புதுவை துணைநிலை ஆளுநர் இக்பால் சிங் |
சட்டவிரோதப் பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள புனேவைச் சேர்ந்த குதிரைப் பண்ணை அதிபர் ஹசன் அலியுடன் தொடர்புடையதாகப் புகார் கூறப்படும் புதுச்சேரி யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநர் இக்பால் சிங்கிடம் அமலாக்கப் பிரிவினர் விசாரணை நடத்த பிரதமர் அலுவலகம் அனுமதியளித்துள்ளது.
இக்பால் சிங்கிடம் விசாரணை நடத்த அனுமதி கோரி, பிரதமர் அலுவலகத்துக்கு அமலாக்கப் பிரிவு அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆளுநர்கள் தங்களது சட்டப்பூர்வ கடமையை ஆற்றும்போதுதான் அவர்களுக்கு, இதுபோன்ற விசாரணைகளில் இருந்து பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்றும், இந்தக் குறிப்பிட்ட விடயத்தில் அது தேவையில்லை என்றும் அரசு வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
ஆளுநரின் வாதம்
ஆளுநர் இது தொடர்பாக விளக்கம் அளிக்கத் தயாராக இருப்பதாகவும், அமலாக்கப் பிரிவு முன்பு ஆளுநரின் வாக்குமூலத்தை பதிவு செய்வதற்கான நடைமுறைகள் குறித்து தமது அமைச்சகம் பரிசீலித்து வருவதாகவும் திங்களன்று உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்திருந்தார்.
ஹசன் அலி விவகாரம் தொடர்பாக, பிகார் மாநில காங்கிரஸ் தலைவர் அமலேந்து பாண்டேவிடம் அமலாக்கப்பிரிவு விசாரணை நடத்தியபோது இக்பால் சிங்குக்கு உள்ள தொடர்பு குறித்து அவர் வெளிப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
அதாவது, 1997-ம் ஆண்டு அமலேந்து பாண்டேவின் பரிந்துரையின்பேரில் ஹசன் அலிக்கு விரைவாக பாஸ்போர்ட் வழங்க, அப்போது நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த இக்பால் சிங் பரிந்துரை செய்திருக்கிறார்.
அப்போதைய வெளியுறவு அமைச்சர் ஜ.கே. குஜ்ராலுக்கு அவர் அனுப்பிய பரிந்துரையை பாட்னா பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு அனுப்பிவிட்டதாக குஜ்ராலும் இக்பால் சிங்குக்கு பதில் அனுப்பியிருக்கிறார்.
இதை இக்பால் சிங் ஒப்புக்கொண்டிருக்கிறார். ஆனால், ஹசன் அலியைப் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்றும் அவர் கூறியிருக்கிறார்.
தற்போது பிரதமர் அலுவலகம் ஒப்புதல் வழங்கிவிட்ட நிலையில், இக்பால் சிங்கிடம் எந்த நேரமும் அமலாக்கப்பிரிவு விசாரணை நடத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிற குற்றச்சாட்டுகள்
குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருக்கும் இக்பால் சிங், உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்று புதுச்சேரி அதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
இப் பிரச்சினை தொடர்பாக புதுவை அதிமுக செயலரான அன்பழகன் கூறுகையில், அரசியல் சட்டத்தின் மகத்துவத்தைக் காப்பாற்ற வேண்டுமானால், இக்பால் சிங்கை குடியரசுத் தலைவர் உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், 2009-ம் ஆண்டு துணை நிலை ஆளுநராகப் பதவியேற்றது முதல், இக்பால் சிங் தனது அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படு்த்தி வருவதாகவும் அன்பழகன் குற்றம் சாட்டியுள்ளார்.
காரைக்காலில் ஆளுநரின் உறவினர்கள் மருத்துவக் கல்லூரி அமைப்பதற்காக அமைச்சரவை ஒப்புதல் இல்லாமல் புதுவை அரசு தடையில்லாச் சான்றிதழ் வழங்கியுள்ளதாக அன்பழகன் புகார் கூறியுள்ளார்.
அத்துடன் புதுவை அரியாங்குப்பத்தில் சீக்கியர்களின் வழிபாட்டுத்தலமான குருத்வாரா கட்டுவதற்காக, இக்பால் சிங் தலையீட்டால் 40 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டதாகவும், அதை எதிர்த்து பெரும் போராட்டங்கள் நடந்ததால் அந்த ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதாகவும் அன்பழகன் குறிப்பிட்டுள்ளார்.
bbc
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக