேற்று அவர்கள் மத்தியில் உரைநிகழ்த்தினார் அலி அக்பர் விலாயத்தி.
மேலும் அவர் கூறியது:கூட்டுப் படுகொலைகளை நடத்தியும், சிலரை தேடிப்பிடித்து கொலைச் செய்தும் எதிரிகளை அழிக்க முயலும் அமெரிக்காவும், இஸ்ரேலும்தான் உண்மையான பயங்கரவாதிகள். ஈரானில் அணு விஞ்ஞானிகளை கொலைச்செய்ய அமெரிக்காவின் அதிபர் வேட்பாளர்கள் பகிரங்கமாக அழைப்புவிடுப்பது இதற்கு ஆதாரமாகும்.
சிரியா மக்களுக்கு உதவுவதற்காக அல்ல, மாறாக மேற்கத்திய நாடுகள் அங்கே பிரச்சனைகளை உருவாக்க முயற்சிக்கிறார்கள். இஸ்ரேலுக்கு எதிரான எதிர்ப்புகளை பலவீனப்படுத்தவும் முயல்கிறார்கள். இவ்வாறு விலாயத்தி கூறினார்.
கிழக்கு ஜெருசலத்தை நோக்கி உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து தன்னார்வ தொண்டர்களின் பேரணி துவங்கியுள்ளது. ஃபலஸ்தீன் பூமி தினமான மார்ச் 30-ஆம் தேதி இப்பேரணிகள் அனைத்தும் ஜெருசலத்தில் சங்கமிக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக